அலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகி வருகிறது ஜல்லிக்கட்டு மைதானம்
|அலங்காநல்லூர் அருகே பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
வாடிவாசலில் காளையர்களை பந்தாடும் காளைகளை காணும்போது யாருக்குத்தான் சிலிர்ப்பு வராது...?
காலம்காலமாக நடந்துவரும் ஜல்லிக்கட்டு, காலமாற்றத்துக்கு ஏற்றபடி பரிணாமங்கள் பெற்று, இன்று தமிழகம் முழுவதும் அனேக மாவட்டங்களில் நடந்து வருகின்றன.
கேலரிகள் நிரம்பி வழியும்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டுதான் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கும். பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்திலும், அதற்கு அடுத்த நாள் பாலமேட்டிலும், அதற்கு மறுநாள் அலங்காநல்லூரிலும் மிகுந்த உற்சாகத்துடனும், விறுவிறுப்புடனும் நடைபெறும். இந்த 3 ஜல்லிக்கட்டு விழாக்களுமே மிகவும் பிரபலமானவை. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்பிரசித்தி பெற்றது.
மதுரை மாவட்டத்துக்கென்று தனி அடையாளங்களில் ஒன்றாக திகழும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மதுரை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள்.
அவ்வாறு வரும் எல்லோராலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண முடிவதில்லை. இரவு முழுவதும் விழித்திருந்து கேலரியில் இடம் பிடிப்பவர்கள் உண்டு. அதிகாலையிலேயே சென்று இடம் பிடிப்பவர்களும் உண்டு. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கும் என்றால், அதற்கு முன்னதாகவே பார்வையாளர்களால் கேலரி நிரம்பி வழிந்துவிடும். அதன்பிறகு வருகிறவர்கள் வாடிவாசல் வர்ணனையைத்தான் கேட்க முடியுமே தவிர, திடலில் காளைகள், காளையர்கள் மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள்.
நூற்றுக்கணக்கானவர்கள் அல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் இவ்வாறு ஏமாற்றத்துடன் திரும்புவதை காண முடியும். கேலரிகளில் போதிய இடவசதி இல்லாததுதான் இதற்கு காரணம்.
ஜல்லிக்கட்டு மைதானம்
எனவே பெருவாரியான மக்கள் அமர்ந்து, ஜல்லிக்கட்டு போட்டியை காண பிரமாண்ட மைதானம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி சட்டசபையில் அறிவித்தார். அதுவும் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் அருகே இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த மைதானம் அமைக்கப்படும் எனவும் அறிவித்து இருந்தார்.
இந்தியாவிலேயே முதன்முறையாக ஜல்லிக்கட்டுக்கு என்று பிரத்தியேக மைதானம் அறிவிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
ரூ.44 கோடி
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், வகுத்து மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் இதற்காக தேர்வு செய்யப்பட்டது. ரூ.44 கோடி செலவில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இங்கு போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு நடந்தாலும், மற்றொரு நாளில் இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
அதற்கான பணி முழு வீச்சில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது. குறிப்பாக அதன் அருகில் மலை இருப்பதால் மலை அடிவாரத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களிப்பது புதுவித அனுபவமாக இருக்கும். இதனால் திறப்பு விழா எப்பொழுது நடைபெறும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
என்னென்ன வசதிகள்?
புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கூடம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், வீரர்கள் உடை மாற்றும் அறை, தற்காலிக விற்பனைக்கூடங்கள், பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை ஆகியவை அமைகின்றன. நுழைவு வாயிலில் வளைவு, காளைகள் சிற்பக் கூடம், உட்புறச் சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, மாடுகள் நிறுத்தம் இடத்தில் புல் தரைகள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.
அலங்காநல்லூரில் இருந்து இந்த மைதானத்துக்கு பார்வையாளர்கள் எளிதாக செல்ல பல கோடி ரூபாய் மதிப்பில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் புதிய சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகளிலும் ஏராளமான பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலை அமைக்கப்பட்டவுடன் அந்த பகுதியில் மின்விளக்குகளும் அமைக்கப்பட இருக்கின்றன.
கலாசார விழாக்கள்
இந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு மட்டுமின்றி, பண்பாடு மற்றும் கலாசார விழாக்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கால்நடை சந்தை ஆகியவையும் நடத்தப்படும் என்றும், அதன்மூலம் ஈட்டப்படும் வருவாய் மைதான பராமரிப்புக்கு செலவிடப்படும் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மேலும் இந்த மைதானத்தை சுற்றுலாத்துறை மூலம் பண்பாட்டு வளாகமாக மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மைதானம் கட்டி முடிக்கப்பட்டதும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இந்த ஜல்லிக்கட்டு மைதானம் ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் விழாவில் திறப்பு?
ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான கட்டுமான பணி கடந்த 18.3.23 அன்று தொடங்கியது. இந்த பணியை 9 மாதங்களில் அதாவது, 17.12.23 அன்று முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் கட்டுமான பணி வேகமாக நடந்து வருகிறது.
அப்படி பார்த்தால் வருகிற பொங்கல் பண்டிகையையொட்டி இங்கு ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு, முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.