< Back
சிறப்பு பக்கம்
மொசாத்... கதையல்ல நிஜம்...
சிறப்பு பக்கம்

'மொசாத்'... கதையல்ல நிஜம்...

தினத்தந்தி
|
16 Oct 2023 3:12 PM IST

இஸ்ரேலின் 'மொசாத்' உளவுப்படை மிகவும் திறமைவாய்ந்ததாகவும், சாதுர்யம் மிக்கதாகவும் கருதப்படுகிறது.

காற்று... கண்ணுக்கு தெரிவதில்லை; ஆனால் அது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது.உளவு அமைப்புகளும் அப்படித்தான். உளவாளிகள் யார்? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? எப்படி தகவல் சேகரிக்கிறார்கள்? என்பது பற்றி சாமானிய மக்களுக்கு எதுவும் தெரியாது. காற்றைப்போல் அவர்கள் எங்கும் பரவி இருப்பார்கள்.

இந்த உளவு பார்க்கும் வேலை என்பது மன்னர்கள் காலத்தில் இருந்தே இருக்கிறது. அரசர்கள் ஒற்றர்களை நியமித்து அவர்கள் மூலம், நாட்டில் என்ன நடக்கிறது? மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அரசுக்கு எதிராக யாராவது சதி செய்கிறார்களா? எதிரி நாடு போர் தொடுக்குமா? என்பது பற்றியெல்லாம் மோப்பம் பிடிப்பார்கள். அந்த நடைமுறைதான் காலமாற்றத்துக்கு ஏற்ப இப்போது நவீனமாகி உளவுப்படையாக மாறி இருக்கிறது.

ஒரு நாட்டின் பாதுகாப்பில் உளவுப்படையினருக்கு முக்கிய பங்கு உள்ளது. இயக்கங்கள், அமைப்புகளின் செயல்பாடுகள், அவற்றுக்குள்ள தொடர்புகள், அரசுக்கு எதிராக நடைபெறும் சதி, போராட்டங்கள் போன்றவை தொடர்பான புலனாய்வு தகவல்களை ரகசியமாக சேகரித்து மேல் நடவடிக்கைகளுக்காக அரசுக்கு வழங்குவதுதான் உளவுப்படையின் முக்கிய பணி.

எல்லா நாடுகளும் உளவுப்படையை வைத்துள்ளன. நம் நாட்டில் 'ரா' உளவுப்படை இருப்பதை போன்று அமெரிக்காவில் எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. உள்ளது. ரஷியாவில் கே.ஜி.பி. என்ற அமைப்பும், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ. உளவுப்படையும் செயல்படுகின்றன. அந்த வகையில், மேற்கு ஆசியாவில் உள்ள குட்டி நாடான இஸ்ரேலின் 'மொசாத்' ('புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் நிறுவனம்') உளவுப்படை மிகவும் திறமைவாய்ந்ததாகவும், சாதுர்யம் மிக்கதாகவும் கருதப்படுகிறது.

புலனாய்வு தகவல்களை சேகரிப்பது, எதிரிகளுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைகள் எடுப்பது, இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை ஒடுக்குவது ஆகியவை இதன் முக்கிய பணிகள் ஆகும். மொசாத்தின் இயக்குனர் நாட்டின் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டவர். வேறு யாரும் அவரை கேள்வி கேட்க முடியாது. டேவிட் பர்னியா என்பவர் தற்போது இதன் இயக்குனராக உள்ளார். எதிரிகளை ஒடுக்க வியூகங்களை வகுப்பதில் கில்லாடியான மொசாத்தின் கணிப்புகளும், உளவுத்தகவல்களும் சரியாகவே இருக்கும் என்பதை கடந்த காலத்தில் நடந்த பல சம்பவங்கள் நிரூபித்து இருக்கின்றன.

அப்படிப்பட்ட மொசாத்துக்கு கடந்த 7-ந்தேதி களங்கம் ஏற்படுத்தும் கறுப்பு நாளாக அமைந்தது. எப்படி?...

