சரியான குதிரை அமையாவிட்டால், எதுவும் சாதிக்க முடியாது - குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா
|பாரீஸ் ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் தனிநபர் டிரஸ்சாஜ் பிரிவுக்கு இந்தியாவில் இருந்து அனுஷ் அகர்வாலா தகுதி பெற்றுள்ளார்.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இதில் குதிரையேற்றம் தனிநபர் டிரஸ்சாஜ் பிரிவுக்கு இந்தியாவில் இருந்து அனுஷ் அகர்வாலா தகுதி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் இரண்டு பதக்கம் வென்ற கொல்கத்தாவைச் சேர்ந்த 24 வயதான அனுஷ் அகர்வாலா தனது குதிரை சர் கராமெலோ குறித்து கூறியதாவது:-
குதிரையேற்ற பந்தயத்தில் ஜொலிக்க வேண்டும் என்றால் நீங்கள் நல்ல ரைடராகவும், சிறந்த பயிற்சியாளராகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதே சமயத்தில் உங்களுக்கு ஏற்ற சரியான குதிரை அமையாவிட்டால், எதுவும் சாதிக்க முடியாது.
குதிரைகளுடன் உறவுகளை உருவாக்குவது என்பது மக்களுடன் உறவுகளை பேணுவது போன்றது தான். அதற்கு நிறைய நேரம் எடுக்கும். அவற்றுடன் நட்புறவை சில மணி நேரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கொண்டு வர முடியாது. அதிக நேரம் அதனுடன் செலவிட வேண்டி இருக்கும். அப்போது தான் நம்முடன் எளிதாக பழகத் தொடங்கும்.
என்னுடைய குதிரை எப்போதும் 100 சதவீத கவனத்தை தன்மீது செலுத்த வேண்டும் என்று விரும்பும். அது தான் அதற்கு முக்கியமான விஷயம். பின்பக்கம் பாசமுடன் தடவிக்கொடுப்பதை விரும்பும். ஒரு குதிரையாக இருந்தாலும் மனிதர்களுடன் தொடர்பில் இருப்பது பிடிக்கும்.
டிரஸ்சாஜ் பந்தயத்தில் குதிரை தான் அணியில் முக்கியமான நபர் என்று சொல்வேன். இந்த போட்டியில் உண்மையிலேயே என்னை கவர்ந்தது எதுவெனில், எவ்வளவு சக்தியை பயன்படுத்தினாலும், பார்க்க நேர்த்தியாக இருக்க வேண்டும். அதுவும் குதிரையுடன் முழுமையாக இணைந்து செயல்பட வேண்டும். இந்த போட்டி குதிரைக்கு உடல் அளவிலும், மனதளவிலும் கடும் சவாலாக இருக்கும்.
மைதானத்தில் குதிரை மீது சவாரி செய்யும்போது, பறப்பது போன்ற உணர்வை தரும். உலகில் இதைவிட சிறந்த உணர்வு எதுவும் இருக்க முடியாது. குதிரையை பார்க்கும்போது, அது என்ன நிலையில் இருக்கிறது, அதற்கு என்ன தேவை என்பதை என்னால் உணர முடியும். அது நம்பிக்கை மற்றும் நட்பாகும். இது இருக்கும் பட்சத்தில் வார்த்தைகள் தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.