சாலையில் பறிபோகும் உயிர்கள்
|சாலை விபத்து ஒரு குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் பாதிக்கின்றது. சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பல குடும்பங்களை மீளா துயரில் ஆழ்த்தி நிர்கதியாக்கி விடுகின்றன.
இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 47 விபத்துகள் நிகழ்கின்றன. இதில் 18 பேரின் உயிர் பறிக்கப்படுகிறது. சாலை விபத்துகளினால் ஆண்டுக்கு சராசரியாக 1½ லட்சம் பேர் இன்னுயிரை இழக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளை விட மாநில நெடுஞ்சாலைகளிலேயே அதிக விபத்துகள் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளினால் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
12 ஆயிரம் பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் போக்குவரத்து துறை கடந்த ஆண்டு பதிவாகிய விபத்து தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 17 ஆயிரம் கோர விபத்துகளில் 12 ஆயிரத்து 32 பேர் இறந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 4 ஆயிரத்து 893 பேரும், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலையில் 952 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 187 பேரும் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 1,045 பேரும், அதற்கடுத்து செங்கல்பட்டில் 929 பேரும், திருப்பூரில் 877 பேரும், சேலத்தில் 827 பேரும், மதுரையில் 788 பேரும் இறந்துள்ளனர்.
இருசக்கர வாகனங்களால் அதிக விபத்து
இருசக்கர வாகனங்களால் 7 ஆயிரத்து 392 விபத்துகளும், கார், ஜீப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களால் 2 ஆயிரத்து 927 விபத்துகளும், லாரிகளால் 2 ஆயிரத்து 210 விபத்துகளும், வேன், மினி லாரிகளால் 1,424 விபத்துகளும், அரசு பஸ்களால் 853 விபத்துகளும், தனியார் பஸ்களால் 545 விபத்துகளும், ஆட்டோக்களால் 403 விபத்துகளும், பிற வாகனங்களால் 1,719 விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. சுமார் 42 சதவீத விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு இருக்கின்றன.
விபத்துகள் அதிகரிப்பதற்கு, குண்டும் குழியுமான சாலை, மோசமான வடிவமைப்பு, பராமரிப்பு இல்லாதது போன்றவை பிரதான காரணங்களாக உள்ளன. மேலும் சாலையில் சாகசம் புரிகிறவர்களும் உயிரை மாய்க்கின்றனர். விபத்துகளினால் படுகாயம் அடைந்து உடல் உறுப்புகளை இழந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நரக வேதனையுடன் பிறர் உதவியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களின் குடும்பமும் பொருளாதாரத்தை இழந்து இன்னலில் தவிக்கின்றனர்.
டிரைவரை எச்சரிக்கும் கருவிகள்
90 சதவீத வாகன விபத்துகளானது டிரைவரின் தவறு, சோர்வு காரணமாக ஏற்படுகிறது. டிரைவரின் கவனமின்மை, கவனச்சிதறல், தவறான நடத்தை போன்ற தவறுகளால் அதிகளவு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, டிரைவர் திறமையாக வாகனம் ஓட்டுவதை கண்காணிக்கும் வகையிலும், அவரது கவனக்குறைவை கண்டறிந்து எச்சரித்து விபத்துகளை தடுக்கும் வகையிலும் நவீன கருவிகளை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
பல்வேறு வெளிநாடுகளில் ஏதேனும் ஓரிடத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தால், அதற்கான காரணத்தை உடனே ஆய்வு செய்து சரி செய்கின்றனர். ஒவ்வொரு நெடுஞ்சாலைக்கும் விபத்து வரலாறு பதிவேட்டை பராமரிக்கின்றனர். ஆனால் இந்தியாவில் ஏதேனும் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தால், 'இது விபத்து பகுதி' என்று எச்சரிகை பலகை வைப்பதுடன் திருப்திபட்டு கொள்கின்றனர்.
கூடுதல் உயிரிழப்பு
நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்துக்குள் நிறைவேற்ற, சாலை போக்குவரத்து கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நிகழ்ந்த 15 ஆயிரத்து 384 சாலை விபத்துகளில் 10 ஆயிரத்து 373 பேர் இறந்துள்ளனர். விபத்து தரவுகளை மறு ஆய்வு செய்யும்போது சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்படும். அவ்வாறு கடந்த 2017 முதல் 2020-ம் ஆண்டு வரையிலும் சாலை விபத்து தொடர்பான தரவுகளை மறு ஆய்வு செய்ததில் 22 ஆயிரம் உயிரிழப்புகள் கூடுதலாக சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 18-ந்தேதி முதல் பிப்ரவரி 17-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை கடைபிடிக்கும்போதே அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனையை தருகிறது.
