< Back
சிறப்பு பக்கம்
இலவசம் பின்னால் ஓடும் கர்நாடக கட்சிகள்
சிறப்பு பக்கம்

இலவசம் பின்னால் ஓடும் கர்நாடக கட்சிகள்

தினத்தந்தி
|
7 May 2023 4:16 AM GMT

அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

தென் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் ஒரே மாநிலம் கர்நாடகம்தான். இங்கு அந்த கட்சிக்கு வலுவான கட்டமைப்பு உள்ளது. அதேசமயம் இந்தியாவிலேயே காங்கிரஸ் கட்சி வலுவாக உள்ள ஒரே மாநிலமும் இது தான். இதனால் இந்த இரு கட்சிகளுக்குமே கர்நாடக சட்டசபை தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதாதளம் 207 தொகுதிகளிலும் போட்டியிட்டுகின்றன. கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும் 217 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. மொத்தம் 2,613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா வருணா தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரியும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி சென்னப்பட்டணா தொகுதியிலும், பாரதீய ஜனதாவில் இருந்து காங்கிரசுக்கு தாவிய முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா சிகாரிபுரா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வேட்பாளர் தேர்வில் ஆளும் பாரதீய ஜனதாவில் கடும் அதிருப்தி நிலவியது. பல பெரிய தலைகளை புறக்கணித்துவிட்டு 75 தொகுதிகளில் புதுமுகங்களை நிறுத்தி இருக்கிறார்கள். இதேபோல் காங்கிரசிலும் 'சீட்' கிடைக்காத பலர் அதிருப்தியில் உள்ளனர்.

இதனால் இரு கட்சிகளுமே முதல்-மந்திரி வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றன.

இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் செல்வாக்கைத்தான் பாரதீய ஜனதா மலைபோல் நம்பி இருக்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரசோ, ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியையும், தங்களின் கடந்த கால சாதனைகளையும் நம்பி தேர்தலை எதிர்கொள்கிறது. பொதுவாக இரு கட்சிகளுக்குமே கணிசமான வாக்கு வங்கியை கொண்ட மாநில தலைவர்கள் இருக்கிறார்கள் என்றபோதிலும், மக்கள் செல்வாக்கு பெற்ற மாபெரும் தலைவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.

இரு கட்சிகளுமே மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்கின்றன. இலவசங்கள் வழங்கும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், அவரது கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இலவச சமையல் கியாஸ் சிலிண்டர், அரை லிட்டர் பால் என இலவசங்களை அறிவித்து உள்ளது.

காங்கிரஸ் கட்சியோ மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1,500, பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என்று தன் பங்குக்கு வாக்குறுதிகளை அளித்து இருக்கிறது.

விவசாயிகளை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற புதுமையான வாக்குறுதியை ஜனதாதளம் (எஸ்) வழங்கி இருக்கிறது. இந்த வாக்குறுதிகளையெல்லாம் பார்த்தால், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்பதில் இந்த கட்சிகள் உறுதியாக இருப்பது தெரிகிறது.

நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் உச்சக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. பாரதீய ஜனதாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரசில் ராகுல்காந்தி, பிரியங்கா என பல பெரிய தலைவர்களின் பிரசாரத்தால் களத்தில் அனல் பறக்கிறது. பிரசாரத்தின் போது சில இடங்களில் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் கடுமையான வார்த்தைகளால் தாக்கிக்கொண்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியை 'விஷப்பாம்பு' என்று வர்ணிக்க, அதற்கு சோனியாவை 'விஷக்கன்னி' என்றும் ராகுலை 'அரைப்பைத்தியம்' என்றும் கூறி பாரதீய ஜனதாவினர் பதிலடி கொடுத்தது நாகரிகமான அரசியலாக தெரியவில்லை.

கடந்த 2 தேர்தல்களை திரும்பி பார்த்தால் கர்நாடகத்தின் அரசியல் நிலவரம் எப்படி மாறி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

இங்கு 2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 122 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதீய ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் கிடைத்தன. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அப்போது காங்கிரசுக்கு 36.6 சதவீத வாக்குகளும், பாரதீய ஜனதாவுக்கு 19.9 சதவீத வாக்குகளும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 20.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன. பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 23.3 சதவீத வாக்குகளை பெற்றனர்.

அதன்பிறகு கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய அளவுக்கு எந்த கட்சிக்கும் 'மெஜாரிட்டி' (113 இடங்கள்) கிடைக்காததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அந்த தேர்தலில் பாரதீய ஜனதா 36.2 சதவீத வாக்குகளுடன் அதிகபட்சமாக 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. காங்கிரசுக்கு 80 இடங்களும் (38.8 சதவீத வாக்குகள்), ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 37 இடங்களும் (18.4 சதவீத வாக்குகள்), பிற கட்சிகளுக்கு 3 இடங்களும் (7.4 சதவீத வாக்குகள்) கிடைத்தன.