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வரும் நிலையில், பாலஸ்தீனர்களிடம் இருந்த மத்திய தரைக்கடலையொட்டிய காசா மலைக்குன்று பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கடந்த 2007-ம் ஆண்டு கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி முட்டல்களும், மோதல்களும் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் 7-ந்தேதி திடீரென்று அதிரடி தாக்குதல் நடத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்தனர். காசா பகுதியில் இருந்து ஒரே சமயத்தில் சுமார் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியதோடு எல்லையில் அந்த நாடு அமைத்துள்ள தடுப்பு சுவரை தகர்த்து எறிந்து விட்டு உள்ளே புகுந்தனர். வாகனங்கள், 'பாரா கிளைடர்'கள் மற்றும் கடல் மார்க்கமாக உள்ளே நுழைந்த அவர்கள் சுமார் 24 கி.மீ. தூரம் ஊடுருவி சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இஸ்ரேலின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலை தொடங்கிய அதே நேரத்தில், சிரியாவை ஒட்டியுள்ள வடபகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். கடுமையான பதிலடி தாக்குதல் நடத்தி நாட்டின் தென்பகுதி முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள இஸ்ரேல் ராணுவம், தொடர்ந்து ஏவுகணைகளை வீசி தாக்கியதில் காசா நகரில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

நன்றாக திட்டமிட்டு ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய இந்த அதிரடி தாக்குதல் மொசாத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகவே கருதப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களையும், பயங்கரவாத இயக்கங்களின் அசைவுகள் பற்றிய விவரங்களையும் துல்லியமாக திரட்டி எப்போதும் உஷாராகவே இருக்கும் மொசாத் எப்படி கோட்டை விட்டது? என்பது இஸ்ரேல் அரசுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மொசாத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்த்தால், அது வச்ச குறி பெரும்பாலும் தப்புவதில்லை. பல தாக்குதல் மற்றும் உளவு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது. ஈராக் விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 விமானம் ஒன்றை 1964-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு கடத்திச்சென்றது. ஈராக் அணுஉலை அமைக்க பெரிதும் உதவியாக இருந்த எகிப்து நாட்டைச் சேர்ந்த அணு விஞ்ஞானி ஏகியா எல்-மஷாத் 1980-ம் ஆண்டு ஜூன் 13-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மொசாத் உளவாளிகளால் கொல்லப்பட்டார். இதேபோல் பாலஸ்தீன விஞ்ஞானி பதி அல்-பட்ஷ் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொல்லப்பட்டார். பிற நாடுகளில் இஸ்ரேல் மற்றும் யூதர்களுக்கு எதிராக செயல்படும் தலைவர்கள் மொசாத் உளவாளிகள் உதவியுடன் தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கிறார்கள்.

அதில் முக்கியமான இரு சம்பவங்களை மட்டும் பார்ப்போம்...

1976-ம் ஆண்டு ஜூன் 27-ந்தேதி இஸ்ரேலின் வரலாற்றில் மறக்க முடியாத நாள் மட்டுமின்றி, மொசாத்தின் திறமைக்கு சவாலாக அமைந்த நாளும்கூட...

அன்று பகல் 12.30 மணிக்கு ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ-300 ரக விமானம் ஒன்று 246 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகளுடன் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டுச் சென்றது. வழியில் கிரீஸ் தலைநகர் ஏதென்சில் இறங்கிவிட்டு கிளம்பிய சிறிது நேரத்தில், அதில் பயணித்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இருவர் என 4 பேர் விமானத்தை லிபியாவில் உள்ள பென்ஹாசி நகருக்கு கடத்தி சென்றனர்.

அங்கு பாட்ரீசியா மார்ட்டெல் என்ற ஒரு பெண் பயணியை மட்டும் விடுதலை செய்த கடத்தல்காரர்கள், விமானத்துக்கு எரிபொருள் நிரப்பிக்கொண்டு மறுநாள் அதிகாலை அங்கிருந்து விமானத்தை உகாண்டாவில் உள்ள என்டெப்பே விமான நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விமானம் தரையிறங்கியதும் மேலும் 3 பேர் கடத்தல்காரர்களுடன் சேர்ந்து கொண்டனர். அப்போது உகாண்டாவின் அதிபராக இருந்த இடி அமீனுக்கும் இஸ்ரேலுக்கும் ஏழாம் பொருத்தம். இதனால்தான் கடத்தல்காரர்கள் விமானத்தை அங்கு கடத்திச் சென்றனர். கடத்தல்காரர்களுக்கு இடி அமீன் அரசு ஆதரவு அளித்ததோடு, தேவையான உதவிகளும் செய்தது. விமானநிலைய கட்டிடத்தின் பிரதான ஹாலில் உகாண்டா ராணுவ பாதுகாப்புடன் விமான பயணிகளை தங்கவைத்தனர். இஸ்ரேலியர்கள் மட்டும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