பொது போக்குவரத்து மட்டும்
பெரும்பான்மையான சாலை விபத்துகள் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரைதான் நிகழ்கின்றன. இந்த நேரத்தில் பொது போக்குவரத்து தவிர பிற போக்குவரத்தை தடை செய்வதன் மூலம் பெரும்பான்மையான சாலை விபத்துகளைத் தடுக்க முடியும். இந்தியாவில் அதிக நெடுஞ்சாலை விபத்துகள் நடக்கும் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா இடம் பெற்றுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் நடக்கும் அதிக சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்திலும், உத்தரபிரதேசம் 2-வது இடத்திலும், ஆந்திரா 3-வது இடத்திலும் உள்ளன. கேரளா, மராட்டியம் முறையே 4, 5-வது இடத்தில் உள்ளன.
விபத்துகளை குறைக்க...
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 7 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்ததாக மத்திய அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதன்படி, 2017-2021-ம் ஆண்டு இடையிலான காலக்கட்டத்தில் மட்டும் நாட்டில் சுமார் 21.59 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 7 லட்சத்து 36 ஆயிரத்து 129 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.
2020-ம் ஆண்டு மொத்தம் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 2021-ம் ஆண்டு 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 விபத்துகளாக அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த விபத்துகளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 806 பேர் மரணமடைந்த நிலையில், 2021-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 163 ஆக உயர்ந்துள்ளது.
2021-ம் ஆண்டில் நிகழ்ந்த சாலை விபத்து உயிரிழப்புகளில் சுமார் 36 சதவீத உயிரிழப்புகள் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்துள்ளன. 2024-ம் ஆண்டுக்குள் நாட்டில் இந்த விபத்து மரணங்களை பாதியாக குறைக்க அரசு முனைப்புடன் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்து உள்ளது.
மத்திய அமைச்சகத்தின் புள்ளி விவரங்களின்படி, கடந்த 2020-ம் ஆண்டு நிகழ்ந்த 1 லட்சத்து 19 ஆயிரத்து 693 விபத்துகளில், 41 ஆயிரத்து 537 வாகனங்கள் 5 ஆண்டுகளுக்கும் குறைவான வாகனங்கள்தான் அதிக விபத்துகளுக்கு ஆளானதாக மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாலை விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு கல்வி அவசியம் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நவீன வாகனங்கள்
இதுகுறித்து நெல்லை மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் சிட்டி நைனா முகமது கூறியதாவது:-
விபத்துகள் பெரும்பாலும் டிரைவர்களின் அறியாமையினால் ஏற்படுகிறது. அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் வாகனங்களை நிதானமாகவும், அளவான வேகத்திலும் இயக்குவார்கள். சாலையை பயன்படுத்தும்போது அந்த சாலையை பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். தெரியாத சாலையில் செல்லும்போது வேகத்தை குறைத்து செல்ல வேண்டும். இலக்கை அடைவதற்கு உயிரோடு இருக்க வேண்டும் அல்லவா. சாலைகளின் ஓரத்தில் அறிவிப்பு பலகைகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், மேம்படுத்தப்பட்ட சாலையின் மீது குறியீடுகளும் (மார்க்கிங்) போடப்பட்டு உள்ளது. அதனை டிரைவர்கள் ஒரு போதும் கவனிப்பதில்லை. அதை தெரிந்து கொள்ள வேண்டும். அது உயிர் காக்கும் கோடு ஆகும்.
'உயிர்கல்வி' தேவை
18 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் ஓட்டுனர் பயிற்சி பள்ளிக்கு வரும்போது, உரிமம் பெற்று தாருங்கள் என்று மட்டுமே கேட்கிறார்கள். வாகனம் ஓட்டுவதற்கும், சாலை விதிகள் பற்றியும் கற்று கொடுங்கள் என்று யாரும் கேட்பதில்லை. வாகனத்தை ஓட்ட தெரிந்து விட்டால் எல்லாம் அறிந்தவர்கள் ஆகி விடுகிறார்கள். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு கல்வி முக்கியம். அதை 'உயிர்கல்வி' என்று கூறுவார்கள். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை பாதுகாப்பு கல்வியை பள்ளிகளிலேயே கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அதை பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படும்.