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மே 17-ந்தேதி பாரதீய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். ஆனால் அந்த கட்சி கையை விரித்து விட்டதால் ஒரு வாரத்தில் அவர் ராஜினாமா செய்ய, காங்கிரஸ் ஆதரவுடன் ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி ஆனார். ஆனால் இந்த கூட்டணியால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் திடீரென்று ராஜினாமா செய்து, பாரதீய ஜனதாவுக்கு தாவியதால், குமாரசாமி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து கவிழ்ந்தது. பின்னர் மீண்டும் எடியூரப்பா தலைமையில் பாரதீய ஜனதா அரசு அமைந்தது. அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் அந்த கட்சிக்கு சட்டசபையில் 'மெஜாரிட்டி' கிடைத்தது.

கட்சி மேலிடத்தின் விருப்பப்படி 2021-ம் ஆண்டு ஜூலை 28-ந்தேதி எடியூரப்பா பதவி விலக, புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார். இப்போது அவரது தலைமையில் பாரதீய ஜனதா தேர்தலை சந்திக்கிறது.

இதற்கிடையே 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் பாரதீய ஜனதா 51.7 சதவீத வாக்குகளுடன் 25 இடங்களை அள்ளியதும், 32.1 சதவீத வாக்குகளை பெற்றபோதிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல் 9.7 சதவீத வாக்குகளை பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சியும், சுயேச்சை வேட்பாளரும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றனர்.

கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டு பாரதீய ஜனதா முதல் முதலாக ஆட்சி அமைத்த போது, அக்கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சுயேச்சைகளின் ஆதரவுடன் எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார்.

அதன் பிறகு 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அந்த கட்சிக்கு தனி 'மெஜாரிட்டி' கிடைக்காததால், இந்த முறை தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தே தீருவது என்பதில் அந்த கட்சித் தலைவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இன்னொரு புறம் இழந்த ஆட்சியை எப்படியாவது பாரதீய ஜனதாவிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்ற வேகம் காங்கிரசிடம் உள்ளது.

கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றிவாகை சூடினால், அதை பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றியாக கருதி அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தலை மிகவும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும். அதேசமயம், நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். காங்கிரசை பிற கட்சிகள் உதாசீனப்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். ஏற்கனவே ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டு இருக்கும் நிலையில், காங்கிரசுக்கு கிடைக்கும் தோல்வி அக்கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

அதற்கு மாறாக, காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்குமானால், புதுத்தெம்புடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். அந்த கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணி அமையவும் வாய்ப்பு இருக்கிறது.

'தொங்கு சட்டசபை' ஏற்படும் பட்சத்தில், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவால் தேசிய அரசியலில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருக்கும் அபிமானம், கடந்த நான்காண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், பெங்களூரு மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வலுவாக இருப்பது போன்றவை பாரதீய ஜனதாவுக்கு சாதகமான அம்சங்கள் ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி நடந்தால் 'இரட்டை என்ஜின்' சக்தியுடன் மாநிலம் வேகமான வளர்ச்சி பெறும் என்ற பிரதமர் மோடியின் பிரசார உத்தியும் மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

அதேசமயம் மத்தியிலும், மாநிலத்திலும் பாரதீய ஜனதா ஆட்சி நடப்பதால், பொதுவாக ஆட்சிக்கு எதிராக நிலவும் மக்களின் மனநிலை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரான எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கியது, கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசல்கள், பசவராஜ் பொம்மை அரசுக்கு எதிராக எழுந்த ஊழல் புகார்கள், இரட்டை சதவீதத்தில் உள்ள சிறுபான்மையினரின் ஓட்டுகள் போன்ற அம்சங்கள் அந்த கட்சிக்கு பாதகமாக இருக்கின்றன.

கர்நாடக அரசியல் களம் சற்று வித்தியாசமானது. அங்கு சாதி அரசியலின் தாக்கம் அதிகம் என்பதால், தேர்தலின் போது அதற்கு ஏற்றபடியே கட்சிகள் காய்களை நகர்த்தும்.