பயணிகளை விடுவிக்க இஸ்ரேல் சிறைகளில் உள்ள 40 பாலஸ்தீன போராளிகளையும் மற்றும் வேறு நாடுகளில் உள்ள பாலஸ்தீனத்துக்கு ஆதரவான 13 போராளிகளையும் விடுவிக்க வேண்டும் என்றும், அத்துடன் விமானத்தை ஒப்படைக்க 50 லட்சம் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் ஜூலை 1-ந்தேதி முதல் பயணிகள் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தனர்.

அதிபர் இடி அமீன் தனது கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் காரில் தினசரி விமானநிலையத்துக்கு வந்து பணய கைதிகளாக இருக்கும் பயணிகளை பார்ப்பதோடு, பேச்சுவார்த்தை மூலம் அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்துவிட்டு செல்வார். என்றாலும் பயணிகளுக்கு நம்பிக்கை இல்லை.

இதற்கிடையே, அமெரிக்க அரசின் மூலம் எகிப்து அதிபர் அன்வர் சதாத் உதவியுடன் பயணிகளை மீட்பதற்கான முயற்சிகளை இஸ்ரேல் அரசு மேற்கொண்டது. பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த போதே ஜூன் 30-ந்தேதி இஸ்ரேலியர்கள் அல்லாத பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என 48 பேரை விடுவித்த கடத்தல்காரர்கள், தாங்கள் விதித்த 'கெடு'வை ஜூலை 4-ந்தேதி வரை நீடித்தனர். அதன்பிறகு ஜூலை 1-ந்தேதி மேலும் 100 பயணிகளை விடுதலை செய்தனர். விடுதலை செய்யப்பட்ட 148 பேரும் தனி விமானங்களில் பாரீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், இடிஅமீன் உதவியுடன் கடத்தல்காரர்களுடன் பேசி மற்ற பயணிகளை விடுவிப்பதற்காக தனது அரசியல் ஆலோசகர் ஹனி அல்-ஹசனை உகாண்டாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவரை சந்திக்க கடத்தல்காரர்கள் மறுத்துவிட்டனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூடிய இஸ்ரேல் மந்திரிசபை, கடத்தல்காரர்களின் கோரிக்கையை நிராகரிப்பது என்றும், ராணுவ நடவடிக்கை மூலம் விமான பயணிகளை மீட்பது என்றும் தீர்மானித்தது. இந்த முடிவு ரகசியமாக வைக்கப்பட்டு, தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன.

இதற்கு தேவையான புலனாய்வு தகவல்களையெல்லாம் மொசாத் திரட்டிக் கொடுத்தது. அதாவது விடுதலையாகி பாரீஸ் போய்ச் சேர்ந்த பயணிகளை மொசாத் உளவாளிகள் சந்தித்து உகாண்டாவின் என்டெப்பே விமானநிலையத்தில் பணய கைதிகள் வைக்கப்பட்டுள்ள அறை, அங்குள்ள பாதுகாப்பு நிலவரம் மற்றும் கடத்தல்காரர்கள் பற்றிய விவரங்களையெல்லாம் துல்லியமாக கேட்டறிந்து அந்த தகவல்களை அரசுக்கு வழங்கியது.

