< Back
சிறப்பு பக்கம்
தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
சிறப்பு பக்கம்

தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

தினத்தந்தி
|
23 July 2023 12:41 PM GMT

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசே 104 என்ற பிரத்யேக டெலிபோன் எண்களை வழங்கி உள்ளது.

இந்தியாவில் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் கிட்டத்தட்ட 35 சதவீதத்தினர் குடும்ப பிரச்சினை காரணமாகவும், 25 சதவீதத்தினர் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவும், எஞ்சியோர் வாழ்வாதாரத்தை இழந்ததன் காரணத்தினாலும், கடன் தொல்லையாலும் இந்த துயர முடிவை எடுக்கிறார்கள்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். உயர் படிப்பான ஐ.பி.எஸ். படித்த, ஆளுமைமிக்க ஒரு போலீஸ் அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயகுமார் ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்கிறார்கள். இந்த மன அழுத்தமே அவரை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது. மன அழுத்தம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம், இப்போது என்ன புதிதாக ஓ.சி.டி. பாதிப்பு என்கிறார்களே? என்பது தான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

சி.டி. மன அழுத்தம் என்றால் என்ன? அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் என்ன? என்பது பற்றி இன்று பார்ப்போம். மன அழுத்தம் என்பது 2 வகையானது. ஒன்று தற்காலிகமான மன அழுத்தம். தேர்விலோ அல்லது வேறு எதாவது செயல்களில் தோல்வி அடைந்து விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பாதிப்பு சில காலம் இருக்கும். பின்னர் மறைந்து போகும். ஒருவர் பணம் கடன் வாங்கியிருக்கிறார், அதனை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அல்லது யாராவது ஒருவர் அவரை ஏமாற்றிவிட்டார். இதனால் ஏற்படும் மன அழுத்தமும் தற்காலிகமானது தான். அவை அனைத்தும் சரியாகி விடும்.

மற்றொன்று ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்தம். இந்த பாதிப்பு சற்று தீவிரமானதே. Obsessive Compulsive Disorder என்பதன் சுருக்கம் தான் ஓ.சி.டி. இந்த மன அழுத்த பாதிப்பு என்பது புதிய நோய் அல்ல. ஏற்கனவே இருப்பது தான். டி.ஐ.ஜி. ஒருவர் தற்கொலையால் ஓ.சி.டி. எனப்படும் வார்த்தை அதிகமாக பேசப்படுகிறது. மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓ.சி.டி. பாதிப்பு. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. செரட்டோனின் குறையும் போது சிந்தனையை கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாக குறைகிறது. சிந்தனை என்பது நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது. ஆதலால் இது சிந்தனையை வெகுவாக பாதிக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சந்தேகங்களும், கவலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். வீட்டுக்கதவை பூட்டினோமா, அடுப்பை அணைத்தோமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். பின்னர் அந்த செயல்களை செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம். ஆனால் ஓ.சி.டி. பாதிப்பு உள்ளவர்கள் அதனை பற்றி யோசித்து, யோசித்தே அன்றைய இரவை தூங்காமல் வீணடித்து விடுவர். பணம் சரியாக இருக்கிறதா என்று தொடர்ந்து எண்ணிக் கொண்டே இருப்பார்கள். பொருட்களை கூட வெறும் கையால் தொட பயப்படுவார்கள். சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொண்டே இருப்பார்கள். உதாரணமாக 12 முறை கைகழுவினால் தான் சுத்தமாகும், இல்லையெனில் கிருமிகள் போகாது என எண்ணிக் கொள்வர். வேதனை என்னவென்றால் இவர்கள் 12 முறை கைகழுவினாலும் ஒருமுறை குறைவாக கழுவி விட்டதாக எண்ணி வருந்துவர். அந்த எண்ணம் அவர்களின் அன்றைய நாளையே விழுங்கிவிடும். நம்மை யாராவது தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி நாம் பத்திரமாக இருக்கிறோமா, நம் சொந்தங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் ஓசிடி பிரச்சினை உள்ளவர்களுக்கு திருப்தி என்னும் நிலையே இருக்காது. உடலில் தலைவலி, நெஞ்சு வலி, கண் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் வந்தால் நமக்கே தெரிந்து விடும். ஆனால் மன அழுத்தத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் போது தற்கொலை செய்த போலீஸ் அதிகாரி திடகாத்திரமாக, நன்றாகத் தான் இருந்தார். ஆனால் அவருக்கு இருந்த தீவிர மன அழுத்தம் உடன் இருந்தவர்களுக்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

