< Back
சிறப்பு பக்கம்
சக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்
சிறப்பு பக்கம்

சக்கர வியூகத்தில் சிக்கிய ராகுல்

தினத்தந்தி
|
2 April 2023 9:55 AM IST

காங்கிரசின் எதிர்காலம் முழுக்க முழுக்க ராகுல் காந்தியை நம்பித்தான் இருக்கிறது. மல்லிகார்ஜூன கார்கே தலைவராக இருந்தாலும், ராகுல்தான் காங்கிரசின் முகமாக விளங்கி வருகிறார். அவர்தான் கட்சியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்.

52 வயதான ராகுல் வெளிநாட்டில் படித்தவர். சந்தர்ப்ப சூழ்நிலையால் தாயாருக்கு உறுதுணையாக பொதுவாழ்க்கைக்கு வந்த அவர், நாகரிகமான அரசியல் நடத்த வேண்டும் என்று விரும்புபவர். அவருடைய மென்மையான அணுகுமுறைக்கும், நடவடிக்கைகளுக்கும் இளைஞர்களிடையே வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது.

சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை அவர் நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு மக்களிடையே ஏகோபித்த ஆதரவு இருந்ததை பார்க்க முடிந்தது. யாத்திரையின் போது பல்வேறு தரப்பு மக்களுடனும் அவர் ஐக்கியமாகி, 'நான் உங்களில் ஒருவன்' என்பதை அவர்களுக்கு உணர்த்துவது போல் நடந்து கொண்டார்.

ஆனால் இந்திய அரசியலில் உள்ள நெளிவு சுளிவுகளையும், சூதுவாதையும் அவர் இன்னும் முழுமையாக கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

அரசியலில் ஒருவர் தவறு செய்வதற்காகத்தான் எதிரிகள் காத்துக் கொண்டிருப்பார்கள். வாய்தவறி ஏதாவது பேசிவிட்டாலோ, தெரியாமல் ஏதாவது செய்துவிட்டாலோ அவ்வளவுதான்; விட மாட்டார்கள். ''ஏதோ அறியாமல் பேசிவிட்டார்; செய்து விட்டார். இது எல்லோருக்கும் நடப்பதுதானே?'' என்று பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளமாட்டார்கள். இதுதான் சமயம் என்று பிரச்சினையை எவ்வளவு பெரிதாக்க முடியுமோ அவ்வளவு பூதாகரமாக்கி உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் பேசிய பேச்சு அவரது எம்.பி. பதவிக்கே உலை வைக்கும் அளவுக்கு போய் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!.... அப்போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில், ''ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என முடிகின்றன?'' என்று அவர் பேசியதுதான், 'பூமராங்'காக திரும்பி இப்போது அவரை தாக்கி இருக்கிறது.

வங்கி கடன் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடி, ஐ.பி.எல். எனப்படும் 'இந்தியன் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிய தொழில் அதிபர் லலித் மோடி ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு ராகுல் இவ்வாறு பேசியதாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் முன்னாள் மந்திரியும் சூரத் மேற்கு சட்டசபை தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான பர்னேஷ் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல், மோடி சமூகத்தினரை அவமதித்துவிட்டதாக கூறி அவருக்கு எதிராக சூரத் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி எச்.எச்.வர்மா, இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என அறிவித்ததோடு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கடந்த மாதம் 23-ந்தேதி தீர்ப்பு கூறினார். என்றாலும் ராகுலுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வரும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8 (3) பிரிவின்படி, 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ அந்த பதவியில் நீடிக்கும் தகுதியை தானாகவே இழந்துவிடுவார்கள். மேலும் தண்டனை காலம் முடிந்த பின்னும் 6 ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. அந்த வகையில் மொத்தம் 8 ஆண்டுகள் அவர்களுக்கு அரசியலில் வனவாசம்.

தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் 3 மாதங்கள் கழித்துதான் தகுதி இழப்பார்கள் என்று முதலில் இருந்தது. ஆனால் 2013-ம் ஆண்டு இது தொடர்பான ஒரு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தண்டனை பெற்றவர்கள் உடனடியான பதவி இழப்பார்கள் என்று தீர்ப்பு கூறியது. இது அரசியல்வாதிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சூரத் கோர்ட்டு ராகுல் குற்றவாளி என தீர்ப்பு கூறியதை தொடர்ந்து, அடுத்தடுத்து காட்சிகள் வேகமாக அரங்கேறின. கோர்ட்டு தீர்ப்பு வெளியான மறுநாளே, கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்படுவதாக நாடாளுமன்ற செயலகம் அறிவித்தது.