ஆனால் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு ராணுவத்தை அனுப்பி கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து பயணிகளை மீட்பது என்பது சாதாரண காரியமா? அது சவாலான பணி மட்டுமின்றி, மிகவும் ஆபத்தான முயற்சியும் ஆகும். என்றாலும் மொசாத் வகுத்துக்கொடுத்த திட்டம் அதை சாத்தியமாக்கியது. இஸ்ரேலில் இருந்து என்டெப்பே நகருக்கு 4,000 கி.மீ. தூரம் சென்று திரும்பி வரவேண்டுமானால் வழியில் எங்காவது விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டும். ஆனால் இடி அமீன் மற்றும் பாலஸ்தீனர்களின் கோபத்துக்கு ஏன் ஆளாகவேண்டும் என்று கருதி பல கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் இஸ்ரேல் விமானங்கள் தங்கள் மண்ணில் இறங்குவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கென்யா மட்டும் இஸ்ரேலுக்கு உதவ முன்வந்தது.

இதைத்தொடர்ந்து, அனைத்து ஏற்பாடுகளையும் கச்சிதமாக செய்து விட்டு மீட்பு நடவடிக்கையில் இறங்கியது இஸ்ரேல் ராணுவம். அதிரடிப்படை கமாண்டோக்கள் 100 பேருடன் இஸ்ரேல் ராணுவத்தின் 'லாக்கீடு சி-130 ஹெர்குலிஸ்' சரக்கு விமானம் இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள ஷாம் எல்-ஷேக் விமான நிலையத்தில் இருந்து ஜூலை 3-ந்தேதி இரவு உகாண்டாவுக்கு ரகசியமாக கிளம்பிச் சென்றது. எகிப்து, சூடான் நாடுகளின் ரேடார் பார்வையில் இருந்து தப்புவதற்காக அந்த விமானம் மாற்றுப் பாதையில் சென்றது. மேலும் மருத்துவ உபகரணங்களுடன் 2 போயிங் விமானங்களும் அதனுடன் சென்றன. அதில் ஒரு விமானம் கென்யா தலைநகர் நைரோபி விமானநிலையத்தில் தரை இறங்கியது.

அதிரடிப்படை வீரர்கள் சென்ற விமானம் இரவு சரியாக 11 மணிக்கு என்டெப்பே விமானநிலையத்தில் தரை இறங்கியது. விமானி அதை சரக்கு விமானங்கள் நிறுத்தப்படும் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தினார். இஸ்ரேல் விமானம் அங்கு வந்து தரை இறங்கியது யாருக்கும் தெரியாது. விமானநிலைய ஊழியர்களும், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பாதுகாப்பு படையினரும், ஏதோ சரக்கு விமானம்தான் வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டனர்.

பணய கைதிகளை பார்க்க விமான நிலையத்துக்கு இடி அமீன் வழக்கமாக கறுப்பு மெர்சிடிஸ் பென்ஸ் காரில் வருவதை அறிந்து அதுபோன்ற ஒரு கறுப்பு நிற பென்ஸ் காரையும் மற்றும் அவருக்கு பாதுகாப்பாக செல்லும் லேண்ட் ரோவர்ஸ் போன்ற இரு கார்களையும் அதிரடிப்படை வீரர்கள் அந்த சரக்கு விமானத்தில் கொண்டு சென்றிருந்தனர். விமானம் நின்றதும் அதில் இருந்து அந்த மூன்று கார்களும் வெளியே வர, அதிரடிப்படை வீரர்கள் அவற்றில் ஏறி, பயணிகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் விமானநிலைய கட்டிடத்தை நோக்கி விரைந்தனர்.

அங்குதான் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது. கட்டிடத்தை நெருங்கியதும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இரு உகாண்டா ராணுவ வீரர்களுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ''இடி அமீன் சமீபத்தில் புதிதாக வாங்கிய வெள்ளை நிற பென்ஸ் காரில்தானே வருகிறார். இது என்ன கறுப்பு நிற பென்ஸ் கார்?'' என்று சந்தேகப்பட்டு, அதிரடிப்படை வீரர்கள் வந்த காரை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். இதனால் உஷாரான அதிரடிப்படை வீரர்கள், 'சைலன்சர்' பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கி மூலம் அவர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்தினர். பின்னர் அவர்கள் கார்களை நிறுத்திவிட்டு இறங்கி பயணிகள் வைக்கப்பட்டு இருக்கும் மண்டபத்துக்குள் திபு திபுவென ஓடினார்கள். அவர்கள் வருவதை பார்த்ததும் உள்ளே இருந்தவர்கள், தங்கள் கதை முடியப் போகிறது என்ற பயத்தில் அலறினார்கள். உடனே அதிரடிப்படை வீரர்கள், ''பயப்படாதீர்கள்; நாங்கள் கடத்தல்காரர்கள் அல்ல; உங்கள் மீட்பதற்காக வந்திருக்கும் இஸ்ரேல் கமாண்டோக்கள்; யாரும் எழுந்திருக்க வேண்டாம் அப்படியே உட்காருங்கள்'' என்று 'மெகாபோன்' மூலம் ஹூப்ரு மொழியிலும், ஆங்கிலத்திலும் கூறினார்கள்.

