< Back
சிறப்பு பக்கம்
சிக்கு புக்கு ரெயில்!
சிறப்பு பக்கம்

சிக்கு புக்கு ரெயில்!

தினத்தந்தி
|
9 April 2023 9:37 AM IST

சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை ஆர்தன் காட்டன் என்பவரால் தண்டவாளம் அமைக்கப்பட்டு 1837-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி ‘ரெட் ஹில்ஸ் ரெயில்வே' என்ற பெயரில் முதல் சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் ஓடிய முதல் ரெயில்.

சக்கரம்...

மனிதகுல வளர்ச்சியின் முதல் படிக்கட்டு...

போக்குவரத்து மற்றும் தொழில் புரட்சிக்கான முதல் விதை...

சக்கரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் மனிதன் பொருட்களை தலையில் சுமந்தும், குதிரை, கழுதைகள் முதுகில் ஏற்றியும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்றான். கனமான பொருட்களை கூட்டமாக சேர்ந்து இழுத்தும் சென்றனர்.

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் வாகனங்கள், எந்திரங்கள் உருவாயின. வாழ்க்கை எளிமையானது.

வாகன போக்குவரத்தில் ரெயில் முக்கிய பங்கு வகிக்கிறது. போக்குவரத்தில் எவ்வளவோ முன்னேற்றம் வந்துவிட்டாலும், ரெயில் பயணம் அலாதியான இன்பம் தருவது. மிகவும் வசதியானது என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரெயிலில் பயணிப்பதையே விரும்புவார்கள். ரெயில் பயணம் சுகமானது மட்டுமின்றி, நிறைய அனுபவங்களையும் தரக்கூடியது.

இந்தியாவில் ரெயில் போக்குவரத்து கட்டமைப்பு என்பது கடலைப் போல் பரந்து விரிந்தது. கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் ரெயில் போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. தண்டவாளம் என்ற ரத்த நாளங்கள் மூலம் நாட்டின் மூலைமுடுக்குகளையெல்லாம் இணைத்துள்ள இந்திய ரெயில்வே, மக்களுக்கு மகத்தான சேவையாற்றி வருகிறது.

நம் நாட்டில் ரெயில் போக்குவரத்துக்கான அடித்தளம் அமைத்தவர்கள் ஆங்கிலேயர்கள். வியாபார நிமித்தமாக 1,600-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து 'கிழக்கு இந்திய கம்பெனி'யை தொடங்கிய அவர்கள், பின்னர் வலுவாக காலூன்றி, ஒட்டுமொத்த இந்தியாவையும் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர்.

இந்த காலகட்டத்தில் நாட்டில் படிப்படியாக ஒவ்வொரு அடிப்படை கட்டுமான வசதிகளையும் ஏற்படுத்த தொடங்கினார்கள். இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை தொடங்குவதற்கான திட்டத்தை இங்கிருந்த ஆங்கிலேய நிர்வாகம், 1832-ம் ஆண்டு இங்கிலாந்து அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் முதலீடு பிரச்சினை, நிர்வாக சிக்கல்கள் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் அதற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. என்றாலும் காலம் கனிந்தது; ரெயில் போக்குவரத்துக்கான கதவுகள் திறந்தன.

இந்தியாவில் முதல் ரெயில் சென்னையில்தான் ஓடியது என்று சொன்னால், பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்... ஆனால் அதுதான் உண்மை...

ஆங்கிலேயே அரசின் அயராத முயற்சியினால், சென்னையை அடுத்த செங்குன்றத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை பாலம் வரை ஆர்தன் காட்டன் என்பவரால் தண்டவாளம் அமைக்கப்பட்டு 1837-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி 'ரெட் ஹில்ஸ் ரெயில்வே' என்ற பெயரில் முதல் சரக்கு ரெயில் இயக்கப்பட்டது. இதுதான் இந்தியாவில் ஓடிய முதல் ரெயில். சாலை கட்டுமான பணிக்காக இந்த ரெயில் மூலம் சென்னைக்கு கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டன.

