தோனி, கோலி ஆகியோருடன் என்னை ஒப்பிட்டு பார்க்க முயற்சித்ததில்லை - நீரஜ் சோப்ரா
|33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது.
புது டெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வருகிற 26-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதன் தொடக்க விழா முதல்முறையாக மைதானத்துக்கு வெளியே, அதாவது சென் நதியில் வித்தியாசமான முறையில் நடக்கிறது
கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். நடப்பு உலக சாம்பியனான அவர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, 'நீங்கள் உங்கள் விளையாட்டை மதித்து, அதில் திருப்தி அடைவதாக உணர்ந்தால், வேறு எதுவும் ஒரு பொருட்டல்ல. தோகா டைமண்ட் லீக் போட்டியின் போது இந்தியாவில் நான் எவ்வளவு பிரபலம் என்று கேட்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி மற்றும் தோனி போன்றவர்களுடன் என்னை ஒப்பிட்டு பார்க்க நான் ஒரு போதும் முயற்சித்ததில்லை. ஏனெனில் இந்தியாவில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதை நன்கு அறிவேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு மக்கள் என்னை அதிக அடையாளம் கண்டு கொள்கிறார்கள். எனது பிரபலத்தை கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில் அப்பட்டமான வித்தியாசம் இருப்பது எனக்கு தெரியும்.
நமது நாட்டில் எல்லா பகுதிகளிலும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. ஆனால், ஈட்டி எறிதல் பயிற்சியில் மக்கள் ஈடுபடுவது கிடையாது. எனது விளையாட்டை பிரபலப்படுத்த எந்த குறுக்கு வழியையும் நான் விரும்பவில்லை. கடின உழைப்பு மற்றும் முயற்சியால் என்னுடைய விளையாட்டு பிரபலமடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
டைமண்ட் லீக் போன்று இந்தியாவில் ஈட்டி எறிதலை அடிப்படையாக கொண்டு அதிக போட்டிகள் நடத்தப்பட்டால் மக்கள் விளையாட்டை பார்ப்பதிலும், அதனை பின்பற்றுவதிலும் ஆர்வம் காட்டுவார்கள். இந்தியாவில் திறமையான ஈட்டி எறிதல் வீரர்கள் இருப்பதால் தேசிய அளவிலான லீக் போட் டிகள் நடத்த வேண்டும். இது இந்தியாவில் விளையாட்டை ஊக்குவிக்க உதவும்'. இவ்வாறு அவர் கூறினார்.