இயற்கை அதிசயங்கள்
|எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகளும், தாவரங்களும் உள்ளன. மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா? இல்லையா? என்ற கேள்விக்கு இதுவரை உறுதியான பதில் கிடையாது. நமக்கு தெரியாது என்பதாலேயே எதுவும் 'இல்லை' என்று ஆகிவிடாது. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய விவாதம் தீவிரம் அடைந்து இருப்பதால், பூமிக்கு அப்பால் விஞ்ஞானிகளின் தேடல் மும்முரமாகி இருக்கிறது. அது ஒருபுறம் இருக்கட்டும்...
ஆனால் இந்த பூமியே எண்ணற்ற பல அதிசயங்களை உள்ளடக்கியது. பிரமிடு, சீன பெருஞ்சுவர், தாஜ்மகால் என்று மனிதர்கள் உருவாக்கிய சில அதிசயங்கள் இருந்தாலும், இயற்கை பல அதிசயங்களை உருவாக்கி இருக்கிறது.
அவற்றில் சிலவற்றை காண்போம்...
நீருக்குள் எரியும் நெருப்பு
அமெரிக்காவில் மேற்கு நியூயார்க்கில் 'செஸ்ட்னட் ரிட்' என்ற பூங்காவில் 'எட்டர்னல் பிளேம் பால்ஸ்' என்ற ஓர் அருவி உள்ளது. 35 அடி உயர இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதேசமயம், அருவியின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய குகையில் எப்போதும் தீ எரிந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் கொட்டும் இடத்தில் நெருப்புக்கு என்ன வேலை? தீ எப்படி எரியும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
அந்த இடத்தில் பூமிக்கு அடியில் அதிக அளவில் இயற்கை எரிவாயு இருக்கலாம் என்றும், அது சிறிய துவாரம் வழியாக வெளியேறுவதால் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
1967-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெய்த கனமழையின் காரணமாக அருவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த தீ அணைந்தது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் தீ எரிய தொடங்கியது. இந்த அருவி முக்கிய சுற்றுலாதலமாக விளங்குகிறது. இந்த அதிசயத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு வருகிறார்கள்.
* இதேபோல் முன்பு ரஷியாவின் ஓர் அங்கமாக இருந்து பின்னர் பிரிந்த அஜர்பைஜான் நாட்டில் எரியும் மலை ஒன்று உள்ளது. இந்த நாட்டின் தலைநகர் பாகுவில் இருந்து 25 கி.மீ. தொலைவில் காஸ்பியன் கடல் அருகே 'யானர்தக்' என்ற சிறிய மலைக்குன்று உள்ளது. 'யானர்தக்' என்றால் 'நெருப்பு எரியும் மலை' என்று அர்த்தம். இந்த குன்றின் அடியில் உள்ள தரைப்பகுதியில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு 4 அடி உயரத்தில் எப்போதும் தீ எரிந்து கொண்டே இருக்கிறது. மழைக்காலத்திலும், கடும் பனிக்காலத்திலும் கூட அணையாமல் நெருப்பு எரிகிறது. சில சமயங்களில் 30 அடி உயரத்துக்குகூட தீப்பிழம்பு எழுகிறது.
700 ஆண்டுகளாக இந்த நெருப்பு எரிவதாக கூறப்படுகிறது. 1950-ம் ஆண்டு அங்கு ஆடு மேய்க்கச் சென்ற ஒருவர் பூமிக்கு அடியில் இருந்து தீ எரிவதை முதன் முதலாக பார்த்து இருக்கிறார். அது முதல் தொடர்ந்து எரிந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த இடத்தில் பூமிக்கு அடியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு அதிக அளவில் இருக்கலாம் என்றும், அது பிளவுகள் வழியாக தொடர்ந்து வெளியேறுவதால் தீ எரிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அஜர்பைஜான் அரசு யானர்தக்கை சுற்றுலாதலமாக அறிவித்து உள்ளது. எரியும் நெருப்பை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள். சிலர் ஏதாவது வேண்டுதல் நிறைவேறக்கோரி அந்த இடத்தில் நாணயங்களையும் வீசிச்செல்கிறார்கள்.
