அந்த 26 நாட்கள்...
|‘‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’’ என்று சொல்வார்கள். அது உண்மைதான்... வெயிலோ, மழையோ இல்லாமல் மனிதன் வாழமுடியாது. ஆனால் இந்த இரண்டுமே அளவுக்கு அதிகமாகும் போது பெரும் தொல்லைதான்.
கேரளா, கர்நாடகம், மராட்டியம் போன்ற மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு மழைவளம் குறைந்த மாநிலம். தண்ணீருக்காக ஏங்கும் நிலையிலேயே நாம் இருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தலைநகர் சென்னையில் 104.9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்ததால் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. இது 1918-ம் ஆண்டுக்கு (108.8 செ.மீ.) பிறகு பெய்த அதிக மழை ஆகும். இதனால் சலிப்படைந்த மக்கள் மழை எப்போது நிற்கும்? வெயிலை எப்போது பார்ப்போம்? என்று எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள்.
இப்படி எப்போதாவது ஒருமுறை அபூர்வமாகத்தான் அதிக மழை பெய்து சில சங்கடங்களை ஏற்படுத்துகிறது.
ஆனால் சூரிய பகவானை பொறுத்தமட்டில் குறை வைப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெயில் வறுத்து எடுத்து விடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு வெயில் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. சில நாட்களே பெய்யும் அதிக மழையைக்கூட ஓரளவு சமாளித்து விடலாம். ஆனால் மாதக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பது மிகவும் கஷ்டமானது. காலநிலை மாற்றத்தால் எப்போதாவது சில ஆண்டுகள் கோடை காலத்தில் அவ்வப்போது மழை பெய்கிறது.
தமிழகம் மழைக்காலத்தை தவிர மற்ற மாதங்கள் வெப்ப மண்டல காலநிலையை கொண்டது. இங்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் கோடைகாலம். டிசம்பர் முதல் மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வரை குளிர் காலமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழைக்காலமாகவும் உள்ளது. பொதுவாக பிப்ரவரி முதல் ஜூன் வரை வறண்ட வானிலை நிலவும். இந்த மாதங்களில் எப்போதாவது மழை பெய்யும். சில சமயங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்யும்.
தமிழகத்தின் சராசரி மழையளவு 94.5 செ.மீ. இதில் வடகிழக்கு பருவமழை மூலம் 48 சதவீத மழையும், தென்மேற்கு பருவமழை மூலம் 32 சதவீத மழையும், மற்ற சமயங்களில் 20 சதவீத மழையும் பெய்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் போது, இந்த ஆண்டு வெயிலை எப்படி சமாளிக்கப்போகிறோம்? குடிநீர் பற்றாக்குறை ஏற்படுமா? மின்சாரம் இல்லாவிட்டால் தூங்க முடியாதே! என்ற பயம் எல்லோருக்கும் வந்துவிடும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், குழந்தைகளை சமாளிப்பது பெற்றோருக்கு பெரும் சவால்தான்.
கோடை காலத்தில் மே மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியதுமே வெயில் தனது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டது. மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர் போன்ற நகரங்களில் வெயிலின் அளவு ஏற்கனவே 103 டிகிரியை (பாரன்ஹீட்) தாண்டிவிட்டது.
தமிழ்நாட்டில் வெயில் பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு ஆந்திரா மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வெயில் வறுத்து எடுக்கிறது.
இந்த நிலையில், 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் 'கத்திரி வெயில்' வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. 29-ந்தேதி 'அக்னி நட்சத்திரம்' விடைபெறும். இந்த 26 நாட்களும் அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிக்கும். வெளியே தலைகாட்ட முடியாது. அதன்பிறகு வெயில் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.
பொதுவாக கோடை காலத்தில் வேலூர், சேலம், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருந்தாலும், மாலையில் கடற்காற்று வீசும் என்பதால் வெப்பத்தின் தாக்கம் உள்மாவட்டங்களை விட சற்று குறைவாகவே இருக்கும்.
கேரளாவில் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்பதால் அதன்பிறகு தமிழகத்தில் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் கேரளாவையொட்டி அமைந்துள்ள மாவட்டங்களில் சாரல் மழை பெய்யத் தொடங்கிவிடும். கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் அதிக மழை பெய்யும். இதனால் அந்த மாவட்டங்களில் ஜூன் மாதம் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும்.
ஆனால் மற்ற மாவட்டங்களின் நிலைமை அப்படி அல்ல. 'அக்னி நட்சத்திரம்' முடிந்த பிறகு வெயிலின் அளவு சற்று குறைந்தாலும், ஆகஸ்டு வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
இதற்கு முன் சில ஆண்டுகளில், 'அக்னி நட்சத்திரம்' முடிந்த பிறகுதான் வெயிலின் அளவு அதிகரித்து இருக்கிறது.