ஊழல் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இதுவரை சில எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அவதூறு வழக்கில் ஒருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்.

அவதூறு வழக்கில் ராகுல் எம்.பி. பதவியை இழந்து இருப்பது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ராகுலின் எம்.பி. பதவி பறிப்பு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிரான ராகுலின் குரலை ஒடுக்கவும், நாடாளுமன்றத்தில் இருந்து அவரை வெளியேற்றவும் நடந்த சதி இது என்று காங்கிரஸ் சாடி இருக்கிறது. அக்கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

குற்ற வழக்கில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலம் தண்டிக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளை தானாக தகுதி இழக்கச் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 8 (3) தன்னிச்சையானது என்றும், சட்டவிரோதமானது என்றும் எனவே இந்த பிரிவை அரசியல் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும் கோரி கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுலும் மேல்முறையீடு செய்ய இருக்கிறார்.

மேல்முறையீட்டில் ராகுலுக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு சிறைத்தண்டனையை கோர்ட்டு நிறுத்திவைத்தால் மட்டும் போதாது; தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது.

சில தினங்களுக்கு முன் இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது 'மோடி' பற்றிய பேச்சு தொடர்பான அவதூறு வழக்கில் எம்.பி. பதவியை இழந்து இருக்கிறார்.

தனது பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதீய ஜனதா வற்புறுத்தி வரும் நிலையில், அதுபற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''எனது பெயர் சாவர்க்கர் அல்ல. எனது பெயர் காந்தி. காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்பதில்லை'' என்று ஆவேசமாக பதில் அளித்தார். அத்துடன் எந்தவித மிரட்டலுக்கும் தான் அஞ்சப்போவது இல்லை என்றும், சிறையில் தள்ளினாலும் கவலை இல்லை என்றும் கூறினார்.

அவர் மகாத்மா காந்தியை பற்றி கூறினாரா? அல்லது இந்திராகாந்தியை பற்றி சொன்னாரா? என்று தெரியவில்லை.

ஏற்கனவே இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது, தேவை இல்லாமல் சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கர் பற்றி ராகுல் தெரிவித்த கருத்துக்கு மராட்டிய மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரசின் கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராகுல் கருத்தை வன்மையாக கண்டித்தது.

இப்போதும், சுதந்திர போராட்டத்தின் போது தண்டனையில் இருந்து தப்பிக்க சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டதாக குறிப்பிடும் அர்த்தத்தில் ராகுல் பேசி இருப்பதற்கு உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். விடுதலைப் போராட்ட தியாகியான வீர சாவர்க்கர் தங்களுக்கு கடவுளைப் போன்றவர் என்றும் அவரை விமர்சித்து கருத்து தெரிவிப்பதை சகித்துக் கொள்ள முடியாது என்றும் ராகுலுக்கு அவர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

எனவே, ராகுல் மிகுந்த நிதானத்துடனும், எச்சரிக்கையுடனும் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அதுதான் அவரது நலனுக்கும் கூட்டணியின் நலனுக்கும் நல்லது என்றும் நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுலை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனவே தவிர, காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கவில்லை.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் கவனத்துடனே காய்களை நகர்த்தி வருகிறது.

மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் தலைமையின் கீழ் வந்து வலுவான கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்தால்தான் பாரதீய ஜனதாவை வீழ்த்த முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது. இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் ஆதரவு தெரிவித்த போதிலும், ராகுலை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தும் யோசனைக்கு சம்மதம் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வருகின்றன.

ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் சமாஜ்வாடி தலைவருமான அகிலேஷ்யாதவ், பீகார் முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் காங்கிரஸ் தலைமையை ஏற்க தயாராக இல்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் செல்வாக்கு பெற்ற கட்சியாக விளங்கிய போதிலும் தற்போது அது மக்கள் ஆதரவை இழந்து விட்டதாக கருதும் அவர்கள், காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மம்தா பானர்ஜி உள்ளிட்ட சிலர் பிரதமர் கனவில் மிதப்பதே இதற்கு காரணம்.

அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற வைராக்கியம் எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இருப்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு அதை சாதித்துக் காட்டுவதற்கான ஒற்றுமை அவர்களிடம் இல்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த ஒற்றுமையின்மையே பாரதீய ஜனதாவுக்கு மிகப்பெரிய பலம் ஆகும்.