வெந்நீர் ஊற்று
துருக்கி நாட்டில் உள்ள பமுக்கலே வெந்நீர் ஊற்று உலக பிரசித்தி பெற்றது. துருக்கியின் டெலிசிலி மாகாணத்தில் மென்டரெஸ் ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்று 8,860 அடி நீளமும், 1,970 அடி அகலமும், 525 அடி உயரமும் கொண்டது. கால்சியம் கார்பனேட் கலந்த வெந்நீர் இதில் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கிறது. இங்கு 17 வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் மாறுபட்ட வெப்பநிலையை கொண்டுள்ளன. வெந்நீரின் வெப்பநிலை 35 டிகிரி முதல் 100 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இந்த வெந்நீரில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால் நீர் வழிந்தோடும் பகுதி முழுவதும் அடுக்கடுக்காக கனிம படிவுப்பாறைகள் தோன்றி உள்ளன. இந்த பாறைகள் பார்ப்பதற்கு வெண்மையான பனிப்பாறைகள் போன்று காட்சி அளிப்பதால், இதை 'பஞ்சு மாளிகை' என்று அழைக்கிறார்கள்.
இந்த வெந்நீர் ஊற்றுகளில் குளித்தால் இதய நோய், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் களைப்பு, செரிமான சிக்கல் போன்றவை குணமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதனால் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகிறார்கள். இந்த வெந்நீர் ஊற்றுகளும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.
பாம்புத்தீவு
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரேசிலுக்கு சொந்தமான இலா டா குயின்மாடா கிராண்ட் என்ற தீவு உலகில் உள்ள ஆபத்தான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 43 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த தீவில் லட்சக்கணக்கான கொடிய விஷம் கொண்ட பாம்புகள் வசிக்கின்றன. ஒரு சதுர மீட்டருக்குள் 5 பாம்புகள் உள்ளன என்றால் எவ்வளவு பாம்புகள் இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்களேன்!... இதனால் இதை பாம்புத் தீவு என்று அழைக்கிறார்கள்.
இங்குள்ள பாம்புகள் கடித்தால் 10 முதல் 15 நிமிடத்துக்குள் மரணம் நிச்சயம்.
பிரேசில் நாட்டில் நிகழும் பாம்புக்கடி மரணங்களில் 90 சதவீதம் இங்குள்ள பாம்புகள் கடிப்பதால் நிகழ்கிறது. இதனால் இந்த பாம்புத் தீவுக்கு மக்கள் செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது.
தற்கொலை காடு
ஜப்பானின் பியூஜி மலையின் அடிவாரத்தில் ஆஹிகாஹரா என்ற மரங்கள் நிறைந்த காடு உள்ளது. இதை உலகின் தற்கொலை காடு என்று அழைக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த காட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது பற்றிய விவரங்களை உள்ளூர் போலீசார் சேகரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் எதற்காக அங்கு சென்று தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது இன்னும் கண்டறியப்படாத மர்மமாகவே உள்ளது.
இதற்கு பழங்கால கதை ஒன்றை சொல்கிறார்கள். முன்னொரு காலத்தில் ஆஹிகாஹரா காட்டுக்கு சென்ற சிலர் உணவு கிடைக்காமல் வறுமையால் இறந்ததாகவும், அவர்களுடைய ஆவிகள் அங்கு வருபவர்களை தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். அங்கு ஏற்கனவே இறந்த மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்களின் ஆவிகள் அங்குள்ள மரங்களில் குடியிருப்பதாகவும், காட்டுக்குள் வருபவர்களை அந்த ஆவிகள் அங்கிருந்து திரும்பிச்செல்ல விடுவதில்லை என்றும் கூறி பீதியை கிளப்புகிறார்கள்.
வினோத மரங்கள்
மரங்கள் என்றால் நேராக வளரும் அல்லது சாய்ந்து வளரும். ஆனால் ஐரோப்பிய நாடான போலந்தின் வடமேற்கு பகுதியில் ஓர் இடத்தில் எல்லா மரங்களும் அடியில் ஒரே மாதிரி வளைந்து பின்னர் நேராக வளர்வது வினோதமான இருக்கிறது.