இந்தியாவில் முதல் ரெயில் ஓடிய செப்டம்பர் 12-ந்தேதி, இந்திய ரெயில்வேயின் நிறுவன தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்பிறகு, முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து 1853-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி தொடங்கப்பட்டது. அன்று மும்பையில் உள்ள போரி பந்தரில் இருந்து 34 கி.மீ. தொலைவில் உள்ள தானேவுக்கு 14 பெட்டிகளுடன் முதன்முதலாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. அந்த ரெயிலில் 400 பேர் பயணம் செய்தனர். பின்னர் 1854-ம் ஆண்டு மே மாதம் அந்த ரெயில் கல்யாண் வரை நீட்டிக்கப்பட்டது.

தென்னிந்தியாவில் முதல் பயணிகள் ரெயில் சென்னை ராயபுரத்தில் இருந்து 97 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜா ரோட்டுக்கு 1856-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி இயக்கப்பட்டது.

1848 முதல் 1856-வரை கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசி பிரபு இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை விரிவுபடுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டினார். இது தொடர்பான பரிந்துரையை 1853-ல் இங்கிலாந்து அரசுக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து படிப்படியாக ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் டல்ஹவுசி பிரபு 'இந்திய ரெயில்வேயின் தந்தை' என்று போற்றப்படுகிறார்.

இந்தியாவில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் 'கிழக்கு இந்திய கம்பெனி'யின் பிரதான நோக்கமாக இருந்தது. என்றாலும் பிற்காலத்தில் இந்தியாவில் ரெயில் போக்குவரத்து அபார வளர்ச்சி அடைய ஆங்கிலேயர்கள் அமைத்துவிட்டுச் சென்ற அடித்தளம் பெரிதும் துணையாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. அவர்கள் ஊன்றிய விதை இன்று பெரும் ஆலமரமாக பரந்து விரிந்து கிளை பரப்பி நிற்கிறது.

1947-ல் நாடு சுதந்திரம் அடைந்தபோது 42 ரெயில்வே நிர்வாகங்கள் இருந்தன. அவை 1951-ல் தேசிய மயமாக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டபோது, இந்திய ரெயில்வே வலுவான கட்டமைப்பாக மாறியது. இன்று உலகில் உள்ள ரெயில்வே கட்டமைப்புகளில் 4-வது பெரிய அமைப்பாக இந்திய ரெயில்வே விளங்குகிறது. முதல் 3 இடங்களில் முறையே அமெரிக்கா, சீனா, ரஷியா ஆகிய நாடுகள் உள்ளன. ரெயில்வே அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக செயல்படும் இந்திய ரெயில்வேயில் 12 லட்சத்து 54 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

இந்தியாவில் 68 ஆயிரத்து 43 கிலோ மீட்டர் நீளத்துக்கு ரெயில்பாதைகள் உள்ளன. 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-தேதி நிலவரப்படி இதில் 50 ஆயிரத்து 394 கி.மீ. நீள பாதை மின்மயமாக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் தினசரி 13 ஆயிரத்து 169 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஆண்டுக்கு 800 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணிக்கிறார்கள். 2020-ம் ஆண்டில் மட்டும் 808 கோடியே 68 லட்சம் பேர் பயணம் செய்து இருக்கிறார்கள். இது உலக மக்கள் தொகையை விட அதிகம் ஆகும்.

இந்தியா முழுவதும் பெரியதும் சிறியதுமாக 7,325 ரெயில் நிலையங்கள் உள்ளன.

மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சராசரியாக மணிக்கு 50.6 கி.மீ. வேகத்திலும், பாசஞ்சர் ரெயில்கள் 33.5 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகின்றன. அதிகபட்சமாக 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரெயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது.

நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 8,479 சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு 142 கோடி டன் சரக்கு கையாளப்படுகிறது. சரக்கு ரெயில்கள் சராசரியாக மணிக்கு 42.2 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சமாக 60 முதல் 75 கி.மீ. வேகத்திலும் இயக்கப்படுகின்றன. கன்டெய்னர் ரெயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன.

