பண்ணையில் ஆள்பற்றாக்குறையை சமாளிக்க பால் கறவை எந்திரம்
|தற்போதைய சூழலில் பண்ணையில் வேலை செய்யவும், பால் கறக்கவும் ஆட்கள் கிடைப்பது குறைந்து வருவதால் மாட்டு பண்ணையாளர்கள் கறவை மாடுகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும் நிலை உருவாகி வருகிறது.
பால் கறவை எந்திரம்
வேலை ஆட்கள் பற்றாக்குறையால் கறவை மாடுகள் வளர்க்கும் தொழிலையே பலர் விட்டு விடுகின்றனர். பெருகி வரும் மக்கள் தேவைக்கு ஏற்ப பாலின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் கறவை மாட்டு பண்ணையில் பால் கறக்கும் எந்திரத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைந்த வேலை ஆட்களை கொண்டு கறவை மாட்டு பண்ணையை லாபகரமானதாக நடத்த முடியும்.
மாட்டின் பால் மடியில் சேர்ந்திருக்கும் பாலை காம்பில் பொருத்தும் குழாய்கள் மூலம் உறிஞ்சுவதால் பால் கறக்கப்படுகிறது. காம்புக்கு அழுத்த நிலை விட்டுவிட்டு கொடுக்கப்படுகிறது.
இந்த எந்திரங்களின் செயல்பாடு என்பது, கன்று பாலை குடிப்பது போன்ற உணர்ச்சியை தாய் பசுவுக்கு அளிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். பால் கறக்கும் எந்திரம் ரத்தத்தையும் உறிஞ்சி எடுக்கும் என்பது தவறான கருத்தாகும். பால் வரும் குழாயை கவனித்து பால் வராத சமயத்தில் எந்திரத்தை நிறுத்தி விடலாம்.
பயன்படுத்தும் முறை
பால் கறப்பதற்கு முன் கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும். மடியை கிருமி நாசினி கொண்ட தண்ணீரால் கழுவி, உலர்ந்த சுத்தமான துணியால் துடைக்க வேண்டும்.
பால் கறவை எந்திரத்தை பயன்படுத்தும் முன் சிறிதளவு பாலை கறுப்பு துணி கொண்டு மூடிய சிறிய கிண்ணத்தில் கறந்து பார்த்தால் பாலின் தரத்தை நிர்ணயம் செய்யலாம். உறிஞ்சும் குழாயை பசுவின் காம்பில் வைத்து கறவை எந்திரத்தை இயக்க வேண்டும். பால் கறந்த பின் காம்புகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். உறிஞ்சும் குழாய்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து நன்றாக கழுவினால் கறவை எந்திரத்திலும் கிருமிகள் உற்பத்தி ஆகாமல் தடுக்கலாம்.
நன்மைகள்
10 கறவை மாடுகளுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு பால் கறவை எந்திரம் பயன்படுத்துவது லாபகரமாக இருக்கும். ஏனெனில் இக்கறவை எந்திரம் 3 பேர் செய்யக்கூடிய வேலையை சுலபமாக செய்து முடித்து விடும். பால் கறவை எந்திரத்தை முறையாக பொருத்தி சரியாக பயன்படுத்தினால் குறைந்த நேரத்தில் சுகாதாரமான முறையில் விரைவாக பால் கறக்கலாம். கையால் கறப்பதை விட 50 சதவீத குறைந்த நேரத்தில் முழுமையாக பாலை கறந்து விடுவதால் நேர விரயம் குறைக்கப்படுகிறது.
கறவை மாடுகளின் மடியில் காயங்களோ, மடி நோய் உண்டாவதோ இல்லை. பால் மடியில் இருந்து பாத்திரம் வரை குழாய் மூலம் பால் செல்வதால் கிருமிகள் சேர வாய்ப்பு இல்லை. இதனால், இது சுகாதாரமான முறையாகும்.
எந்திரத்தின் மூலம் கறப்பதால் தாய்ப்பசு விரைவில் சினைப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், கன்றை பார்க்கும் பொழுது ஏற்படும் அதிகப்படியான தாய்மை உணர்ச்சியின் காரணமாக தாயின் உடலின் சுரக்கும் ஒரு சில நிணநீர் எந்திர கறவை முறையில் சுரப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. எனவே சினைப்படும் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.