இங்குள்ள கரிபினோ என்ற நகருக்கு அருகில் உள்ளது சர்னோவா என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பைன் மர தோப்பில் இருக்கும் எல்லா மரங்களும் அடியில் 90 டிகிரிக்கு பக்கவாட்டில் வளைந்து பின்னர் மேல் நோக்கி நேராக வளர்ந்துள்ளன. 1930-ம் ஆண்டில் நடப்பட்ட பைன் மரக்கன்றுகள் இப்படி வளர்ந்து இப்போது மிகப்பெரிய மரங்களான உள்ளன. எல்லா மரங்களும் ஒரே மாதிரி வளைந்து பின்னர் நேராக மேல் நோக்கி வளர்ந்தது எப்படி? என்பது இன்னும் ஆச்சரியமாகவும், விடை காண முடியாத மர்மமாகவும் உள்ளது. பைன் மரங்கள் கன்றாக இருந்த சமயத்தில் பெரிய அளவில் பனிப்புயல் வீசி இருக்கலாம் எனவும், அதனால் அவையெல்லாம் ஒரே மாதிரி வளைந்து பின்னர் மேல் நோக்கி வளர்ந்து இருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. ஆனால் அதற்காக ஆதாரங்கள் எதுவும் இல்லை.
பொம்மைகள் தீவு
தென்அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 2 மணி நேர பயண தூரத்தில் பொம்மைகள் தீவு என்ற ஒரு தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள மரங்கள் அனைத்திலும் ஏராளமான பொம்மைகள் கட்டி தொங்கவிடப்பட்டு இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
இதற்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. மனித நடமாட்டம் இல்லாத இந்த தீவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு டான் ஜூலியன் சன்டானா பெரேரா என்பவர் தனது மனைவியுடன் சென்று வசித்தார். அப்போது அங்குள்ள ஒரு கால்வாயில் பெண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்ததை கண்ட அவர், அந்த குழந்தையின் ஆன்மாதான் தன்னை தீவுக்கு அழைத்து வந்ததாக கருதினார். அந்த கெட்ட ஆவியால் தனக்கும் தன் மனைவிக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று வேண்டி அங்குள்ள மரங்களில் அவர் பொம்மைகளை கட்டி வைத்தார். இப்படி அந்த தம்பதி மரணம் அடையும் வரை பொம்மைகளை கட்டி வைத்ததால், தீவில் உள்ள மரங்கள் முழுவதும் தற்போது பொம்மைகளாக காட்சி அளிக்கின்றன.
அண்டார்டிகாவில் ரத்த ஆறு
பூமிப்பந்தின் தென் துருவத்தில் உள்ள அண்டார்டிகா கண்டம், எங்கும் பனிப்பாறைகள் நிறைந்த குளிர் பிரதேசம் என்பது நாம் அறிந்ததே. அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் சிவப்பு நிற பனிப்படிவங்களுடன் கூடிய டெய்லர் பனியாறு என்ற ஓர் ஆறு ஓடுகிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தாமஸ் கிரிபித் டெய்லர் என்ற புவியியல் ஆராய்ச்சியாளர் 1911-ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார். இதனால் அவரது பெயரிலேயே டெய்லர் பனி ஆறு என்று அழைக்கப்படுகிறது.
54 கி.மீ. நீளம் கொண்ட இந்த பனி ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் பனிப்பாறைகளால் மூடப்பட்ட போனி ஏரியில் கலக்கிறது. ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் சிவப்பு நிறத்தில் ஏரியில் விழுகிறது. இதனால் இதை 'ரத்த அருவி' என்று அழைக்கிறார்கள். பனி ஆற்றின் கீழே 400 மீட்டர் ஆழத்தில் இருந்து வரும் ஆக்சிஜன் அற்ற உப்பு நீர் இரும்பு ஆக்சைடுடன் கலந்து வெளியேறுவதால் இப்படி சிவப்பாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
தூண்களாக மாறிய மலைகள்
சீனாவின் மத்திய பகுதியில் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜியே என்ற இடத்தில் டியான்சி என்ற ஒரு வித்தியாசமான மலை இருக்கிறது. கொடைக்கானலில் 'பில்லர் ராக்' என்ற தூண் பாறை உள்ளது. இங்குள்ள பாறை உயரமான தூண் போல் இருப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது.