2023-2024-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில்பாதையையும் மின்மயமாக ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

2020-ம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி இந்திய ரெயில்வேக்கு சொந்தமாக 76 ஆயிரத்து 608 பயணிகள் ரெயில் பெட்டிகளும், 2 லட்சத்து 93 ஆயிரத்து 77 சரக்கு பெட்டிகளும், 12 ஆயிரத்து 729 ரெயில் என்ஜின்களும் உள்ளன.

சென்னை பெரம்பூர் (ஐ.சி.எப்.), பஞ்சாப் மாநிலம் கபுர்தலா, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, மராட்டிய மாநிலம் லத்தூர் ஆகிய இடங்களில் ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. சித்தரஞ்சன் (மேற்கு வங்காளம்), வாரணாசி (உத்தரபிரதேசம்), மாதேபுரா (பீகார்), பாட்டியாலா (பஞ்சாப்) ஆகிய இடங்களில் மின்சார ரெயில் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும், மர்கோவ்ராவில் (பீகார்) சரக்கு ரெயில்களுக்கான அதிக சக்திவாய்ந்த டீசல் என்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலையும் இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, பீகார் மாநிலம் சாப்ரா ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் ரெயில்களுக்கு தேவையான சக்கரங்கள் மற்றும் அச்சுகள் தயாரிக்கப்படுகின்றன.

1990-ம் ஆண்டு காலகட்டத்துக்குள் நீராவி என்ஜின்கள் படிப்படியாக அப்புறப்படுத்தப்பட்டு டீசல், மின்சார என்ஜின்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது சில பாரம்பரிய ரெயில்கள் மட்டும் நீராவி என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

நாடு முழுவதும், ரெயில் என்ஜின்களை பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் 44 கூடங்களும், பயணிகள் பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டிகளை பழுதுபார்க்க 212 கூடங்களும் உள்ளன.

1951-ம் ஆண்டு முதல் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் மின்விளக்கு, மின்விசிறி கட்டாயம் என்ற முறை கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டில் தூங்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதன்முதலாக 1956-ம் ஆண்டு ஹவுரா-டெல்லி இடையே முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ரெயில் (பூர்வா எக்ஸ்பிரஸ்) இயக்கப்பட்டது.

அடுத்த 10 ஆண்டுகளில் மும்பை-ஆமதாபாத் இடையே முதல் கன்டெய்னர் சரக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்தியாவில் மிக நீண்ட தூரம் மற்றும் மிக நீண்ட நேரம் பயணிக்கும் ரெயில் கன்னியாகுமரி-ஜம்முதாவி இடையே ஓடும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரெயில் 3,745 கி.மீ. தூரத்தை 74 மணி 55 நிமிடங்களில் ஓடி கடக்கிறது. 1998-ல் முதல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் டெல்லி-மத்தியபிரதேச மாநிலம் ஜான்சி இடையே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அது போபால் வரை நீட்டிக்கப்பட்டது.

முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட அதிவேக ரெயில்கள் இப்போது அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், புனே, லக்னோ, கான்பூர், பாரபங்கி நகரங்களில் புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கொங்கன் ரெயில் பாதையில் கோவாவில் உள்ள பெர்னம் என்ற இடத்தில் இருந்து கர்நாடகத்தில் உள்ள கார்வார் வரையும் புறநகர் ரெயில் இயக்கப்படுகிறது.

மேலும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட பெரு நகரங்களில் மெட்ரோ ரெயில்களும் ஓடுகின்றன.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களை இணைக்கும் வகையில் சுற்றுலா ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

இந்திய ரெயில்வேயில் 1993-ம் ஆண்டு தூங்கும் வசதி கொண்ட 3 அடுக்கு குளிர்சாதன வசதி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

முதன் முதலாக 1986-ம் ஆண்டு டெல்லி ரெயில் நிலையத்தில் கம்ப்யூட்டர் மூலம் டிக்கெட் வழங்கும் மற்றும் முன்பதிவு முறை தொடங்கப்பட்டது.

