ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இந்தியா ஏ முன்னிலை
|2-வது நாள் முடிவில் சாய் சுதர்சன் 96 ரன்களுடனும், படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேக்கே,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய ஏ அணி, அந்நாட்டின் ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ, ஆஸ்திரேலிய ஏ அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா ஏ முதல் இன்னிங்சில் 107 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக படிக்கல் 36 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பிரெண்டன் டோகெட் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 195 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மெக்ஸ்வீனி 39 ரன்கள் அடிக்க இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் 88 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய ஏ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன கேப்டன் கெய்க்வாட் 5 ரன்களிலும், அபிமன்யூ ஈஸ்வரன் 12 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த சாய் சுதர்சன் - படிக்கல் இணை சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றது.
2-வது நாளில் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்ட இருவரும் அரைசதம் கடந்துள்ளனர். 2-வது நாள் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 208 ரன்கள் அடித்துள்ளது. சாய் சுதர்சன் 96 ரன்களுடனும், படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 120 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.