ஆனால் டியான்சி மலையில் உள்ள பாறைகள் அனைத்தும் மரம், செடிகொடிகள் நிறைந்த தூண்களாகவே உள்ளன. ஒவ்வொரு மலைத்தூண்களும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. இங்குள்ள உயரமான பாறை தூண் 4,142 அடி உயரம் கொண்டது. இதை குன்லுன் சிகரம் என்று அழைக்கிறார்கள். குறைவான உயரம் கொண்ட 1,752 அடி தூண் ஷிலான்யு என அழைக்கப்படுகிறது.
30 கோடி ஆண்டுகளுக்கு முன் காற்று மற்றும் தண்ணீரால் மலைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு இப்படி தனித்தனி தூண்களாக உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சீனாவின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்கும் டியான்சி மலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல ரோப் கார் வசதி உள்ளது. மேலும் உயரமான பாறைத்தூணின் பக்கவாட்டில் கண்ணாடியால் நடைபாதை அமைத்து இருக்கிறார்கள். அதில் நடந்து சென்று அதல பாதாளத்தை பார்த்து ரசிப்பதற்காகவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பாதி தூரம் சென்ற பிறகு பயத்தில் அலறி, கண்ணாடியில் தவழ்ந்தபடி திரும்பிவிடுபவர்களும் உண்டு.
அவ்வளவு உயரத்தில் நடந்து போகும் போது சுற்றிலும் மேகங்கள் தவழ்ந்து செல்லும். அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த இந்த மலைப்பகுதி குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். யுனெஸ்கோ அமைப்பு 1992-ம் ஆண்டு இந்த மலையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
'ஜெயின்ட்ஸ் காஸ்வே'
ஐரோப்பா கண்டத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அயர்லாந்து நாட்டின் அன்ட்ரிம் மாகாணத்தில் வினோதமான இயற்கை அதிசயம் ஒன்று உள்ளது. இந்த மாகாணத்தில் அட்லாண்டிக் பெருங்கடலையொட்டி ஜெயின்ட்ஸ் காஸ்வே என்ற ஓர் இடம் இருக்கிறது. இங்கு வீடுகளின் முற்றத்திலோ அல்லது சாலைகளில் நடைபாதையிலோ ஒன்றுடன் ஒன்று இணைந்து பிடித்துக்கொள்ளும் வகையில் பதிக்கப்பட்டு இருக்கும் 'இன்டர்லாக்கிங்' சிமெண்டு கற்கள் போன்று ஏராளமான கற்கள் இணைந்து காணப்படுகின்றன.
இந்த கற்கள் பெரும்பாலும் அறுங்கோண வடிவில் உள்ளன. சில கற்கள் நாற்கோணம், ஐங்கோணம், எழுகோணம், எண்கோணம் வடிவிலும் உள்ளன. பல கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிய தூண் போல் காணப்படுகின்றன. இவற்றில் சில தூண்கள் 100 அடி உயரம் வரை உள்ளன. பெரும்பாலான தூண்களின் அடிப்பகுதி கடலுக்குள் மூழ்கி இருக்கிறது. இப்படி சுமார் 40 ஆயிரம் கற்கள் கடற்கரை முழுவதும் பதிக்கப்பட்டது போல் காணப்படுகிறது.
சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதியில் மிகப்பெரிய எரிமலை இருந்திருக்கலாம் என்றும், அந்த எரிமலை வெடித்ததால் ஏற்பட்டு வெளியேறிய குழம்பு நாளடைவில் குளிர்ந்து கல்லாக மாறி இப்படிப்பட்ட அமைப்பு உருவாகி இருக்கலாம் என்றும் புவியியலாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த அதிசயத்தை பார்ப்பதற்காக ஆண்டுதோறும் இங்கு லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அங்குள்ள இரு மலைகளுக்கு இடையே தொங்கு பாலமும் உள்ளது. 'யுனெஸ்கோ' அமைப்பு 1986-ம் ஆண்டு இந்த 'ஜெயின்ட்ஸ் காஸ்வே'யை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
புதைசேறு எரிமலைகள்
உலகில் ஜப்பான், இத்தாலி, அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பல இடங்களில் எரிமலைகள் உள்ளன. இந்த எரிமலைகள் அவ்வப்போது வெடித்து தீப்பிழம்பையும், சாம்பல் புகையையும் கக்கும்.