2002-ம் ஆண்டு ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள சேவை மூலம் ஆன்லைனில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை தொடங்கப்பட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 300 ரெயில் விபத்துகள் ஏற்படுகின்றன. ரெயிலில் மனிதர்கள் அடிபட்டு இறப்பது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன. 83 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே காரணம் என தெரியவந்துள்ளது. வனப்பகுதிகளில் யானைகள் அடிபட்டு இறப்பதும் அவ்வப்போது நடைபெறுகிறது. தடம் புரளுவது, ரெயில்கள் மோதல் போன்ற விபத்துகள் சமீப காலமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கொங்கன் ரெயில் பாதையில் மழைக்காலத்தில் ஏற்படும் நிலச்சரிவுகள் விபத்துகளுக்கு காரணமாகின்றன.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் கட்டப்பட்ட பாலங்களையும், பழமையான தண்டவாளங்களையும் அடிக்கடி பழுதுபார்க்க வேண்டி உள்ளது.

இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மட்டும் இன்னும் ரெயில் போக்குவரத்தால் இணைக்கப்படவில்லை. மேற்கு வங்காளத்துடன் சிக்கிம் மாநிலத்தை ரெயில் போக்குவரத்தில் இணைக்க, சிவோக்-ரங்ப்பூ இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

நம் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து வாரத்துக்கு 4 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயிலும், ஜோத்பூரில் இருந்து கராச்சிக்கு தார் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தன. காஷ்மீர் பிரச்சினையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக 2019-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் அந்த ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மற்றொரு அண்டை நாடான நேபாளத்துக்கும் ரெயில் பாதை இணைப்பு உள்ளது.

ஆனால் பூடான், மியான்மர் நாடுகளுக்கு ரெயில் போக்குவரத்து தொடர்பு இல்லை.

2021-2022-ம் நிதி ஆண்டில் ரெயில்வேயின் மொத்த வருமானம் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்து 128 கோடி ஆகும். செலவினங்கள் போக நிகர வருவாய் ரூ.34 ஆயிரத்து 599 கோடி.

2016-ம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட்டுக்கு 2 நாட்கள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 26-ந்தேதி ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. 92 ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறை 2017-ல் முடிவுக்கு வந்தது. அந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் சேர்ந்து ரெயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.

சூரியனைப் போல் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்திய ரெயில்கள், கொரோனா பரவல் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய முழுஅடைப்பு அறிவிக்கப்பட்டதால் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந்தேதி முதல் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு மீண்டும் படிப்படியாக போக்குவரத்து தொடங்கியது. அதற்கு முன்னதாக, ஒருமுறை ரெயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் 1974-ம் ஆண்டு மே 8-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 20 நாட்கள் நாடு முழுவதும் ரெயில்கள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இந்தியாவின் முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் ரெயில்வேயின் பங்கு மகத்தானது என்பதை யாரும் மறுக்க முடியாது. வரும் காலங்களில் பயணிகளுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளிப்பதிலும், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் ரெயில்வேயின் சேவை மேலும் சிறப்பாகவும், நவீனமாகவும் அமையும் என்று நம்புவோம்.

19 மண்டலங்கள்


இந்தியாவில் நிர்வாக வசதிக்கு ஏற்ப ரெயில் போக்குவரத்து 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை வருமாறு:-

1.மத்திய ரெயில்வே (தலைமையகம் மும்பை), 2.கொங்கன் ரெயில்வே (நவி மும்பை), 3.மெட்ரோ ரெயில்வே கொல்கத்தா (கொல்கத்தா), 4.வடக்கு ரெயில்வே (டெல்லி), 5.வடக்கு மத்திய ரெயில்வே (பிரயாக்ராஜ்), 6.வடகிழக்கு ரெயில்வே (கோரக்பூர்), 7.வடகிழக்கு முன்னணி ரெயில்வே (மாலிகான்), 8.வடமேற்கு ரெயில்வே (ஜெய்ப்பூர்), 9.கிழக்கு ரெயில்வே (கொல்கத்தா), 10.கிழக்கு மத்திய ரெயில்வே (ஹாஜிப்பூர்), 11.கிழக்கு கடற்கரை ரெயில்வே (புவனேஸ்வரம்), 12.தெற்கு ரெயில்வே (சென்னை), 13.தென்மத்திய ரெயில்வே (செகந்திராபாத்), 14.தெற்கு கடற்கரை ரெயில்வே (விசாகப்பட்டினம்), 15.தென்கிழக்கு ரெயில்வே (கார்டன் ரீச் கொல்கத்தா), 16.தென்கிழக்கு மத்திய ரெயில்வே (பிலாஸ்பூர்), 17.தென்மேற்கு ரெயில்வே (ஹூப்பள்ளி), 18.மேற்கு ரெயில்வே (மும்பை), 19.மேற்கு மத்திய ரெயில்வே (ஜபல்பூர்).

