ஜனநாயகத்தின் புதிய தலைமைப்பீடம்
|''துப்பாக்கி குண்டுகளை விட சக்திவாய்ந்தது வாக்குச்சீட்டு''
-இப்படிச் சொன்னவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன்.
அவர்தான், ''மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படுவதே ஜனநாயகம்'' என்று மக்களாட்சியின் மகத்துவத்தை இந்த உலகுக்கு பறைசாற்றினார்.
'டெமோக்கள் கிராடோஸ்' என்ற இரு கிரேக்க வார்த்தைகளில் இருந்து பிறந்ததுதான் ஜனநாயகம் என்ற சொல். 'டெமோக்கள் கிராடோஸ்' என்றால் 'மக்கள் அதிகாரம்' என்று பொருள். ஜனநாயகத்தில் மக்கள்தான் எஜமானர்கள்.
143 கோடி மக்கள் வசிக்கும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதில் நமக்கெல்லாம் பெருமை. பல்வேறு மத, இன, மொழி பேசும் மக்கள் வாழும் நம் தேசத்தின் பலமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுதான். எங்கேயாவது, எப்போதாவது சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டாலும் இந்திய ஜனநாயகம் தெளிந்த நீரோடை போல் 75 ஆண்டுகளை கடந்து பீடு நடைபோடுகிறது.
இந்திய ஜனநாயகத்தின் தலைமை பீடமாக தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் விளங்குகிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் அங்கிருந்தபடிதான் சட்டங்களை இயற்றுவதோடு நம் தலைவிதியையும் நிர்ணயிக்கிறார்கள்.
இந்த நாடாளுமன்ற கட்டிடம் 1921-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி இங்கிலாந்தின் கன்னாட் அரசரால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டு ஜனவரி 18-ந்தேதி அப்போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த இர்வின் பிரபுவால் திறந்து வைக்கப்பட்டது. அசோக சக்கரத்தை நினைவுபடுத்தும் வகையில் 560 அடி விட்டத்துடன் வட்டவடிவில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் நடுவில் 'சென்டிரல் சேம்பர்' என அழைக்கப்படும் மைய மண்டபம் அமைந்துள்ளது. இதைச்சுற்றி மூன்று அரைவட்ட வடிவிலான மக்களவை மண்டபம், மாநிலங்களவை மண்டபம் மற்றும் நூலக கூடம் ஆகியவை உள்ளன. இந்த மைய மண்டபத்தில்தான் மக்களவை-மாநிலங்களவை எம்.பி.க்களின் கூட்டுக்கூட்டம் நடைபெறும்.
முன்பு 'மத்திய சட்டப் பேரவை' என்று அழைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் 1946-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நடைபெற்றது. 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி முடிந்து 15-ந்தேதி நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததும் நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடியது. அதன்பிறகு 1952-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி இரு அவைகளின் முதல் கூட்டுக்கூட்டம் நடந்தது.
பாரம்பரிய பெருமைமிக்க இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில்தான் பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன.
2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாளாக அமைந்தது.
ஆம்... அன்று நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் திடீரென்று நாடாளுமன்ற வளாகத்துக்குள் புகுந்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டபடி தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் டெல்லி போலீசார் 6 பேர், நாடாளுமன்ற காவலர்கள் 2 பேர், ஒரு தோட்டக்காரர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். எம்.பி.க்களின் உயிருக்கு ஆபத்து உண்டாகவில்லை. நாடாளுமன்ற கட்டிடத்துக்கும் சேதம் ஏற்படவில்லை.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2002-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை அங்கு அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் திறந்துவைத்தார். அதன்பிறகு 2017-ல் கட்டப்பட்ட நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் 545 உறுப்பினர்களும் (2 பேர் நியமன உறுப்பினர்கள்), மாநிலங்களவையில் 12 நியமன உறுப்பினர்கள் உள்பட 254 உறுப்பினர்களும் உள்ளனர். நாடாளுமன்ற கட்டிடம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருப்பதால் அதன் உறுதித்தன்மை குறித்த கேள்வி எழுந்தது. மேலும் மாறிவரும் காலசூழ்நிலைகள் மற்றும் பணிகளுக்கு ஏற்ப இந்த கட்டிடத்தில் போதிய இடவசதியும் இல்லை. எனவே இதுபற்றி ஆய்வு செய்ய 2012-ம் ஆண்டு அப்போதைய மக்களவை சபாநாயகர் மீராகுமார் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு, நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டலாம் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை செய்ததோடு, தற்போதைய கட்டிடத்தை பேணி பாதுகாப்பதற்கான யோசனைகளையும் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து பல்வேறு அம்சங்களையும் ஆய்வு செய்த பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு, சென்டிரல் விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது என்றும், பழைய கட்டிடத்துக்கு அருகிலேயே இந்த கட்டிடத்தை கட்டுவது என்றும் முடிவு செய்தது. மேலும் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான இல்லங்களையும் அந்த வளாகத்திலேயே கட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா கொரோனா தாக்குதல் தீவிரமாக இருந்து போது, அதாவது 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி நடந்தது. எளிமையாக நடந்த விழாவில் பிரதமர் மோடி புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். கொரோனாவால் நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ள சூழ்நிலையில், நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் இப்போது தேவைதானா? என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதையும் மீறி அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்தது.
இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக டாடா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதேபோல் கட்டிட வடிவமைப்பை உருவாக்குவது போன்ற பணிகளுக்கான நிறுவனங்களும் தேர்வு செய்யப்பட்டன. கொரோனா பரவலால் ஏற்பட்ட பாதிப்பு, கோர்ட்டு வழக்குகள் என்று இடையிடையே அவ்வப்போது சில தடங்கல்கள் ஏற்பட்ட போதிலும், பெரிய அளவில் சுணக்கம் எதுவும் இல்லாமல் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.
இந்த கட்டிடத்தின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள 4 சிங்கங்களின் முகங்கள் கொண்ட தேசத்தின் அடையாள சின்னத்தை கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந் தேதி திறந்து வைத்த பிரதமர் மோடி, அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கட்டுமானப்பணி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தார். பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த மார்ச் 30-ந்தேதி அவர் அங்கு சென்று புதிய கட்டிடத்தில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன? இன்னும் என்னென்ன வேலைகள் பாக்கி இருக்கின்றன? என்று ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆய்வு செய்ததோடு, அதுபற்றிய விவரங்களையும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
இந்த புதிய கட்டிடம் பற்றிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-
•புதிய நாடாளுமன்ற கட்டிடம் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் கட்டப்பட்டு உள்ளது.
• 150 ஆண்டுகள் வரை நீடிக்கும் வகையிலும், பயங்கர பூகம்பம் ஏற்பட்டாலும் அதை தாங்கி நிற்கும் வகையிலும் வலுவாக கட்டப்பட்டு இருக்கிறது.
• 39.6 மீட்டர் உயரத்தில் 4 மாடிகளுடன்கூடிய முக்கோண வடிவிலான இந்த கட்டிடத்தில் 888 இருக்கைகளை கொண்ட மக்களவை கூடம், 384 இருக்கைகளை கொண்ட மாநிலங்களவை கூடம், மந்திரிகளுக்கான அறைகள், நாடாளுமன்ற குழுக்களின் அலுவலக அறைகள், நூலகம் ஆகியவை உள்ளன.
• நாட்டின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் எதிர்காலத்தில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டு அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அதற்கு ஏற்ப மக்களவையிலும் மற்றும் மாநிலங்களவையிலும் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
• உறுப்பினர்கள் வசதியாக அமரும் வகையில் இரு அவைகளிலும் அதிக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
• பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டம் மைய மண்டபத்தில் நடைபெறும். இந்த புதிய கட்டிடத்தில் மைய மண்டபம் கிடையாது. ஆனால் கூட்டுக்கூட்டத்தை நடத்துவதற்கான விஸ்தீரணமான வசதி மக்களவையில் உள்ளது. அதாவது 1,742 உறுப்பினர்கள் வரை அமர வைத்து அங்கு கூட்டத்தை நடத்த முடியும்.
• மக்களவை இந்திய தேசிய பறவையான மயில் போன்றும், மாநிலங்களவை தேசிய மலரான தாமரை போன்றும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
• ஜனாதிபதி மாளிகை போன்ற பாரம்பரிய கட்டிடங்களின் கலை அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் ஒட்டுமொத்த கட்டிடமும் அமைந்துள்ளது.