அதை நம்பாமல் ஒரு பயணி எழுந்து நிற்க, அவரை கடத்தல்காரன் என்று கருதி அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். துப்பாக்கி சூட்டின் போது குண்டு பாய்ந்து அருகில் இருந்த மற்றொரு பயணியும் உயிரிழந்தார். அப்போது சத்தம் கேட்டு அந்த ஹாலுக்குள் வந்த ஒரு கடத்தல்காரனையும் கமாண்டோக்கள் சுட்டு வீழ்த்தினர்.

பின்னர் பயணிகளிடம், ''மற்ற கடத்தல்காரர்கள் எங்கே?'' என்று கேட்க, பீதியில் உறைந்து போய் இருந்த அவர்கள், பக்கத்து அறையை நோக்கி கையை காட்டினார்கள். உடனே கையெறி குண்டுகளை வீசியபடி அந்த அறைக்குள் அதிரடியாக நுழைந்த வீரர்கள், அங்கிருந்த 3 கடத்தல்காரர்களையும் சுட்டுத் தள்ளினார்கள். கடத்தல்காரர்கள் சுட்டதில் ஒரு பயணி உயிரிழந்தார். இதற்கிடையே, பெரிய அளவில் மோதல் ஏற்பட்டால் தேவைப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான ஆயுதங்களுடன் இஸ்ரேலில் இருந்து மேலும் 3 ஹெர்குலிஸ் சரக்கு விமானங்கள் என்டெப்பே விமான நிலையத்தில் வந்து ரகசியமாக தரையிறங்கின. அதற்குள் அதிரடிப்படை கமாண்டோக்கள் பயணிகள் அனைவரையும் மீட்டு தாங்கள் வந்த சரக்கு விமானத்தில் ஏற்றினார்கள். அப்போது சத்தம் கேட்டு விமானநிலையத்தின் மற்ற பகுதிகளில் இருந்த உகாண்டா ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இஸ்ரேல் வீரர்களின் அதிரடி தாக்குதலை உகாண்டா வீரர்களால் சமாளிக்க முடியாததால், சிறிது நேரத்திலேயே இந்த சண்டை முடிவுக்கு வந்தது.

அங்கிருந்து கிளம்புவதற்கு முன், தங்களை பின் தொடர்ந்து வரக்கூடாது என்பதற்காக, விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 12 உகாண்டா போர் விமானங்களை குண்டு வீசியும் மற்றும் விமான கட்டுப்பாட்டு அறையை ராக்கெட்டுகளை வீசியும் கமாண்டோக்கள் தகர்த்தனர். அதன்பிறகு மீட்கப்பட்ட 102 பயணிகளுடன் இஸ்ரேல் விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டன. இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர்களுடன் வந்திருந்த மற்றொரு போயிங் விமானம் விமான நிலையத்துக்கு மேலே வட்டமடித்துக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உலக வரலாற்றில் இதுவரை கேள்விப்பட்டிராத இந்த அதிரடி மீட்பு நடவடிக்கை 53 நிமிடங்களில் நடந்து முடிந்தது.