இதற்கிடையே, கோடை காலத்தில் எதிர்பாராத விதமாக வளிமண்டத்தில் ஏற்படும் சுழற்சி காரணமாக எப்போதாவது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்படி பெய்தால் வெப்பம் ஓரளவு தணிந்துவிடும். கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சில ஊர்களில் கோடை மழை பெய்வது சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
கோடை மழை என்றாலும் ஓரளவு நன்றாக பெய்தால்தான் தப்பித்தோம். ஏதோ மழை பெய்தது என்ற பெயரில் லேசாக தூறி விட்டுச் சென்றால், அந்த மழை வெப்பத்தை மேலும் அதிகரித்து தோல் வியாதி போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.
வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து இருப்பதால் இளநீர், நுங்கு, பழச்சாறு, குளிர்பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து இருக்கிறது. ஐஸ்கிரீம் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.
கோடை காலத்தில் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கான தண்ணீரின் தேவை அதிகரிப்பது வழக்கம். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கோடையில் நீர் அதிக அளவில் ஆவியாகி நீர்நிலைகள் வேகமாக வற்றத் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அணைகளில் பாபநாசம் உள்ளிட்ட ஒருசில அணைகளை தவிர மற்ற அணைகளிலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளது.
சென்னை நகருக்கு அக்டோபர் மாதம் வரை குடிநீர் வழங்க ஏரிகளில் தேவையான அளவுக்கு தண்ணீர் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துவிடும் என்பதால், அப்போது ஏரிகளுக்கு நீர் வரத்தொடங்கிவிடும்.
காங்கிரீட் காடுகளாக மாறிவிட்ட சென்னை போன்ற நகரங்களில் இரவில் சாப்பாடு இல்லாமல்கூட தூங்கிவிடலாம். ஆனால் மின்சாரம் இல்லாவிட்டால், அன்றைய இரவு 'சிவராத்திரி'யாகி, மறுநாள் பொழுதும் நாசமாகிவிடும்.
கோடை வெயில் சுட்டெரிப்பதால் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மின்விசிறி, ஏர்கண்டிஷன் எந்திரம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது, இவற்றின் பயன்பாடு இன்னும் அதிகமாகும் என்பதால் மின்சார தேவை மேலும் கூடும். தமிழகத்தின் மின்தேவை 19 ஆயிரத்து 300 'மெகாவாட்'டை தாண்டிவிட்டது.
கோடைகால தேவையை சமாளிக்கவும், மின்சார கோளாறு ஏற்படாமல் தவிர்க்கவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக மின்சார வாரியம் எடுத்து வருகிறது.
வெயிலை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மூணாறு போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். வெளிநாடுகளுக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. சரியான திட்டமிடலுடன் பயணம் மேற்கொண்டால் சுற்றுலா மறக்க முடியாத இனிய அனுபவமாக அமையும்.
கோடை காலத்தில் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க வேண்டும். 'சன் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்பத் தாக்கம், உடலில் நீர்ப்பற்றாக்குறை போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வேனல் கட்டி, வயிற்றுப்போக்கு, தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். எனவே வெயில் அதிகமாக இருக்கும் போது, அதாவது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே விளையாட அனுமதிக்கக்கூடாது. வீட்டினுள் விளையாடக்கூடிய விளையாட்டுகளை ஊக்குவிக்கவேண்டும். வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தொப்பி அணிந்து அழைத்துச்செல்லுங்கள்.
வெயிலின் அளவு 102 டிகிரியை (பாரன்ஹீட்) அடையும் போதோ அல்லது அதை தாண்டும் போதோ அதிக அளவில் வியர்வை வெளியாகி உடல் மிகவும் சோர்வாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் மிகவும் குளிர்ந்த நீரை அருந்த வேண்டாம் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். ஏனெனில் குளிர்ந்த நீரை அருந்தும் பட்சத்தில் சிறிய ரத்தக்குழாய்கள் வெடித்து பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அறை வெப்பநிலையில் உள்ள தண்ணீரையே அருந்துமாறும் அறிவுறுத்துகிறார்கள்.
வெளியே வெயிலில் சென்று விட்டு வீட்டுக்கு வந்தவுடன் உடனடியாக கைகால்களை கழுவாமல் அரை மணி நேரம் கழித்து கழுவவேண்டும் என்றும், உடனடியாக குளிப்பது நல்லதல்ல என்றும் சொல்கிறார்கள்.
வெயிலை சமாளிப்பது எப்படி?