பாரதீய ஜனதாவின் வாக்கு வங்கியாக கருதப்படும் லிங்காயத் சமூகத்தினர் வட கர்நாடகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த சமுதாய மக்களிடையே செல்வாக்கு பெற்று விளங்கும் எடியூரப்பா வயது மூப்பு காரணமாக இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி ஆகியோரும் லிங்காயத் சமூகத்தினரிடையே செல்வாக்கு பெற்ற தலைவர்களாக உள்ளனர். இவர்களில் ஜெகதீஷ் ஷெட்டரும், லட்சுமண் சவதியும் 'டிக்கெட்' கிடைக்காததால் பாரதீய ஜனதாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு காங்கிரசுக்கு தாவி அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்கள். இதெல்லாம் பாரதீய ஜனதாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலித் சமூகத்தையும், மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஒக்கலிக சமூகத்தையும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா குருபா சமூகத்தையும் சேர்ந்தவர்கள். தங்கள் சமூகத்தினரிடையே அவர்கள் செல்வாக்கு பெற்று விளங்குகிறார்கள். அதிரடி அரசியலில் கில்லாடியான டி.கே.சிவக்குமார் பாரதீய ஜனதாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார்.

பாரதீய ஜனதா அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள், அந்த கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல், சுமார் 13 சதவீதம் உள்ள சிறுபான்மையினர் வாக்குகள் ஆகிய அம்சங்கள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன.

மைசூரு மண்டலத்தில், அதாவது மண்டியா, மைசூரு, ஹாசன், கோலார், ராமநகர், சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, துமகூரு, சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒக்கலிக சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒக்கலிகரான தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு இந்த பகுதிகளில் அதிக ஆதரவு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் இந்த மண்டலத்தில் உள்ள 55 தொகுதிகளில் 28 தொகுதிகளை இந்த கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போதும் ஜனதாதளம் (எஸ்) கணிசமான இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தேவேகவுடாவின் குடும்ப அரசியலுக்கு எதிராக ஜனதாதளம் (எஸ்) கட்சியில் முணுமுணுப்பு எழுந்து இருப்பது அக்கட்சி தலைவர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்தலில் பாரதீய ஜனதா-காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரியவந்தது. ஆனால் அதன்பிறகு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 'தொங்கு சட்டசபை' ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது. கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், தலைவர்களின் பிரசாரம் போன்றவற்றால் வாக்காளர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

எப்படி இருந்தாலும், காங்கிரசோ அல்லது பாரதீய ஜனதாவோ தனிப் பெரும்பான்மை பெற்றால் ஆட்சி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதற்கு மாறாக எந்த கட்சிக்கும் 'மெஜாரிட்டி' கிடைக்காமல் 'தொங்கு சட்டசபை' அமையும் பட்சத்தில், கடந்த சட்டசபை தேர்தலின் போது நடந்ததைப் போன்ற நாடகங்கள் அரங்கேறும்.

அப்போது, அதிர்ஷ்டதேவதையின் பார்வை ஜனதாதளம் (எஸ்) தலைவர் குமாரசாமியின் பக்கம் திரும்பும். புதிய அரசு அமைவதில் குமாரசாமியின் பங்கு முக்கியத்துவம் பெற்று அவர் 'கிங் மேக்கர்' ஆவார். சூழ்நிலை அவரை 'கிங்' ஆக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில், காங்கிரசுக்கு முதல் எதிரி பாரதீய ஜனதா என்பதால், அந்த கட்சி மீண்டும்ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. இதனால் குமாரசாமியின் ஆதரவை பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் அல்லது அவரது தலைமையில் புதிய அரசு அமைய காங்கிரஸ் சம்மதிக்கக்கூடும். ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு கிடைக்கும் இடங்கள்; குமாரசாமி செய்யும் பேரம் ஆகியவற்றை பொறுத்து இவற்றில் ஒன்று நடக்கும்.

இதேபோல், குமாரசாமியின் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் அமர்வதை தடுப்பதில் பாரதீய ஜனதா உறுதியாக இருக்கும் பட்சத்தில் முதல்-மந்திரி பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுக்கவும் அந்த கட்சி தயங்காது.

பதவிதான் பிரதானம் என்ற நிலை வந்துவிட்டால், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யார் யாருடனும் கூட்டணி சேரலாம். 'தொங்கு சட்டசபை' ஏற்பட்டு கூட்டணி ஆட்சி அமையுமானால், அதன் ஆயுள் 'நித்திய கண்டமாகத்தான்' இருக்கும் என்பதை கடந்த கால வரலாறு காட்டுகிறது.

தனிக்கட்சி ஆட்சியா? கூட்டணி ஆட்சியா? என்பதை கர்நாடக வாக்காளர்கள் 10-ந்தேதி தீர்மானிக்க இருக்கிறார்கள்.