கடத்தல்காரர்களால் விடுவிக்கப்பட்டவர்கள் போக பணய கைதிகளாக இருந்த பயணிகள் 106 பேரில் 3 பேர் கொல்லப்பட்டு விட்டனர். இங்கிலாந்தைச் சேர்ந்த டோரோ போச் என்ற 74 பெண் பயணியை தூக்கிக் கொண்டு வர முடியாததால் உகாண்டாவிலேயே விட்டுவிட்டனர். (பின்னர் அவர் உகாண்டா ராணுவத்தால் கொல்லப்பட்டார்.) மீட்கப்பட்ட பயணிகளில் 10 பேர் காயம் அடைந்திருந்தனர். மேலும் இந்த மீட்பு நடவடிக்கையின் போது நடந்த சண்டையில் இஸ்ரேல் கமாண்டோ வீரர் ஒருவர் இறந்தார். மேலும் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். 7 கடத்தல்காரர்களும் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்கள். 45 உகாண்டா ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். என்டெப்பே விமான நிலையத்தில் இருந்த வெற்றிகரமாக கிளம்பிய இஸ்ரேல் விமானங்கள் கென்யாவின் நைரோபி நகர் வழியாக தாய் மண்ணை வந்தடைந்தன. இந்த கடத்தல் மற்றும் மீட்பு சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது.

தங்கள் நாட்டுக்குள் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி புகுந்து பணய கைதிகளை மீட்டுச்சென்றது உகாண்டா அதிபர் இடி அமீனுக்கு கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு உதவிய கென்யாவை பழிவாங்குவதற்காக உகாண்டாவில் வசிக்கும் கென்யர்களை சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டார். இதனால் 245 கென்யர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் 3,000 கென்யர்கள் உகாண்டாவை விட்டு தப்பி ஓடினார்கள். மேலும் இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவி செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 12 உகாண்டா ராணுவ வீரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த விமான கடத்தல் சம்பவமும், மொசாத் உதவியுடன் இஸ்ரேல் ராணுவம் உகாண்டாவுக்குள் துணிச்சலுடன் புகுந்து பயணிகளை மீட்ட சம்பவமும் அப்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொசாத்தின் புகழும் பரவியது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து பின்னர் திரைப்படங்களும், ஆவணப்படங்களும் வெளியாயின.

மொசாத்தின் திறமைக்கு சவாலாக அமைந்த மற்றொரு சம்பவம் 'மூனிச் படுகொலை'.

ஐரோப்பா நாடான ஜெர்மனியில் உள்ள மூனிச் நகரில் 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஆகஸ்டு 26-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய இந்த போட்டியில் 120-க்கும் அதிகமான நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் வீரர்களும் அங்குள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

செப்டம்பர் 5-ந்தேதி எதிர்பாராத ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. அன்று அதிகாலை 4.30 மணி அளவில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் 'பிளாக் செப்டம்பர்' குழுவைச் சேர்ந்த போராளிகள் விளையாட்டு வீரர்கள் போல் உடை அணிந்து சுவர் ஏறி குதித்து ஒலிம்பிக் கிராமத்துக்குள் புகுந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்த மல்யுத்த பயிற்சியாளர் மோஷே வெய்ன்பெர்க், நடுவர் யூசுப் கட்பிரென்ட் ஆகியோர் ஓடிவந்து அவர்களை தடுக்க முயன்றனர். போராளிகள் அவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு இஸ்ரேல் விளையாட்டு வீரர்கள் 11 பேர் தங்கி இருந்த வீட்டுக்குள் சென்றனர். அப்போது நடந்த மோதலில் 2 இஸ்ரேல் வீரர்களை போராளிகள் சுட்டுக் கொன்றனர். மற்ற 9 வீரர்களையும் கண்களை கட்டி பஸ்களில் கடத்திச் சென்றனர். குறிப்பிட்ட தூரம் சென்றதும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்களில் ஏற்றி ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள பஸ்டன்பீல்டுபர்க் விமானப்படை தளத்துக்கு கொண்டு போனார்கள்.