வெப்பம் மிகுந்த சேற்றை மட்டுமே கக்கும் மற்றொரு வகை எரிமலைகளும் உள்ளன. இவற்றை புதை சேறு எரிமலைகள் ('மட் வல்கனோ') என்கிறார்கள். பூமிக்கு அடியில் இருந்து திரவங்கள் மற்றும் மீத்தேன், கரியமில வாயுக்களுடன் கூடிய வெப்பம் மிகுந்த சகதி எரிமலையின் வாய்ப்பகுதி வழியாக வெளியேறும். இந்த சேறு எரிமலைக்குழம்பை (லாவா) விட வெப்பம் குறைந்ததாகவே இருக்கும்.
அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான், இத்தாலி, ரஷியா, பல்கேரியா, ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் இத்தகைய எரிமலைகள் உள்ளன. அஜர்பைஜானில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட புதைசேறு எரிமலைகள் இருக்கின்றன. இங்கு பாகு நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள புதைசேறு எரிமலை கடந்த 2001-ம் ஆண்டு வெடித்த போது 50 அடி உயரத்துக்கு சேறு பீய்ச்சி அடித்தது.
இந்தியாவில் அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் அடங்கியுள்ள பராடாங் என்ற தீவில் புதைசேறு எரிமலை உள்ளது. பராடாங்கில் இருந்து 45 கி.மீ. தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. கடைசியாக 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு அதனால் சுனாமி அலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து 2005-ம் ஆண்டில் இந்த புதை சேறு எரிமலை வெடித்தது. அதில் இருந்து குமிழ் குமிழாக கறுப்பு நிற களிமண் சேறு வெளியேறியது. சில நாட்களில் அந்த சேறு வெளியேறுவது நின்றுவிட்டது. அதற்கு முன்னதாக 2003-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி இந்த புதை சேறு எரிமலை வெடித்தது.
விதைகள் பாதுகாப்பு பெட்டகம்
நம் நாட்டில் கோவில் கோபுரங்களில் கலசங்கள் வைக்கப்பட்டு இருப்பது அழகுக்காக மட்டுமல்ல; அவை தானிய சேமிப்பு கலசங்கள் ஆகும். அந்த கலசங்களுக்குள் தானியங்கள் நிரப்பப்பட்டு இருக்கும். அவை 12 ஆண்டுகள் வரை கெடாமல் பாதுகாப்பாக இருக்கும். அதன்பிறகு அவற்றை மாற்றிவிட்டு புதிதாக தானியங்களை நிரப்புவார்கள். இதனால்தான் கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பெரும் மழை, கடும் வறட்சி போன்றவற்றால் தானியங்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டால், கோபுர கலசங்களில் பாதுகாப்பாக இருக்கும் தானியங்களை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற முன்னெச்சரிக்கை சிந்தனையுடன் நம் முன்னோர்கள் இந்த தானிய பாதுகாப்பு முறையை கொண்டு வந்தனர்.
இதை அடிப்படையாக கொண்டு உணவுப் பஞ்சத்தில் இருந்து மனிதகுலத்தையும், அழிவில் இருந்த தாவரங்கள்-செடிகொடிகளை பாதுகாக்கவும் உலக அளவில் 'விதை பாதுகாப்பு பெட்டகம்' ('குளோபல் சீட் வால்ட்') ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. எங்கே?...
ஐரோப்பா கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நார்வே நாட்டுக்கு சொந்தமாக ஆர்டிக் கடலில் ஏராளமான தீவுகள் உள்ளன. அதில் ஒன்றான ஸ்பிட்ஸ்பெர்கன் என்ற தீவில்தான் இந்த விதை பாதுகாப்பு பெட்டகம் உள்ளது.