தொடர் தோல்விகள்-அடுத்தடுத்து துரத்தும் வழக்குகள்-பிற கட்சிகள் உதாசீனப்படுத்துவது என்று ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது.

ஒரு அவதூறு வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கோர்ட்டுகளில் அவர் மீது பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்டு வழக்கு, மகாத்மா காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தொடர்புபடுத்தி பேசியதால் தொடரப்பட்ட வழக்கு என மேலும் 7 அவதூறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ள போதிலும், அவற்றில் இருந்து மீண்டு வருவது அவருக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்த நிலையில் மே 10-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலையும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க அவர் தயாராக வேண்டும்.

ஒரு பக்கம் கண்ணுக்கு தெரிந்த எதிரிகளையும், கண்ணுக்கு தெரியாத துரோகிகளையும் சமாளிக்க வேண்டும்; மற்றொரு புறம் கட்சியையும் பலப்படுத்தவேண்டும் என்ற ஒரு இக்கட்டான காலகட்டத்தில் ராகுல்காந்தி இருக்கிறார்.

அரசியல், ஒரு காலத்தில் சேவை செய்வதற்கான தளமாக இருந்தது. சுயநலவாதிகளும், பேராசைக்காரர்களும் எப்போது அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே அது போர்க்களமாக மாறிவிட்டது. மக்களுக்கு சேவை செய்வதை விட அரசியலில் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வதிலும், எதிரிகளை வீழ்த்துவதிலுமே ஒவ்வொருவரும் கவனம் செலுத்துகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

மாபெரும் வீரனான அபிமன்யூ குருஷேத்திர போர்க்களத்தில் எதிரிகளின் சக்கரவியூகத்தில் சிக்கிக் கொண்டதைப் போல், இப்போது ராகுல்காந்தி அரசியல் போர்க்களத்தில் ஒரு வியூகத்தில் சிக்கிக்கொண்டு போராடுகிறார்.

தன்னை கட்டிப்போட்டு இருக்கும் வழக்குகள் என்ற தளைகளை தகர்த்தெறிந்து 'பீனிக்ஸ்' பறவையாக அவர் எப்படி மீண்டு எழுந்து வரப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அன்று பாட்டி... இன்று பேரன்...



ஜவகர்லால் நேரு குடும்பத்தில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2-வது தலைவர் ராகுல்காந்தி ஆவார்.

பிரதமராக இருந்த இவரது பாட்டி இந்திராகாந்தி முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். பிரதமராக இருந்த போது இந்திரா காந்தி 1971-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் குடும்ப தொகுதியான ரேபரேலியில் (உத்தரபிரதேசம்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சோசலிஸ்டு தலைவர் ராஜ் நாராயண், இந்திரா காந்தி தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக கூறி அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா, இந்திரா காந்தி வெற்றி பெற்றது செல்லாது என்றும் அவர் எம்.பி. பதவியை வகிக்கும் தகுதியை இழந்துவிட்டதாகவும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் 1975-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி பரபரப்பான தீர்ப்பை வழங்கினார்.

ஆனால் பதவி விலக மறுத்த இந்திரா காந்தி, இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தியதோடு, நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

இப்போது அவரது பேரன் ராகுல் அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.

'மோடி' என்றால் யார்?

மோடி என்றால் இதுவரை ஒரு பெயர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அதை அவதூறாக பயன்படுத்தியதால் ராகுல்காந்தியின் எம்.பி. பதவியே பறிபோய் இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மோடி என்பது ஒரு சமூகத்தின் பெயர் ஆகும். இந்த சமூகத்தினர் வட மாநிலங்களில் இருந்து 15 அல்லது 16-ம் நூற்றாண்டுகளில் குஜராத்துக்கு வந்ததாக வரலாறு கூறுகிறது. ஆரம்ப காலத்தில் நிலக்கடலை, எள் போன்றவற்றை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழில் செய்து வந்த இவர்கள், பின்னர் மளிகை கடை, டீக்கடை நடத்தும் பணியிலும் ஈடுபட தொடங்கினர்.

எண்ணெய் உற்பத்தி செய்யும் சமூகமாக இருப்பதால் இவர்கள் குஜராத்தில் வாணிய சமூகத்தின் கீழ் 'தேலி காஞ்சி' (எண்ணெய் தயாரிப்பாளர்) என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளனர். 1994-ம் ஆண்டு இவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி,சி.) சேர்க்கப்பட்டனர்.

