ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் நீடா அம்பானி தேர்வு
|சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக மீண்டும் நீட்டா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நாளை மறுநாள் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், 150க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்த சூழலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142-வது கூட்டம் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக சேவகருமான நீடா அம்பானி, 100 சதவீத வாக்குகளுடன் இந்தியாவின் உறுப்பினராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நீடா அம்பானி கூறுகையில், "சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் உள்ள நண்பர்கள் அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையின் தருணத்தை நான் ஒவ்வொரு இந்தியருடனும் பகிர்ந்து கொள்கிறேன், மேலும் இந்தியாவிலும் உலகெங்கிலும் ஒலிம்பிக் இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சிகளை தொடர எதிர்நோக்குகிறேன்" என்று அவர் கூறினார்.
முன்னதாக 2016-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தனிநபர் உறுப்பினராக முதன்முதலில் நீடா அம்பானி தேர்ந்தெடுக்கப்பட்டார்.