தெற்கு ரெயில்வேயில் 50 கோடி பேர் பயணம்


சென்னையை தலைமையகமாக கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே 1951-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி, சென்னை ரெயில்வே, தெற்கு மராத்தா ரெயில்வே, தென் இந்திய ரெயில்வே, மைசூரு மாகாண ரெயில்வே ஆகியவற்றை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது.

தெற்கு ரெயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மட்டுமின்றி கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவும் தெற்கு ரெயில்வேயில் அடங்கியுள்ளன.

தெற்கு ரெயில்வேயில் 9,654 கி.மீ. நீளமுள்ள ரெயில்பாதை உள்ளது. இங்கு இயக்கப்படும் ரெயில்களில் ஆண்டுக்கு 50 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்கிறார்கள். சென்னையில் புறநகர் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

சரக்கு போக்குவரத்தை பொறுத்தமட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி, கொச்சி, மங்களுரு துறைமுகங்களில் இருந்து சரக்கு ரெயில்கள் மூலம் பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி, உணவு தானியங்கள், வாகனங்கள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் அங்கு கொண்டு வரப்படுகின்றன.

தெற்கு ரெயில்வேயின் சார்பில் இயக்கப்படும் ரெயில்களின் பெட்டிகள் சுத்தமாகவும், சுகாதாரமும் பராமரிக்கப்படுவதாக சான்று பெற்றுள்ளது.

அரக்கோணம், ராயபுரம் ஆகிய இடங்களில் மின்சார என்ஜின் பழுதுபார்ப்பு கூடங்களும், எர்ணாகுளம், திருச்சி பொன்மலை, தண்டையார்பேட்டையில் டீசல் என்ஜின் பழுதுபார்ப்பு கூடங்களும், குன்னூரில் நீராவி என்ஜின் பழுதுபார்ப்பு கூடமும் உள்ளது. ஈரோட்டில் மின்சார மற்றும் டீசல் ஆகிய இருவகை என்ஜின்களை பழுதுபார்க்கும் கூடம் இருக்கிறது.

தெற்கு ரெயில்வேயில் பல்வேறு புதிய ரெயில் பாதை திட்டங்களும், இரட்டை பாதை அமைக்கும் திட்டங்களும், மின்மயமாக்கல் பணிகளும், புதிய பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணிகளும், நடைபெற்று வருகின்றன.

அந்தமான் நிக்கோபாரில் தலைநகர் போர்ட்பிளேரில் இருந்து டிங்லிபுர் வரை 240 கி.மீ. தூரத்துக்கு ரெயில்பாதை அமைப்பதற்கான ஆய்வுப்பணியும் நடந்து வருகிறது.

ஊட்டி, டார்ஜிலிங் மலை ரெயில்கள்



வணிகர்கள் என்ற போர்வையில் வந்து இந்தியாவை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களுக்கு, நம் நாட்டின் தட்பவெட்ப நிலை பெரிய எதிரியாக அமைந்தது. குளிர் பிரதேசத்தில் வாழ்ந்த அவர்களால் இங்குள்ள சுட்டெரிக்கும் வெயிலை தாங்க முடியவில்லை. இதனால் மலைவாசஸ்தலங்களை நோக்கி ஓடத் தொடங்கினார்கள்.

மலைவாசஸ்தலங்களுக்கு சென்று தங்கிய அவர்கள் அங்கு போய் வருவதற்காக 5 இடங்களை தேர்வு செய்து ரெயில் பாதை அமைத்து, ரெயில் போக்குவரத்தை தொடங்கினார்கள். 1844-ல் சர் ஜான் லாரன்ஸ் என்பவர் இந்தியாவின் கவர்னராக இருந்த போது இதற்கான பணிகள் தொடங்கின.