இப்போதைய சூழ்நிலையில், தேர்தல் முடிவு எப்படி இருக்கும்? என்பது 'மதில்மேல் பூனை'யாகத்தான் இருக்கிறது. பூனை எந்தப்பக்கம் தாவும் என்பது வருகிற 13-ந்தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

அரசியலில் வாரிசுகள்


வாரிசு அரசியலுக்கு கர்நாடகமும் விதிவிலக்கு அல்ல.

முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் நிறுவன தலைவருமான தேவேகவுடா குடும்பத்தில் 3 தலைமுறையினர் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் தேவேகவுடாவுக்கு 90 வயது ஆவதால் அரசியலில் மும்முரமாக ஈடுபட முடியவில்லை. என்றபோதிலும், தனது மகன் குமாரசாமியை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கும் அவர், தேர்தல் உத்திகள் தொடர்பான ஆலோசனைகளை கட்சியினருக்கு வழங்கி வருகிறார்.

தேவேகவுடா குடும்பத்தைச் சேர்ந்த பலர் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். இவரது இரு மகன்களான குமாரசாமி, ரேவண்ணா, குமாரசாமியின் மனைவி அனிதா ஆகியோர் தற்போது எம்.எல்.ஏ.க்களாகவும், ரேவண்ணாவின் இரு மகன்களில் பிரஜ்வல் எம்.பி.யாகவும் சூரஜ் ரேவண்ணா எம்.எல்.சி.யாகவும் பதவி வகிக்கின்றனர். குமாரசாமியின் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவிடம் தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அவர் ராமநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் இரு மகன்களில் ஒருவரான பி.ஒய்.ராகவேந்திரா எம்.பி.யாக இருக்கிறார். கர்நாடக பாரதீய ஜனதா துணைத்தலைவராக இருக்கும் மற்றொரு மகன் பி.ஒய்.விஜயேந்திரா இந்த தேர்தலில் சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி தரம்சிங்கின் மகன் அஜய் தரம்சிங் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். மற்றொரு மகன் விஜய்சிங் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திரா தற்போது எம்.எல்.ஏ. ஆவார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே தற்போதைய எம்.எல்.ஏ. மட்டுமின்றி, முன்னாள் மந்திரியும் ஆவார்.

மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யாகவும், மைத்துனர் ரங்கநாத் எம்.எல்.ஏ. ஆகவும் உள்ளனர்.

முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ.வின் தம்பிகளில் ஒருவரான எம்.எல்.ஏ. சதீஷ் ஜார்கிகோளி மாநில காங்கிரஸ் செயல் தலைவர் பதவி வகிக்கிறார். மற்றொரு தம்பியான எம்.எல்.ஏ. பாலச்சந்திர ஜார்கிகோளி முன்னாள் மந்திரி ஆவார். இன்னொரு தம்பி லகான் ஜார்கிகோளி எம்.எல்.சி.யாக இருக்கிறார். இந்த சகோதரர்கள் பெலகாவி பகுதியில் செல்வாக்கு பெற்றவர்கள்.

பல்லாரி பகுதியில் செல்வாக்கு பெற்று விளங்கும் ரெட்டி சகோதரர்களில் ஜனார்த்தன ரெட்டி 'கல்யாண் ராஜ்ய பிரகதி' என்ற கட்சியை நிறுவியவர். இவர் முன்பு மந்திரியாக இருந்துள்ளார். இவரது மனைவி அருணா லட்சுமி இந்த தேர்தலில் பல்லாரி நகரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனார்த்தன ரெட்டியின் சகோதரர் சோமசேகர் ரெட்டி பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார். முன்பு மந்திரியாகவும் எம்.எல்.ஏ. ஆகவும் பதவி வகித்துள்ள கருணாகர் ரெட்டி (ஜனார்த்தன ரெட்டியின் மற்றொரு சகோதரர்) தற்போது ஹரப்பரனஹள்ளி தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார்.

தற்போது மந்திரியாக இருக்கும் ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தா, மைத்துனர் சன்னா பக்கிரப்பா ஆகியோர் முன்னாள் எம்.பி. ஆவர். உறவினர் எச்.டி.சுரேஷ்பாபு முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

இப்படி இன்னும் பல குடும்பங்கள் வாரிசு அரசியலில் கொடிகட்டி பறக்கின்றன.

5 ஆண்டுகளில் 4 முதல்-மந்திரிகள்


• அடிக்கடி அரசியல் சூறாவளியில் சிக்கிக்கொள்ளும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்று. அங்கு சமீபத்திய ஆண்டுகளாக ஆட்சியை பிடிப்பதற்காக கூட்டணிகள் மாறுவதும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக முதல்-மந்திரிகளை மாற்றுவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

• கர்நாடக மாநிலம் இந்தியா சுதந்திரம் அடைந்த போது மைசூர் மாகாணம் என்ற பெயரில் இருந்தது. 1973-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி கர்நாடகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. காங்கிரஸ், ஜனதாதளம், பாரதீய ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இந்த மாநிலத்தை ஆட்சி செய்துள்ளன.

