< Back
சிறப்பு பக்கம்
இயற்கை எழில் சூழ்ந்த திருமலை கோவில்
சிறப்பு பக்கம்

இயற்கை எழில் சூழ்ந்த திருமலை கோவில்

தினத்தந்தி
|
3 Sept 2023 11:18 AM IST

தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் தலம் திருமலை முத்துக்குமாரசாமி கோவில்.

திருமலை கோவில் தென்காசியில் இருந்து வடமேற்கே 18 கி.மீ. தொலைவிலும், செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவிலும் பண்பொழி (பைம்பொழில்) என்ற இயற்கை எழில் சூழ்ந்த அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது. மூலவரான முருகப்பெருமானை முத்துக்குமாரசாமி என்று அழைக்கிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு குன்றில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள இந்த கோவில் தேவார பாடல்பெற்ற தலம் ஆகும்.

முற்காலத்தில் இந்த திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. அதற்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் பூஜையை முடித்துவிட்டு அவர் அங்குள்ள புளியமரத்தின் அடியில் ஓய்வுக்காக படுத்திருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான், "பட்டரே இந்த மலை எனக்கு சொந்தமானது. இங்கிருந்து சற்று தொலைவில் அச்சன்கோவிலுக்கு போகிற வழியில் உள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் நான் மணலில் சிலை வடிவில் புதைந்துஇருக்கிறேன். நீர் அங்கு சென்று, எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்லும் ஒரு குழியை தோண்டிப்பார்த்தால் அங்கு எனது சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் வைத்து பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்" என்று கூறினார், அத்துடன், இதே தகவலை பந்தள மன்னரின் கனவிலும் தெரிவித்து இருப்பதாக கூறி மறைந்தார்.

இதைத்தொடர்ந்து பூவன் பட்டரும், பந்தளமன்னரும் முருகப்பெருமான் கனவில் வந்து சொன்ன அந்த இடத்துக்கு சென்று புதைந்து கிடந்த சிலையை பயபக்தியுடன் எடுத்து திருமலைக்கு கொண்டு வந்து குவளை பொய்கையின் அருகேயுள்ள புளியமரத்தின் அடியில் வைத்து பூஜைகள் செய்தனர். பிற்காலத்தில் பந்தளத்தை ஆண்ட மன்னர்கள், பக்தர்கள் மலைக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவதற்கு வசதியாக படிகள் அமைக்கவும், கோவிலை எழுப்பவும் ஏற்பாடு செய்தனர்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நெல்லையம்பலம் மயிலப்பன் என்ற முருக பக்தர் இப்போதுள்ள ஆலயத்தை கட்டத்தொடங்கி மானியங்கள் வழங்கியதாகவும், அதன்பிறகு சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர், அச்சன்புதூர் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்து பின்னர் துறவியாக மாறிய சிவகாமி பரதேசி அம்மையார் ஆகியோர் இந்த கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இந்த கோவிலில் குமாரசாமி கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் காளியம்மன் சன்னதி அமைந்துள்ளது.

கடல் மட்டத்தில் இருந்து 520 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல 624 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஏறிச்செல்லும் போது வழியில் இடும்பன், விநாயகருக்கு தனிக்கோவில்கள் உள்ளன. இந்த படிக்கட்டுகள் ஸ்கந்தகோஷ்ட பித்ருக்கள் வசிக்கும் தேவ படிக்கட்டுகள் என கூறப்படுவதால், இந்த தலத்துக்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சந்ததிகளுக்கு சிறப்பான வாழ்வு அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அடிவாரத்தில் இருந்து கோவில் வரை மலையில் சாலை அமைக்கப்பட்டது. பாறையை வெட்டி சாலை அமைத்து இருக்கிறார்கள். இதனால் பக்தர்கள் மலை உச்சி வரை வாகனங்களில் செல்ல முடியும். அடிவாரத்திலும், மலை உச்சியிலும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி உள்ளது. இந்த கோவிலில் தங்கத்தேர் உள்ளது.

