< Back
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து
கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: இலங்கையை எளிதில் வீழ்த்திய நியூசிலாந்து

தினத்தந்தி
|
5 Jan 2025 10:27 AM IST

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

வெலிங்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நியூசிலாந்தின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விஷ்வா பெர்னண்டோ 56 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா - வில் யங் களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ரச்சின் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சாப்மேன் நிதானமாக விளையாட, வில் யங் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். வெறும் 26.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த நியூசிலாந்து 180 ரன்கள் அடித்து எளிதில் வெற்றி பெற்றது. வில் யங் 90 ரன்களுடனும், சாப்மேன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மேட் ஹென்ரி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்