குஜராத் மட்டுமின்றி மத்தியபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மோடி என்ற குடும்பப் பெயர் கொண்டவர்களையும் பரவலாக காண முடியும்.

கிழித்து எறிய வேண்டிய மசோதா

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த உத்தரவு மிகவும் கடுமையானது என்று கருதி, அதே ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 8 (4)-ல் திருத்தம் கொண்டு வந்தது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக பதவி இழக்காமல், அவர்கள் மேல்முறையீடு செய்ய 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்க இந்த சட்ட திருத்தம் வகை செய்கிறது.

இது அப்போது எம்.பி.யாக இருந்த ராகுல்காந்தியை கொந்தளிக்கச் செய்தது. இந்த மசோதா முட்டாள்தனமானது என்றும், தண்டனை பெற்றவர்களின் பதவியை உடனடியாக பறிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளிப்பதை ஏற்க முடியாதது என்றும், இது கிழித்து எறியப்பட வேண்டிய ஒன்று என்றும் செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறினார். இதனால் அந்த மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கைவிட்டது.

அந்த மசோதா மட்டும் நிறைவேறி இருந்தால், இப்போது ராகுல் உடனடியாக எம்.பி. பதவியை இழந்திருக்க மாட்டார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ''அப்போது மட்டும் மசோதா நிறைவேற மன்மோகன் சிங்கை அனுமதித்து இருந்தால் ராகுல் இப்போது பதவி இழந்திருக்க மாட்டார். எல்லாம் வினைப்பயன். இப்போது எங்களை குற்றம் சொல்வதற்கு என்ன இருக்கிறது?" என்றார்.

அன்னிய மண்ணில் சர்ச்சை பேச்சு


இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை அமைப்பு தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக குற்றம்சாட்டியதோடு, இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் குற்றம்சாட்டினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

வெளிநாட்டு மண்ணில் நின்றபடி, இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க பிற நாடுகள் தலையிட வேண்டும் என்று ராகுல் கேட்டுக்கொண்டதற்கு மத்திய அரசும், ஆளும் பாரதீய ஜனதாவும் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாடாளுமன்றத்திலும் வற்புறுத்தப்பட்டது.

ஒரு குடும்பத்தில் பிரச்சினை என்றால் வீட்டில் உள்ளவர்களே பேசி தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, அதை விடுத்து வீதிக்கு சென்று வீட்டுப் பிரச்சினையை கடை விரித்து ''தீர்த்துவைக்க வாருங்கள்'' என்று மற்றவர்களை அழைத்தால், அது குடும்பத்துக்குத்தான் அவமானம் என்றும், இது நாட்டுக்கும் பொருந்தும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை பதவி இழந்தவர்கள்


2013-ம் ஆண்டு ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தொடர்ந்து, இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பற்றிய விவரம் வருமாறு:-

•மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் குற்றவாளி என தீர்ப்பு கூறி 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து அவர் சரண் தொகுதி எம்.பி. பதவியை இழந்தார். இதே வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெகனாபாத் தொகுதி ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஜெகதீஷ் சர்மாவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

•எம்.பி.பி.எஸ். சீட் மோசடி வழக்கில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் 2013-ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

•அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த சுடுகாடு கொட்டகை ஊழல் வழக்கில் டி.எம்.செல்வகணபதிக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

•சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதாவுக்கு 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந்தேதி பெங்களுரு கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்ததால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். பின்னர் மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி அவர் மரணம் அடைந்து விட்டார்.

•கொலை முயற்சி வழக்கில் லட்சத்தீவு தொகுதி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முகமது பைசலுக்கு கடந்த ஜனவரி மாதம் செசன்சு கோர்ட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தண்டனையை கேரள ஐகோர்ட்டு நிறுத்தி வைத்து இருக்கிறது. மேலும் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்து, அது விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அவரது பதவி பறிப்பை மக்களவை செயலகம் ரத்து செய்துள்ளது.

•மராட்டியத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் ஹல்வாங்கர், சிவசேனா எம்.எல்.ஏ. பாபன்ராவ் கோலப், மத்தியபிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஆஷாராணி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம் சிங் சைனி, சமாஜ்வாடி எம்.எல்.ஏ. அப்துல்லா ஆசம்கான், ஜார்கண்ட் கட்சி எம்.எல்.ஏ. ஈனாஸ் எக்கா, அகில ஜார்கண்ட் மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த கமல் கிஷோர் பகத், சுரேஷ் ஹல்வாங்கர் ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளனர்.

மேலும் செய்திகள்