தற்கொலை என்பது ஒரு தவறான செயல். கோழைத்தனமானது. இந்த உடலை உருவாக்கியது கடவுள். அந்த உடலை அழிப்பதற்கு எந்தவிதமான உரிமையும் நமக்கு கிடையாது. யாருக்கு தான் கவலையில்லை. ரோட்டில் திரியும் யாசகர் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கவலைகள் இருக்கிறது. கவலை என்பது மனிதனுக்கு வருவதும், போவதுமாக இருக்கும். அந்த கவலைகளில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தம் உருவாகி நம்மையே அது அழித்து விடும். தற்கொலை செய்து கொள்பவர்கள் அவரை பற்றி மட்டுமே கவலைப்படக்கூடாது. நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகள், மனைவி, பெற்றோரை பற்றியும் எண்ணி பார்க்க வேண்டும். அந்த ஒரு நிமிட எண்ணம் தான் உயிரை காவு வாங்கக் கூடியது. அந்த நிமிடத்தில் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். மனதில் சந்தோஷம் யாருக்கு அதிகம் இருக்கிறதோ, அவர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

மனதில் கவலை இருந்தால் வெற்றி பெற முடியாது. மனதில் இருக்கும் சுமைகளை யாரிடமாவது சொல்ல வேண்டும். நண்பர்களிடமோ, திருமணம் ஆனவர்கள் மனைவியிடமோ மனச்சுமையை இறக்கி வைத்து விட வேண்டும். வீட்டுக்கு சென்றதும் அலுவலகத்தில் நடந்த அனைத்து விவரங்களையும் மனைவியிடம் சொல்ல பழக வேண்டும். நல்லது, கெட்டது என அனைத்து விவரங்களையும் அந்த வாழ்க்கை துணைவியாரிடம் சொல்ல வேண்டும். பெண்களும் அதேபோல் அன்று நடந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். எதையும் மனதில் பூட்டி அடக்கி வைக்கக் கூடாது. வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் என்றால் அவர்களுக்கு மன அழுத்தம் வருவது குறைவு. பெற்றோர், மனைவி, மக்களிடம் கூற முடியாத விஷயங்களை, ரகசியங்களை நண்பர்களிடம் தான் சொல்லியாக வேண்டும். நல்ல நண்பர்களிடம் அதனை சொல்லும் போது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் கவலையை மறக்கிறேன் என கூறிக் கொண்டு மது குடிப்பது, சிகரெட் குடிப்பது என போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். நாளடைவில் அதுவே தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடியதாக அமைந்து விடும். அதனால் கவலையை மறக்க போதையை தேடுவது தவறான செயல்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்க ளுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசே 104 என்ற பிரத்யேக டெலிபோன் எண்களை வழங்கி உள்ளது. அந்த எண்க ளுக்கு போன் செய்து கவுன்சிலிங் பெற்றுக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் குறைபாடுகளை, கவலைகளை ஒரு டைரியில் எழுதி பாருங்கள். எனக்கு மனம் சரியில்லை, அலுவலகத்தில் ஒருவர் சத்தம் போட்டுவிட்டார், என்னை ஒருவர் ஏமாற்றி விட்டார் என எழுதலாம். பிரச்சினைகளை எழுதினாலே 50 சதவீதம் மன அழுத்தம் குறைந்து விடும். தினமும் டைரியில் சந்தோஷத்தையும் எழுதுங்கள், பிரச்சினைகளையும் எழுதுங்கள். காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்பதை சுருக்கமாக எழுதினீர்கள் என்றால் அதனை திரும்பி பார்க்கும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனஅழுத்தமாக உள்ளது, தற்கொலை செய்து கொள்ளலாம் போல் எண்ணம் தோன்றுகிறது என்று எழுதலாம். அதனை மனைவியோ, குழந்தைகளோ பார்க்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து அவர்களின் மனதை மாற்றலாம்.

மன நல மருத்துவரிடம் சென்றால் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் அளிப்பார். உங்களை இருக்கையில் அமர வைத்து மருத்துவர் சில கேள்விகளை கேட்பார். நீங்கள் பதில் அளித்துக் கொண்டே வருவீர்கள். இந்த கவுன்சிலிங் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். கவுன்சிலிங்கில் பாதிக்கப்பட்டவரின் மனநிலையை மருத்துவர் அறிந்து கொள்வார். அதன்பிறகு உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மன நல சிகிச்சையை மருத்துவர் அளிப்பார். இந்த சிகிச்சைக்கு நல்ல மருந்துகளும் உள்ளன. அவற்றை சாப்பிட பரிந்துரைப்பார். சில மாதங்கள் மருத்துவர் சொல்வதை தொடர்ந்து கடைபிடித்தால் மன அழுத்தம் நீங்கி விடும். இதற்கு சிறந்த மன நல மருத்துவரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவரிடமே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். அடிக்கடி மருத்துவரை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. இதுதவிர நீங்களாகவே சுயமருத்துவம் செய்யக்கூடாது. இணையத்தில் பார்த்தோ, யூடியூப்பில் பார்த்தோ இஷ்டத்துக்கு மருந்து சாப்பிடக்கூடாது. உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தரும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மனநல மருத்துவத்தில் 5 விதமான நிபுணர்கள் உள்ளனர். அதில் ஒரு சிகிச்சையாக கரண்ட் ஷாக் கொடுப்பார்கள். அந்த ஷாக் கொடுத்ததும் பாதிக்கப்பட்டவர் 30 நிமிடம் வரை அயர்ந்து தூங்குவார்கள். இந்த தூக்கமும் மன நல பாதிப்பை குறைக்கும். மற்றொரு மருத்துவர் கவுன்சிலிங் அளித்து சிறந்த மாத்திரைகளை உட்கொள்ளவும் பரிந்துரைப்பார். இப்படி ஒவ்வொருவரும் வேறுவிதமான சிகிச்சைகளை அளிப்பர். மன அழுத்தத்தில் தூக்கம் முக்கிய இடத்தை பெறுகிறது.

தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரம். காலை முதல் மாலை வரை வியர்வை சிந்தி உழைத்து விட்டு இரவில் வந்து படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். தூக்கம் என்பது தானாகவே வரக்கூடியது. வரவைக்க கூடியது அல்ல. தூக்கத்தை வரவைக்க மாத்திரை சாப்பிட்டால் நாளடைவில் அதுவே மன அழுத்தத்துக்கு காரணமாகி விடும். உழைத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் வெது, வெதுப்பான சுடுநீரில் குளியுங்கள். இரவில் தூங்க செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு உணவு சாப்பிடுங்கள். டி.வி. பார்ப்பதை தவிருங்கள். பின்னர் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு படுத்தோம் என்றால் தானாக தூக்கம் வரும். இனிமையான இசையும் தூக்கத்தை கொடுக்கும். தூங்கும் அறையில் மின்விளக்கை ஒளிர விடாதீர்கள். இருள்சூழ்ந்த அறையில் தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும். இதேபோல மதியம் சாப்பாடு முடிந்ததும் 15 நிமிடம் தூங்கி பாருங்கள். முன்பு பணியாற்றிய உற்சாகம் அதன்பிறகும் கிடைக்கும். சீனர்கள் இந்த மதிய உறக்க முறையை கடைபிடித்து வருகிறார்கள். உற்சாகமாகவும் பணியாற்றுகிறார்கள்.

வயதானவர்கள்: வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விபரீத எண்ணங்கள் தோன்றும். அந்த எண்ணங்களில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இனிய இசை கேட்கலாம். கோவிலுக்கு சென்று மன அமைதி பெறலாம். உறவினர் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி மகிழலாம். தினமும் நண்பர்களுடன் கூடி நேரத்தை செலவிடலாம்.போலீஸ்காரர்கள் என்றால் எப்போதும் சீரியசாக இருக்க வேண்டும் என்று இல்லை. டென்னிஸ், கால்பந்து விளையாடுங்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை எடுத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு பிசியான மனிதர். அவர் பேசி, பேசி மற்றவர்கள் மனதில் சந்தோஷத்தை உருவாக்கினார். அதன் மூலம் அவரும் சந்தோஷம் அடைந்தார். மற்றவர்களை பார்க்கும் போது சிறிய புன்சிரிப்பு செய்தீர்கள் என்றால் மகிழ்ச்சியானது உங்களிடம் நிரந்தரமாக தங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மனதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

குழந்தைகள்: குழந்தைகளுக்கு பெற்றோர் அவர்களது சிறு வயதிலேயே நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். மனதில் தைரியத்தை, தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அந்த குழந்தைகள் பெரியவர்களாகும் போது தைரியமாக இருப்பது மட்டுமல்லாமல் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வர். அவர்களுக்கு தியானம் செய்வதையும், இறைவனை துதிப்பதையும் சொல்லிக் கொடுங்கள். அதற்கு மாறாக அவர்கள் முன்பு கணவனும், மனைவியும் சண்டையிட்டு வந்தால் பெரியவர்கள் ஆனதும் நாமும் இப்படித்தான் சண்டையிட வேண்டுமோ என்று எண்ணத் தோன்றும். அவர்களுக்கு சிறுவயதிலேயே மன அழுத்தம் ஏற்பட அது காரணமாகி விடும். சினிமாவில் வரும் கொடூர காட்சிகளை குழந்தைகள் பார்ப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். எனவே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவது அவர்களின் பெற்றோர் கையில் தான் உள்ளது.தியானம் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் தினந்தோறும் காலையில் தியானம் செய்வதை பழக்கமாக கடைபிடியுங்கள்.

மேலும் செய்திகள்