சிறந்த ஆன்மிக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கும் இந்த திருமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

மலை உச்சியில் நின்று சுற்றிலும் நோக்கினால் பஞ்சுப்பொதி போல் மேகங்கள் தவழ்ந்து செல்லும் வானுயர்ந்த மலைகள், தென்னந்தோப்புகள், பசுமை போர்த்திய வயல் வெளிகள், அவற்றுக்கு நடுவே தென்படும் கிராமங்கள் உடலையும், உள்ளத்தையும் தழுவிச் செல்லும் குளிர்காற்று என்று கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இங்கிருந்து நோக்கினால் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள அடவி நயினார் அணை தெரியும். முருகனை தரிசித்துவிட்டு புத்துணர்ச்சி அளிக்கும் இந்த இயற்கை அழகை ரசிப்பது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

கோவிலின் பின்புறம் அஷ்டபத்மகுளம் என்ற பூஞ்சுனை உள்ளது. இந்த குளத்தில் தினம் ஒரு குவளை மலர் பூத்ததாகவும் அதை அங்கிருந்து சப்த கன்னிமார் ஏழு பேரும் எடுத்துச்சென்று குமாரசாமியை பூஜித்ததாகவும் கூறப்படுகிறது.

சப்த கன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும். ஆனால் இது முருகன் கோவில் என்ற போதிலும் இங்குள்ள தீர்த்தக்கரையில் சப்த கன்னியர் சிலைகள் இருப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களை கொண்டது. இந்த கிரணங்கள் அனைத்தும் இந்த மலையில் படுவதால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவது மிகவும் நல்லது என்ற நம்பிக்கை காலம்காலமாக இருந்து வருகிறது.

சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் என்பது திருமலைக்கோவில் அமைந்துள்ள இந்த குன்றுதான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த கோவிலில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

சித்திரை மாதம் நடைபெறும் படி திருவிழா, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகை தேர்த்திருவிழா, தைப்பூசம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகின்றன.

இந்த திருமலை கோவிலை சுற்றித்தான் கேரள எல்லைக்குள் அய்யப்பன் ஸ்தலங்களான அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழை ஆகியவை அமைந்துள்ளன.

சிலையின் மூக்கில் காயம்

இந்த கோவிலில் உள்ள முருகன் சிலையின் மூக்கில் சிறிய காயம் போன்று இருப்பதாகவும், மண்ணில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்த போது இது ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்றும், பெண் குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்றும் பெயர் வைக்கும் வழக்கம் உள்ளது.

அருணகிரிநாதர், தண்டபாணி சுவாமிகள் ஆகியோர் இத்தலத்தில் உள்ள முருகனைப்பற்றி மனமுருக பாடி இருக்கிறார்கள். 'திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்', 'திருமலை முருகன் குறவஞ்சி', 'திருமலை முருகன் அந்தாதி' போன்ற நூல்கள் இங்குள்ள முருகப்பெருமானை போற்றி பாடப்பட்ட நூல்கள் ஆகும்.

சினிமா படப்பிடிப்புகள்

இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோவில் சிறந்த 'ஷூட்டிங் ஸ்பாட்' ஆகவும் விளங்குகிறது. திருமலை கோவிலிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடிக்கடி சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலும், மலைகள் சூழ்ந்த பின்னணியும் மிகவும் அழகாக இருக்கும் என்பதால் கோவிலுக்கு அருகில் உள்ள சின்னமலை என்ற பாறையில் நிறைய பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கின்றன.

1969-ம் ஆண்டு முத்துராமன்-கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான 'கண்ணே பாப்பா' படத்தில் இடம் பெற்ற "தென்றலில் ஆடை பின்ன" என்ற பாடலின் சில காட்சிகள் திருமலை கோவிலில் படமாக்கப்பட்டன.

பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'புன்னகை மன்னன்' படத்தில் நடிகை ரேவதி பாடுவதாக அமைந்த "கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்" என்ற பாடல் இந்த கோவிலில்தான் படமாக்கப்பட்டது. சமீபத்தில் அல்லு அர்ஜூன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தின் சில காட்சிகளை இந்த கோவிலிலும், மலை அடிவாரத்திலும் படமாக்கினார்கள்.

விஜய்-சுவாதி நடித்த 'செல்வா' படத்தில் இடம் பெற்ற "பொட்டபுள்ள மனசு" என்ற பாடல் காட்சி சின்னமலையில் படமாக்கப்பட்டது.

பிரபு நடித்த 'திருநெல்வேலி', விஜயகாந்த் நடித்த 'வேலுண்டு வினையில்லை', முரளி நடித்த 'தினந்தோறும்', சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா', விஜய் சேதுபதி நடித்த 'சிந்துபாத்' உள்ளிட்ட பல படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடந்துள்ளன.

அர்ஜூன் நடித்த 'ஜென்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற "உசிலம்பட்டி பெண்குட்டி" என்ற பாடலின் சில காட்சிகள் அருகில் உள்ள பாறையில்தான் படமாக்கப்பட்டன.

மேலும் செய்திகள்