• கட்டிடத்தின் நடுவில் 2 ஆயிரம் ச.மீ. பரப்பளவுக்கு திறந்த வெளி பகுதி உள்ளது.
• சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பசுமை கட்டிடமாக கட்டப்பட்டு இருப்பதால் 30 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும். மின்சார சேமிப்பு உள்ளிட்ட வகைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் சேமிக்க முடியும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
•நவீன முறையில் தீயணைப்பு மற்றும் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. சிறந்த கண்காணிப்பு கேமரா, தகவல் தொடர்பு வசதிகளும் உள்ளன.
• ரூ.862 கோடி செலவில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் திட்டச் செலவு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கும் என கருதப்படுகிறது.
• பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு-பகலாக கட்டுமான பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
• புதிய கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்த போதிலும், பழைய நாடாளுமன்ற கட்டிடம் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும்.
நவீன இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றாகவும், ஜனநாயகத்தின் புதிய தலைமை பீடமாகவும் விளங்க இருக்கும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது. பிரதமர் மோடி புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.
நாடாளுமன்றத்தில்தான் காரசாரமான விவாதங்களும், அவ்வப்போது வெளிநடப்புகளும், புறக்கணிப்புகளும் இருக்கும். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடமும், அதன் திறப்பு விழாவுமே சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டது.
கட்சி ரீதியாக மக்கள் பிரதிநிதிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஓட்டுப் போட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கும் மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்தால் சரிதான்...
தமிழகத்தின் செங்கோலுக்கு கிடைத்த பெருமை
இன்று நடைபெறும் நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடியிடம் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட பாரம்பரியமிக்க செங்கோல் வழங்கப்பட உள்ளது. அந்த செங்கோலை அவர் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைப்பார். நீதி வழுவா நெறிமுறையை பறைசாற்றும் அந்த செங்கோல் அங்கேயே இருக்கும்.
இந்த செங்கோலுக்கு ஒரு பெரிய வரலாறே உள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவது என இங்கிலாந்து அரசு முடிவு செய்ததும் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அப்போது இந்தியாவில் ஆங்கிலேய அரசின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, ''எங்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகார மாற்றம் நடந்ததை எந்த வகையில் அடையாளம் காட்டுவது?'' என்று ஜவகர்லால் நேருவிடம் கேட்டார்.
உடனே நேரு இது குறித்து மூதறிஞர் ராஜாஜியிடம் கேட்க, அதற்கு அவர், தமிழ்நாட்டில் முன்பு மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் நிகழும் போது, ராஜகுருவிடம் இருந்து செங்கோல் பெறும் மரபு இருந்ததை சுட்டிக்காட்டி அந்த நடைமுறையை கையாளலாம் என்று கூறினார். அந்த யோசனை சரியாக இருந்ததால், நேரு அதை ஏற்றுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் செங்கோல் தயாரிக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் ஏற்பாட்டின்படி சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை, வெள்ளியில் தங்க முலாம் பூசப்பட்ட வேலைப்பாடுமிக்க நந்தி உருவத்துடன் கூடிய ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 5 அடி உயர செங்கோலை தயாரித்தது. பின்னர் அந்த செங்கோல் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்குவதற்கு சற்று முன் அதாவது இரவு 11.45 மணி அளவில் சுதந்திரம் பெறுவதற்கான நிகழ்வு டாக்டர் ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நேரு, ராஜாஜி, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது திருஞான சம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் 11 பாடல்களையும் ஓதுவாமூர்த்திகள் பாடி முடித்ததும், திருவாவடுதுறை ஆதீனம் குமாரசாமி தம்பிரான் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் இருந்து அந்த செங்கோலை வாங்கி புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்க இருக்கும் நேருவிடம் வழங்கினார். அப்போது திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் நாதஸ்வர இசை முழங்க நேருவுக்கு திருநீற்று பிரசாதம் வழங்கி சந்தன மாலை அணிவிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு விடுதலை அளித்ததன் அடையாளமாக வழங்கப்பட்ட அந்த செங்கோல் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில், நேரு பரிசாக பெற்ற மற்ற பொருட்களுடன் வைக்கப்பட்டு இருந்தது. அதைத்தான் இன்று நடைபெறும் விழாவில் தமிழக ஆதீனகர்த்தகர்களிடம் இருந்து பிரதமர் மோடி பெற்றுக்கொள்கிறார்.