பனிப்பிரதேசமாக விளங்கும் இந்த தீவில் பூமிக்கு அடியில் 11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பெட்டகத்தில் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் கொண்டுவரப்பட்ட பல்வேறு வகையான தாவரங்கள், செடிகளின் 10 கோடி விதைகள் மைனஸ் 18 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளன. தீவிபத்து, பூகம்பம், எரிமலை வெடிப்பு, கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை பேரிடர்களாலோ அல்லது போர், நாசவேலை, தவறான நிர்வாகம் போன்றவற்றாலோ ஏதாவது தாவர இனங்கள் அழிந்து போக வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பூமியில் உணவு பஞ்சம் ஏற்படும் ஆபத்து உண்டாகலாம். அந்த சமயத்தில் இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து விதைகளை எடுத்து பயிர் செய்து உணவுப்பஞ்சத்தை போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த பாதுகாப்பு பெட்டகம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
நார்வே அரசு, தானியங்கள் அறக்கட்டளை, நார்டிக் மரபணு ஆதார மையம் ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு ஒப்பந்தத்தில் அடிப்படையில் 88 லட்சம் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதுகாப்பு பெட்டகம் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி முழுவதையும் நார்வே அரசு வழங்கி உள்ளது.
இங்கு வைக்கப்பட்டு இருக்கும் விதைகள் 200 ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும். 200 ஆண்டுகள் முடிந்ததும் அங்குள்ள பழைய விதைகளை அப்புறப்படுத்திவிட்டு புதிய விதைகளை வைத்து விடுவார்கள்.
'டாடி'யின் உயிரைப் பறித்த 'தாடி'
பெரிய மீசை, தாடி வைத்திருப்பவர்கள் புகைப்பிடிக்கும் போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஏனெனில் சில சமயங்களில் மீசையிலோ, தாடியிலோ நெருப்பு பட்டுவிடும் ஆபத்து உள்ளது. ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் தாடியால் ஒரு 'டாடி'யின் (மாநகர தந்தை) உயிரே போய் இருக்கிறது. ஆஸ்திரியாவில் ஜெர்மனியையொட்டி அமைந்துள்ள நகரம் பிரனாவ் அம் இன். 16-ம் நூற்றாண்டில் இந்த நகரின் மேயராக இருந்தவர் ஹன்ஸ் ஸ்டீனிங்கர். இவர் 4 அடி நீளத்துக்கு தாடி வைத்திருந்தார். மேயர் என்பதை விட தாடியின் மூலமே இவர் பிரபலம் ஆனார்.
இவர் மேயராக இருந்த காலகட்டத்தில் 1567-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி அந்த நகரில் திடீரென்று பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டது. மேயர் ஸ்டீனிங்கர் இருந்த கட்டிடத்திலும் தீப்பற்றிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மாடியில் இருந்த ஸ்டீனிங்கரை கஷ்டப்பட்டு மீட்டு படி வழியாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். ஸ்டீனிங்கர் அவசர அவசரமாக இறங்கியதால் எதிர்பாராதவிதமாக காலுக்கு அடியில் அவரது தாடி சிக்கிக் கொண்டது. இதனால் நிலை தடுமாறிய படிகளில் உருண்டு விழுந்ததில், கழுத்து எலும்பு முறிந்து பரிதாபமாக உயிரிந்தார்.
ஆசையாக வளர்த்த தாடியே மேயருக்கு எமனாக அமைந்துவிட்டது.
ஸ்டீனிங்கர் மறைந்து 450 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், அவரது நீண்ட தாடி மட்டும் அங்குள்ள மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
இது இயற்கை அதிசயம் அல்ல. இதை விதியின் விளையாட்டு என்பதா? அல்லது சொந்த செலவில் தனக்குத் தானே சூனியம் வைத்துக்கொண்டதாக சொல்வதா?
பாலைவனத்தில் 'கண்'
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 92 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய பாலைவனமான சகாரா எகிப்து, லிபியா, அல்ஜீரியா, மவுரிதானியா, மொராக்கோ, சூடான் உள்ளிட்ட 11 நாடுகளில் பரந்து விரிந்துள்ளது.
மவுரிதானியா நாட்டில் சகாரா பாலைவனத்தில் அட்ரா பீடபூமி என்ற இடத்தில் நீல நிறத்தில் கண் போன்ற வட்டமான பகுதி ஒன்று உள்ளது. இதன் விட்டம் 40 கி.மீ. ஆகும். இந்த பிரமாண்ட வட்டத்தின் பெரும்பாலான பகுதி அடுக்கு பாறைகளால் அமைந்துள்ளது. இதை ரிச்சட் வடிவம் என்கிறார்கள்.