< Back
கிரிக்கெட்
சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த அமெரிக்கா
கிரிக்கெட்

சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த அமெரிக்கா

தினத்தந்தி
|
7 Jun 2024 1:21 AM IST

சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

டல்லாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆன பாகிஸ்தான், அறிமுக அணியான அமெரிக்காவுடன் விளையாடியது. டல்லாஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது.தொடக்கத்தில் முகமது ரிஸ்வான் 9 ரன்களும் , உஸ்மான் கான் 3ரன்களும் , பகர் ஜமான் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் பாபர் அசாம் , ஷதாப் கான் இருவரும் இணைந்து நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 44 ரன்களும் , ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் இப்திகார் அகமது , ஷாஹீன் அப்ரிடி அதிரடியாக ரன்கள் குவித்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு159 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 160 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஸ்டீவன் டெய்லர்,மோனக் படேல் களமிறங்கினர். தொடக்கத்தில் அமெரிக்கா அணி வீரர் ஸ்டீவன் டெய்லர் 12 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் அதிரடி காட்டினார். மோனக் படேல், ஆண்ட்ரிஸ் கௌஸ் இணைந்து சிறப்பாக விளையாடினர்.

தொடர்ந்து அதிரடி காட்டி பாகிஸ்தான் பந்துவீச்சை பவுண்டரிக்கு விரட்டினர். மறுபுறம் சிறப்பாக விளையாடிய மோனக் படேல் அரைசதமடித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆண்ட்ரிஸ் கௌஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் , ஜோன்ஸ் , நிதிஸ் அதிரடியால் அமெரிக்கா அணி 14 ரன்கள் எடுத்தது.இதனால் போட்டி டிரா ஆனது. போட்டி டிரா ஆனதால் வெற்றியாரை முடிவு செய்ய சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் அமெரிக்கா அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜோன்ஸ் , ஹர்மித் சிங் களமிறங்கினர். அந்த ஓவரை பாகிஸ்தான் அணியின் முகமது அமீர் வீசினார்.

இதில் சிறப்பாக விளையாடிய அமெரிக்கா அணி 6 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 19 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 13 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது . இதனால் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமெரிக்கா அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்