இஸ்ரேல் சிறைகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை விடுவிக்க வேண்டும் என்பதும், மத்திய கிழக்கில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு தாங்கள் பாதுகாப்பாக செல்ல விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் போராளிகளின் முக்கிய கோரிக்கைகள் ஆகும். இதைத்தொடர்ந்து அங்கு தயாராக ஒரு விமானம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், ஜெர்மன் பாதுகாப்பு படையினருக்கும் போராளிகளுக்கும் இடையே திடீரென்று துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. அப்போது போராளிகள் கையெறி குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் சுட்டும் இரு ஹெலிகாப்டர்களையும் தகர்த்தனர். இதனால் அவற்றில் இருந்த 9 இஸ்ரேல் வீரர்களும் பலியானார்கள். 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். 3 பேர் உயிருடன் பிடிபட்டனர். 20 மணி நேரம் நீடித்த இந்த தாக்குதல் சம்பவம் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிராயுதபாணியாக இருந்த தங்கள் விளையாட்டு வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு தாங்க முடியாத கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. மூனிச் படுகொலை நடந்த 2 நாளில் லெபனான், சிரியா நாடுகளில் உள்ள பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் 2 முகாம்களை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தகர்த்தது.

விளையாட்டு வீரர்கள் படுகொலைக்கு காரணமானவர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து தீர்த்துக்கட்டுமாறு, அப்போது இஸ்ரேல் பிரதமராக இருந்த கோல்டா மேயர், மொசாத்துக்கும், ராணுவத்துக்கும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து களத்தில் இறங்கிய மொசாத், 'கடவுளின் கோபம்' என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கையை தொடங்கியது. பல்வேறு நாடுகளிலும் உள்ள தனது உளவாளிகள் மூலம், இஸ்ரேல் வீரர்களின் படுகொலைக்கு காரணமானவர்களை மொசாத் கண்டுபிடித்து தீர்த்துக்கட்டியது. 1972-ல் தொடங்கிய இந்த பழிவாங்கும் வேட்டை 1988 வரை நீடித்தது.

முதன் முதலாக 1972-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி இத்தாலி தலைநகர் ரோமில் பாலஸ்தீன இயக்க பிரதிநிதியான வாயல் ஜவைட்டர் என்பவர் மொசாத் ஏஜெண்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் 8-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 'பிளாக் செப்டம்பர்' குழுவின் தலைவரான மெகமூத் ஹம்சாரி, மொசாத் ஏஜெண்டு ஒருவரால் கொல்லப்பட்டார். அந்த ஏஜெண்டு இத்தாலி பத்திரிகையாளர் என்ற போர்வையில் பேசி, தனது ஆட்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மெகமூத் ஹம்சாரியின் வீட்டில் மேைஜக்கு அடியில் ரகசியமாக குண்டு வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் அதை வெடிக்கச் செய்ததலில் ஹம்சாரி பலியானார்.

சைப்ரஸ் நாட்டில் பிளாக் செப்டம்பர் குழுவின் தலைவராக செயல்பட்டதாக கருதி, 1974-ம் ஆண்டு ஜனவரி 24-ந்தேதி ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஹூசேன் அல் பஷீர் என்பவரை மொசாத் ஏஜெண்டுகள் கொன்றனர். சைப்ரஸ் தலைநகர் நிகோசியாவில் உள்ள ஓட்டலில் ஹூசேன் அல் பஷீர் தங்கியிருந்த போது படுக்கைக்கு அடியில் ரகசியமாக வெடிகுண்டை வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ததில் அவர் உயிரிழந்தார். பிளாக் செப்டம்பர் குழுவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பசில் அல்-குபைசி என்ற சட்ட பேராசிரியரை மொசாத் உளவாளிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி நடந்தது.

இப்படி மூனிச் படுகொலை சம்பவத்துக்கு காரணமானவர்களை ஒவ்வொருவராக மொசாத் தேடிப்பிடித்து தீர்த்துக்கட்டிய போதும். அந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் அபு தாவூத் என்பவரை மட்டும் மொசாத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.

'கடவுளின் கோபம்' என்ற இந்த நடவடிக்கையை மையமாக வைத்து பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'மூனிச்' என்ற படம் 2005-ல் வெளியானது. அதற்கு முன்னதாக இந்த சம்பவத்தின் அடிப்படையில் 1986-ல் 'சுவாடு ஆப் ஜிடியான்' என்ற டெலிவிஷன் தொடரும் வெளியானது.

