நூறாண்டை நெருங்கும் ஜனநாயக ஆலயம்: விடைபெறுகிறது நாடாளுமன்ற கட்டிடம்
|இந்திய ஜனநாயகத்தின் அடையாளமாகவும், ஆலயமாகவும் திகழ்ந்த நாடாளுமன்ற கட்டிடம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வழிவிட்டு விடைபெறுகிறது.
இந்த புகழ்பெற்ற வட்ட வடிவ கட்டிடம், நூறாண்டை நெருங்கும் நிலையில் நிரந்தர அமைதியில் ஆழப்போகிறது.
தங்கச்சாவியால் திறப்பு
1927-ம் ஆண்டு ஜனவரி 18-ந் தேதி அப்போதைய வைசிராய் இர்வின் பிரபு, இந்த பிரமாண்ட கட்டிடத்தை தங்கச்சாவியால் திறந்துவைத்தார். தங்களின் புதிய தலைநகரமாக புதுடெல்லியை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் அதன் மகுடமாக ரைசினா குன்று பகுதியில் கட்டியதுதான் இந்த நாடாளுமன்ற கட்டிடம். ஆனால் கோலாகல திறப்புவிழா காணும்போது இதன் பெயர், 'கவுன்சில் ஹவுஸ்'. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர், ஹெர்பர்ட் பேக்கர். இவர்தான், எட்வின் லுட்யன்ஸ் உடன் இணைந்து புதுடெல்லிக்கான திட்டத்தை வரைந்து கொடுத்தவர்.
96 ஆண்டுகால பயணம்
நாடாளுமன்ற கட்டிடத்தின் தனித்துவமான வட்டவடிவ தோற்றம்தான் அதை உலகின் மற்ற முக்கிய கட்டிடங்களில் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. அதனாலேயே அனைவர் மனதிலும் இது ஆழப் பதிந்திருக்கிறது. சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த கட்டிடம், 560 அடி விட்டமும், 1760 அடி சுற்றளவும் கொண்டது. முதல் தளத்தில் இருந்து எழுந்த 144 கம்பீர தூண்களால் தாங்கப்பட்டு நிற்கிறது. இந்த நாடாளுமன்ற கட்டிடம் தனது 96 ஆண்டுகால பயணத்தில், பல முக்கிய உலக நிகழ்வுகளையும், உள்நாட்டு சரித்திர மாற்றங்களையும் கண்டிருக்கிறது. அவற்றில், 2-ம் உலகப் போரும், இந்திய விடுதலையும் முக்கியமானவை.
இந்திய அரசியலின் முக்கிய ஆளுமைகள் அனைவரின் பாதங்களும் இங்கு பதிந்திருக்கின்றன. அவர்களின் உரைவீச்சுகள் இதன் சுவர்களில் பட்டு எதிரொலித்திருக்கின்றன.
அரசியல் சாசனம் உருவான இடம்
ஆங்கிலேயர்களின் அதிகாரபீடமாக திகழ்ந்த இந்த கட்டிடம், பின்னர் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய 'சம்விதான் சபா' என்ற அரசியலமைப்பு சபைக்கான இடமாக மாறியது. தொடர்ந்து, இந்திய நாடாளுமன்ற கட்டிடமாக பல சட்டங்களின் உருவாக்கத்தையும், எண்ணற்ற காரசாரமான விவாதங்களையும், சில இனிய நிகழ்வுகளையும் கண்டிருக்கிறது. ஆனால் கடந்த 2001 டிசம்பர் 13-ந் தேதியன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல், இந்த பெருங்கட்டிடத்தின் மாறாத வடுவாக நிற்கிறது.
நிறைவாக, மழைக்கால கூட்டத்தொடர்
கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி நிறைவடைந்த மழைக்கால கூட்டத்தொடருடன் நாடாளுமன்ற கட்டிடம் தனது நெடுங்கதவுகளை மூடிக்கொண்டது. எதிர்கால தேவை, இடவசதியை கருத்தில்கொண்டு கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28-ந் தேதி திறந்துவைத்தார்.
அருகிலேயே உள்ள அந்த கட்டிடத்துக்கு இன்று மக்கள் பிரதிநிதிகள் இடம்பெயர்வார்கள். அந்த முக்கோண வடிவ புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அரங்கேறும் ஜனநாயக செயல்பாடுகளை பழைய வட்ட வடிவ நாடாளுமன்ற கட்டிடம் இனி மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். அதில் கொஞ்சம் ஏக்கமும் கலந்திருக்கும்.