அவர்கள் அமைத்த அந்த 5 மலைரெயில் பாதைகளை பார்ப்போம்...

* ஆங்கிலேயர்கள் முதன்முதலில் 1881-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங்குக்கு 610 மி.மீ. அகலம் (2 அடி) கொண்ட குறுகிய அளவிலான ரெயில் பாதை அமைத்தனர். இமயமலையின் அடிவாரத்தில் உள்ள சிலிகுரியில் இருந்து இந்த பாதையில் புறப்படும் 'பொம்மை ரெயில்' என அழைக்கப்படும் 'குட்டி ரெயில்' 86 கி.மீ. பயணம் செய்து கடல் மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில் உள்ள டார்ஜிலிங்கை அடைகிறது. நீராவி என்ஜின் மூலம் இந்த ரெயில் இயங்குகிறது.

முதலில் சரக்கு போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டு 2-ம் உலகப்போரின்போது சிப்பாய்களையும் ஆயுதங்களையும் கொண்டு செல்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட இந்த ரெயில், பின்னர் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

* தமிழகத்தில் கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2,240 மீட்டர் உயரத்தில் உள்ள ஊட்டிக்கு மீட்டர் கேஜ் ரெயில்பாதை அமைக்கப்பட்டு மலைரெயில் இயக்கப்படுகிறது. முதலில் 1899 முதல் குன்னூர் வரை இயக்கப்பட்ட இந்த ரெயில், பின்னர் 1908 முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டது. 46 கி.மீ. தூரம் கொண்ட இந்த அழகான மலைப்பாதையில் 208 வளைவுகள், 16 குகைகள், 250 பாலங்கள் உள்ளன. உயர்ந்த மலைகளின் பசுமை, சலசலக்கும் நீரோடைகள், காட்டு மிருகங்களை பார்த்து ரசித்துக்கொண்டே 5 மணி நேரம் பயணிக்கலாம்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மிகவும் சரிவான பாதை என்பதால் தண்டவாளத்தின் நடுவே பல்சக்கர அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதை பற்றிக்கொண்டே ரெயில் இயங்குகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையும்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் மூலமும், குன்னூர்-ஊட்டி இடையே டீசல் என்ஜின் மூலமும் இயக்கப்படுகிறது. இந்தியாவில் பல் சக்கர அமைப்பு கொண்ட ஒரே ரெயில்பாதை இதுதான்.

* இமாசலபிரதேச மாநிலத்தில் இமயமலையின் அடிவாரத்தில் உள்ள கல்காவில் இருந்து 2,076 மீட்டர் உயரத்தில் உள்ள சிம்லா வரை 96 கி.மீ. நீளத்துக்கு 762 மி.மீ. அகலம் (2.6 மீட்டர்) கொண்ட 'போஸ்னியன்' வகை ரெயில்பாதை அமைக்கப்பட்டு 1903-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆங்கிலேயர்கள் சிம்லாவை கோடை கால தலைநகர் ஆக்கியதோடு, படை தலைமை அலுவலகத்தையும் அங்கு மாற்றினார்கள். இதற்காகவே அவர்கள் சிம்லாவுக்கு ரெயில்பாதை அமைத்தனர்.

* மராட்டிய மாநிலத்தில் மாதரன் மலைப்பகுதியில் நேரல்-மாதரன் இடையே 20 கி.மீ. தூரத்துக்கு 1907-ம் ஆண்டு முதல் பாரம்பரிய மலைரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் 610 மி.மீ. (2 அடி) அகலம் கொண்ட தண்டவாளத்தில் பயணிக்கிறது.

* காஷ்மீர் மாநிலம் காங்க்ரா பள்ளத்தாக்கில் 762 மி.மீ. (2 அடி 6 அங்குலம்) அகலம் கொண்ட 'போஸ்னியன்' வகை ரெயில் பாதையில் 1929 முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பாதையின் மொத்த தூரம் 164 கி.மீ. ஆகும்.