இப்போது ஹமாஸ் இயக்கத்தினர் திடீரென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இஸ்ரேலை நிலைகுலையச் செய்து இருப்பது, உளவுத்துறையில் ஜாம்பவனாக விளங்கும் மொசாத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படுகிறது. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். மொசாத்துக்கும் சறுக்கி இருக்கிறது. எப்படி எழுந்து நிற்கிறது என்று பார்ப்போம்...

ஆண்டு பட்ஜெட் 23 ஆயிரம் கோடி

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மொசாத் 1949-ம் ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி ஏற்படுத்தப்பட்டது. ''உரிய வழிகாட்டுதல் இல்லையென்றால் ஒரு தேசம் வீழ்ச்சி அடைந்துவிடும்; ஆலோசனை வழங்குபவர்கள் அதிகம் இருந்தால் அதுவே பாதுகாப்பு'' என்பதுதான் மொசாத்தின் தாரக மந்திரம்.

உலகில் உள்ள பெரிய உளவு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மொசாத்தில் 7,000 பேர் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மொசாத் உளவாளிகள் பல்வேறு நாடுகளிலும் பரவி இருக்கிறார்கள். பெண் உளவாளிகளும் உள்ளனர். மொசாத்திடம் மிகவும் நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. பல்வேறு கட்ட தீவிர சோதனைகளுக்கு பின்னரே உளவாளிகளை தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால்தான் மொசாத் சிறந்து விளங்குகிறது. மொசாத்தின் ஆண்டு பட்ஜெட் 273 கோடி அமெரிக்க டாலர் ஆகும். இந்திய ரூபாய் மதிப்பில் 23 ஆயிரம் கோடி.

இஸ்ரேலில் 'அமான்' (ராணுவ புலனாய்வு பிரிவு), 'ஷின் பெட்' (உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு) என மேலும் இரு புலனாய்வு அமைப்புகள் இருந்தபோதிலும், மொசாத்தான் செல்வாக்குமிக்கதாகவும், சக்திவாய்ந்ததாகவும் விளங்குகிறது.

இஸ்ரேல்-பயோடேட்டா

உருவான ஆண்டு - 1948, மே 14-ந்தேதி

பரப்பளவு - 22,072 ச.கி.மீ.

மக்கள் தொகை- 97,92,320

யூதர்கள் - 73 சதவீதம்

அரேபியர்கள்- 21 சதவீதம்

பிறர் - 6 சதவீதம்

தலைநகர் - ஜெருசலேம்

ஜனாதிபதி - ஐசக் ஹெர்சோக், பிரதமர்-பெஞ்சமின் நேட்டன்யாகு

அலுவலக மொழி-ஹீப்ரு,அரபி, நாணயம் - நியூ ஷேகல்(ஐ.எல்.எஸ்.)

உள்நாட்டு மொத்த உற்பத்தி- 56 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்

தனிநபர் ஆண்டு வருமானம் -58,270 டாலர்

அமெரிக்காவை எச்சரித்த மொசாத்

பயங்கரவாதிகளின் நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பாக தனக்கு கிடைக்கும் புலனாய்வு தகவல்களை இஸ்ரேலின் நட்பு நாடுகளுடன் மொசாத் பகிர்ந்து கொண்டு அவற்றை 'உஷார்' படுத்துகிறது.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம்.

அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அல் கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்திச் சென்று நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரங்களை தகர்த்தார்கள் அல்லவா? இதுதொடர்பாக அமெரிக்காவை முன்கூட்டியே மொசாத் எச்சரித்து இருந்தது. அதாவது, பெரிய தாக்குதல் நடத்தும் நோக்கத்தில் 200-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து இருப்பதாக அந்த நாட்டின் புலனாய்வு அமைப்புகளான எப்.பி.ஐ.க்கும், சி.ஐ.ஏ.க்கும் தெரிவித்தது. ஆனால் அமெரிக்கா அதில் அசட்டையாக இருந்து கோட்டைவிட்டு விட்டது.

மொசாத் தகவல் தெரிவித்த ஒரு மாதத்திலேயே அமெரிக்காவில் பயங்கரவாதிகள் விமானங்களை கடத்திச்சென்று நியூயார்க் இரட்டை கோபுரத்தை தகர்த்ததோடு, ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் பலியான துயரமும் நிகழ்ந்தது.

மேலும் செய்திகள்