கொஞ்சம் உஷாராக இருந்தால் கத்திரி வெயிலை சமாளித்து விடலாம்.
இதோ சில யோசனைகள்...
•வெயில் காலத்தில் வியர்வை அதிகமாக இருக்கும் என்பதால், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். மோர், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை அருந்துங்கள்.
•ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு உடலுக்கு தேவையான தாதுப்பொருட்களை, வைட்டமின்களையும் அளிப்பதால், அதை அடிக்கடி அருந்தலாம்.
•கூடுமானவரை காபி, டீயை தவிர்ப்பது நல்லது.
•காரமான உணவு வகைகளை தவிர்த்து வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
•கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சியையும் தரும்.
•மாமிச உணவு வகைகள் உஷ்ணத்தை அதிகரித்து, வயிற்றுக் கோளாறை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை தவிர்ப்பது நல்லது.
•சுட்டெரிக்கும் வெயிலில் வெளியே செல்வதை கூடுமானவரை தவிர்த்து விடுங்கள். கடை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருவதாக இருந்தால் காலை 10 மணிக்குள் போய்விட்டு திரும்பிவிடுவது நல்லது.
•வெளியே செல்லும் போது மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள். (அதை திருப்பி கொண்டு வர மறந்துவிடாதீர்கள். ஏனெனில் குடையும் மறதியும் இரட்டைப் பிறவிகள்). குடை இல்லாத பட்சத்தில் தொப்பிஅணிந்து செல்லுங்கள். கிராமப்புறங்களில் வெளியே செல்லும் பெரியவர்களும், வயல்களில் வேலை செய்பவர்களும் தலைப்பாகை அணிவது வழக்கம். இது வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்.
•மென்மையான, தளர்வான பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
•தினமும் இருமுறை குளிப்பது நல்லது.
•படுக்கை அறை நன்கு காற்றோட்டமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதற்காக ஜன்னலை திறந்து வைத்து அதன் அருகில் தலைவைத்து படுக்காதீர்கள். திருடர்கள் கைவரிசையை காட்டிவிடக்கூடும்.
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
'குளோபல் வார்மிங்' எனப்படும் பூமி வெப்பமயமாதல் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக வானிலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதுபற்றி ஆய்வு செய்வதற்காக ஐ.நா.சபை அமைத்த நிபுணர்கள் குழு, 21-ம் நூற்றாண்டில் பூமியின் வெப்பநிலை 1.8 டிகிரி முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக ஏற்கனவே எச்சரித்து இருக்கிறது.
காற்று மண்டலத்தில் உள்ள பசுமைக்குடில் வாயுக்கள்தான் நாம் வாழும் இந்த உலகத்தை போதுமான வெப்பத்துடன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. கார்பன் டை ஆக்சைடு ஓரளவுக்கு மட்டுமே இருக்க வேண்டிய பசுமைக்குடில் வாயுக்களில், இப்போது தொழில் வளர்ச்சியின் காரணமாக அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு கலக்கிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கரைகின்றன. இமயமலை (இந்தியா), ஆல்ப்ஸ் மலை (சுவிட்சர்லாந்து) உள்ளிட்ட மலைகளில் உள்ள சிகரங்களில் பனிப்பாறைகளும் கோடை காலத்தில் வேகமாக உருகுகின்றன.
பனிப்பாறைகள் உருவதால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் கடற்கரையையொட்டியுள்ள பகுதிகள் மூழ்கும் ஆபத்து இருப்பதாக விஞ்ஞானிகள் அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்கள்.
தமிழக அணைகளில் நீர் இருப்பு
தமிழகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் அணைகளில், கடந்த 27-ந்தேதி நிலவரப்படி எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்ற விவரம் வருமாறு:-
(அடைப்புக்குறிக்குள் அதிகபட்ச நீர்மட்டம்)
அணை | நீர்மட்டம் (அடியில்) |
மேட்டூர் | 101.59 (120) |
பவானிசாகர் | 82.61 (105) |
அமராவதி | 55.55 (90) |
வைகை | 53.97 (71) |
முல்லைப்பெரியாறு | 116.3 (152) |
பாபநாசம் | 15.7 (145) |
மணிமுத்தாறு | 72.22 (118) |
பேச்சிப்பாறை | 36.25 (48) |
பெருஞ்சாணி | 37.45 (77) |
கிருஷ்ணகிரி | 43.75 (52) |
சாத்தனூர் | 100.7 (119) |
சோலையார் | 15.14 (160) |
பரம்பிக்குளம் | 14.41 (72) |
ஆழியார் | 63.7 (120) |
திருமூர்த்தி | 30.45 (60) |