• 1947-ம் ஆண்டு முதல் இதுவரையிலான 76 ஆண்டுகளில் இந்த மாநிலம், செங்கலராய ரெட்டி (முதலாவது முதல்-மந்திரி) முதல் தற்போதைய பசவராஜ் பொம்மை வரை 23 முதல்-மந்திரிகளை கண்டுள்ளது.

• கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மட்டும் எடியூரப்பா, எச்.டி.குமாரசாமி, மறுபடியும் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என்று 4 முறை முதல்-மந்திரிகள் மாறி இருக்கிறார்கள்.

• தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னாள் முதல்-மந்திரி எஸ்.ஆர்.பொம்மையின் மகன் ஆவார்.

• அதிகபட்சமாக எடியூரப்பா 4 தடவை முதல்-மந்திரியாக பதவி வகித்து இருக்கிறார்.

•நீண்ட காலம் (7 ஆண்டுகள்) முதல்-மந்திரியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேவராஜ் அர்ஸ்.

• கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த தேவேகவுடா இந்தியாவின் 11-வது பிரதமராகவும், பி.டி.ஜாட்டி 5-வது துணை ஜனாதிபதியாகவும் பதவி வகித்து உள்ளனர்.

•மாநிலத்தில் 6 முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

அண்ணன்-தம்பி மோதல்



தேர்தல் என்று வந்துவிட்டால் அண்ணனா?... தம்பியா?....

மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான பங்காரப்பாவின் மூத்த மகனான குமார் பங்காரப்பா பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. ஆவார். இவர் முன்பு மந்திரியாகவும் இருந்துள்ளார். மற்றொரு மகன் மது பங்காரப்பா முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.

இந்த தேர்தலில் சொரப் தொகுதியில் குமார் பங்காரப்பா பாரதீய ஜனதா சார்பிலும், அவரது தம்பி மது பங்காரப்பா காங்கிரஸ் சார்பிலும் போட்டியிடு கிறார்கள். மது பங்காரப்பாவை ஆதரித்து அவரது மைத்துனரும் நடிகருமான சிவராஜ்குமாரும், அவரது மனைவி கீதாவும் (பங்காரப்பாவின் மகள்) பிரசாரம் செய்கிறார்கள்.

பிரசார களத்தில் நடிகர்-நடிகைகள்



நடிகர்-நடிகைகள் இல்லாமல் பிரசார களம் களை கட்டுமா?

கர்நாடக சட்டசபை தேர்தலிலும் திரையுலக நட்சத்திரங்கள் சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

நடிகர் சுதீப், நடிகர் ஜக்கேஷ் எம்.பி., எம்.எல்.சி. தாரா, நடிகை சுருதி ஆகியோர் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். மறைந்த நடிகர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதாவும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக பிரசார களத்தில் குதித்து இருக்கிறார்.

நடிகர் துனியா விஜய், நடிகைகள் குத்து ரம்யா, உமாஸ்ரீ ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

தமிழர்களின் ஆதரவு யாருக்கு?

இந்த தேர்தலில், கணிசமான தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பதில் தமிழர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.

கர்நாடகத்தில் சுமார் 30 லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்கள். தலைநகர் பெங்களூருவில் ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். இது தவிர பத்ராவதி, சிவமொக்கா, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழர்கள் பரவலாக வசிக்கிறார்கள்.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் சுமார் 16 தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள்தான் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. அதாவது காந்திநகர், புலிகேசிநகர், ராஜராஜேஸ்வரிநகர், சி.வி.ராமன்நகர், சர்வக்ஞநகர், ராஜாஜிநகர், சிக்பேட்டை, சாந்திநகர், சிவாஜிநகர் உள்ளிட்ட தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதனால் தமிழர்களின் வாக்குகளை பெறுவதில் அரசியல் கட்சிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன.

இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் சார்பில் 3 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். பெங்களூரு புலிகேசிநகரில் முரளியையும், சாந்திநகர் தொகுதியில் சிவக்குமாரையும் பாரதீய ஜனதா வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறது. சி.வி.ராமன் நகர் தொகுதியில் ஆனந்த்குமார் என்ற தமிழர் காங்கிரஸ் சார்பில் போட்டி யிடுகிறார்.

மேலும் செய்திகள்