சாகசம்
நெல்லை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகர்:-
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது. ஆனால் 13 வயதில் இருந்தே சிறுவர், சிறுமிகள் வாகனம் ஓட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனால் அவர்கள்தான் அதிகமான விபத்துகளில் சிக்குகிறார்கள். 18 வயது பூர்த்தி அடைவதற்குள் ஓட்டுனர் உரிமம் பெறாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பெற்றோர் வாங்கி கொடுக்கிறார்கள். அதிநவீன வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அவற்றின் முழு வேகத்திறனையும் அனுபவித்து பார்த்து விட வேண்டும் என்று சாகச உணர்வுமிக்க இளைஞர்கள் துடிப்பதுதான் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாகும்.
ஒரே வாரிசை கொண்டிருக்கும் குடும்பத்தில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளால் பெரும் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. இதை தவிர்க்க 18 வயது பூர்த்தி அடைந்த பிறகே ஓட்டுனர் உரிமம் பெற்று, புதிய வாகனம் வாங்கி கொடுக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 199-ஏ-ன்படி, 18 வயதுக்கு உட்பட்ட சிறார் வாகனம் ஓட்டி விபத்தில் சிக்கினால், அவர்களது பெற்றோர் அரசு பணியில் இருந்தால் வேலையை இழக்க நேரிடும். மேலும் ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனையும் கிடைக்கும். அந்த சிறார் 25 வயது பூர்த்தியாகும் வரையிலும் ஓட்டுனர் உரிமம் பெற முடியாது. உயர் கல்வியையும் தொடர முடியாமலும், அரசு பணிக்கும் செல்ல முடியாமலும் வாழ்நாள் சிக்கலை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேக கட்டுப்பாடு தேவை
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கார்களில் அதிகபட்சமாக மணிக்கு சுமார் 130 கி.மீ. வேகத்தில் பயணிக்க அனுமதிக்கின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிகபட்சமாக ஒரு சாலையில் 137 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கின்றனர். ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வேக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் கூட, அங்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் வேகம் மணிக்கு 120 அல்லது 130 கி.மீ.தான்.
உலகிலேயே கார்களுக்கு அதிகபட்ச வேகத்தை அனுமதிக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேடுதான். அங்கு சில சாலைகளில் மணிக்கு 160 கி.மீ. வேகம் அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மற்ற சாலைகளில் 100 கி.மீ. வேகம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் மணிக்கு 90 கி.மீ.க்கு கூடுதலான வேகம் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 150 முதல் 180 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் கட்டுப்பாடின்றி மின்னலாக செல்வதை பார்க்க முடிகிறது. வாகனங்களின் வேகத்தை கண்டறித்து கட்டுப்படுத்த தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். ஆனால் அதில் பதிவாகும் காட்சிகளை கொண்டு உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் உரிமங்களை ரத்து செய்தல், வாகன உரிமையாளர், வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
அரசு டாக்டரை நியமிக்க வேண்டும்
ஓட்டுனர் உரிமம் பெறுவது தற்போது வியாபாரமாகி விட்டது. ஓட்டுனர் உரிமம் பெற்ற ஆண்களில் 88 சதவீதம் பேர்தான் வாகனங்களை ஓட்டுகின்றனர். பெண்களில் 12 சதவீதம் பேரே வாகனங்களை இயக்குகின்றனர். ஓட்டுனர் பயிற்சி பெற வரும்போது அவர்களது உடல் தகுதியை மோட்டார் வாகன ஆய்வாளர் ஓரளவுக்கு பார்த்து உறுதி செய்கிறார். தகுதி இல்லாதவர்களுக்கு உரிமம் வழங்கப்படுவது இல்லை. வயதானவர்களின் உடல் தகுதிக்கு டாக்டரின் மருத்துவ சான்று வழங்கப்படுகிறது.
இத்தகைய சான்றுகள் புரோக்கர்களின் கைகளில் தாராளமாக தவழ்கின்றன. மேலும் உடல் தகுதிக்கான படிவத்தில் டாக்டர்களின் கையெழுத்தையும், முத்திரையையும் பதித்து முன்கூட்டியே தயாராக வைத்துள்ளனர். அதில், ஓட்டுனர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கின்றவரின் பெயரை பூர்த்தி செய்து வழங்கி, அதற்கான கூடுதல் கட்டணத்தை பெற்று கொள்கின்றனர். எனவே ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் கடுமையான நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் உடல் தகுதிச்சான்று வழங்க அரசு டாக்டரை நியமிக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.