* இவற்றில் டார்ஜிலிங், நீலகிரி, சிம்லா மலை ரெயில்கள் 'யுனெஸ்கோ' அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. மாதரன் மலைரெயில் 'யுனெஸ்கோ' பாரம்பரிய சின்னங்களின் தற்காலிக பட்டியலில் இடம்பெற்று இருக்கிறது.

* சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய இந்த மலை ரெயில்களில் சினிமா படங்களும், பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டு உள்ளன.

மிரண்டு ஓடிய ஆடு, மாடுகள்

* ரெயில் போக்குவரத்தின் பரிணாம வளர்ச்சி மிகவும் வினோதமாகவே இருந்தது. ஆரம்பத்தில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு அதில் ரெயில் பெட்டிகள் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குதிரைகள் மூலம் இழுத்துச் செல்லப்பட்டன. தொடக்க காலத்தில் போர்த்தளவாடங்கள் மற்றும் சரக்குகளை கொண்டு செல்வதற்கே ரெயில்கள் பயன்படுத்தப்பட்டன. அதன்பிறகு படிப்படியாக நீராவி, நிலக்கரி, டீசல், மின்சார என்ஜின்கள் மூலம் ரெயில்கள் இயக்கப்பட்டன. பயணிகளும் அதில் செல்லத் தொடங்கினார்கள்.

முதன் முதலில் என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்ட போது பலத்த சத்தம் ஏற்பட்டதால், தண்டவாளத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு மாடுகளெல்லாம் மிரண்டு போய் சிதறி ஓடின. எனவே, ரெயில்களை இயக்குவதால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தும், கால்நடைகளுக்கு பாதிப்பும் ஏற்படும் என்று ஆரம்ப காலத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்புகளையெல்லாம் கடந்துதான் இன்று ரெயில் போக்குவரத்து புதிய வளர்ச்சியை எட்டி இருக்கிறது.

* ஆரம்ப காலத்தில் சினிமா படங்கள் ஸ்டில்களாகவே காட்டப்பட்டன. அதன்பிறகே சலன சித்திரங்கள் ('மோஷன் பிக்சர்ஸ்') படமாக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அகஸ்டி, லூயிஸ் லுமியர் சகோதரர்கள் 50 வினாடிகள் ஓடும் 'அரைவல் ஆப் டிரைன்' (ரெயிலின் வருகை) என்ற சலன சித்திரத்தை படமாக்கினார்கள்.

அதாவது ஒரு ரெயில், லாசியோடட் என்ற ரெயில் நிலையத்தில் வந்து நிற்பதை பற்றியதுதான் அந்த படம். கறுப்பு-வெள்ளையில் எடுக்கப்பட்ட அந்த படத்தை பாரிஸ் நகரில் உள்ள ஒரு அரங்கில் 1895-ம் ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி அவர்கள் திரையிட்டு காட்டினார்கள். திரையில் படம் ஓடத் தொடங்கியதும், ரெயில் வேகமாக தங்கள் மீது மோத வருவதாக கருதிய பார்வையாளர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு எழுந்து ஓடியதாக ஒரு தகவல் உண்டு.

இரண்டு எழுத்து ரெயில் நிலையம்






சென்னையில் உள்ள 'புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்' தான் இந்தியாவில் மிகவும் நீளமான பெயர் கொண்ட ரெயில் நிலையம் ஆகும். (இந்த ரெயில் நிலையத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்படும் வரை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'வெங்கட நரசிம்மராஜூவாரிபேட்டா ரெயில் நிலையம்' தான் நீண்ட பெயர் கொண்ட ரெயில் நிலையமாக இருந்தது.) மிகச்சிறிய பெயர் கொண்ட ரெயில் நிலையம் 'இப்'. இது ஒடிசா மாநிலத்தில் உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி ரெயில் நிலையத்தில் உள்ள 1,507 மீட்டர் நீளம் கொண்ட பிளாட்பாரம், உலகிலேயே மிகவும் நீளமான ரெயில்வே பிளாட்பாரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்