அருள் பொங்கும் ஆடி மாதம்...!
|ஆடி மாதம் பிறந்து விட்டாலே அம்மனை வழிபாடு செய்யும் பொது மக்களுக்கு திருவிழா மனநிலை ஏற்பட்டு விடுகிறது. அதற்கு ஏற்றார் போல ஆடி மாதத்தில் ஏராளமான திருவிழாக்கள் அம்மனுடைய பெயரிலேயே அமைந்திருக்கின்றன. திருவிழா மாதமான ஆடியில் திருமணம் போன்ற சுப காரியங்களை பொதுவாக செய்வதில்லை. ஏன் என்று கேட்டால் மனிதர்களுடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில் ஆடி மாதம் என்பது தேவர்களுக்கான மாலை வேலையாக குறிப்பிடப்படுகிறது. அதனால் அது சுபகாரியங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் திருமணம் போன்ற விஷயங்களை ஆடி மாதத்தில் பொதுவாக செய்யப்படுவதில்லை.
பூமியினுடைய சுற்றுவட்ட பாதை வடக்கு திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி மாற்றிப் பயணிக்கும் காலம் ஆடி மாதத்தின் முதல் நாளாகும். அதை தட்சிணாயன புண்ணிய காலம் என்று சொல்வார்கள். அதன் அடிப்படையில் ஆடி மாதத்தில் பண்பாட்டு ரீதியாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பல்வேறு பழமொழிகள் இருக்கின்றன.
ஆடி அழைக்கும் தை துரத்தும் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது ஆடி மாதத்தில் அவரவர்களது குடும்ப முன்னோர்களை அழைத்து வரக் கூடிய மாதமாகவும், தை முதல் நாளான உத்திராயண புண்ணிய காலத்தில் அவர்களை அவர்களுடைய உலகத்திற்கு அனுப்பி வைக்கும் நாளாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலத்தில், பகல் பொழுது குறைவாகவும், இரவுப் பொழுது நீண்டும் இருக்கும்.
மேலும் தேவர்களுக்கு உரிய மாதமான ஆடியில் மழைக்காலம் தொடங்கிவிடும். வேளாண் பணிகளில் மக்கள் ஈடுபடும் காரணத்தால் வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடந்தால் அதன் காரணமாக வேளாண்மை பணிகளுக்கு தடை ஏற்படும். அதனால், ஆடி மாதத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகளை வீடுகளில் செய்யாமல், கோவில் திருவிழாக்களை நடத்தி ஊர் கூடி பொது நலனுக்காக வழிபாடு செய்தார்கள்.
காற்றடிக்கும் மாதமான ஆடியில் பிராண வாயுவின் சக்தி வழக்கத்தை விட கூடுதலாகவே இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த வேப்பிலை, எலுமிச்சம் பழம், கூழ் ஆகியவை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன. இவைகளை உபயோகப்படுத்துவதில், அறிவியல் ரீதியான காரணம் உண்டு.
இந்த நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். அம்மனுக்கு படைத்த ஆடிக்கூழை சாப்பிடும் பொழுது, வெப்பம் குறைத்து, உடலை சீரான நிலையில் வைக்கும். எலுமிச்சம்பழத்திற்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் சக்தி உண்டு. வேப்பிலை தீய சக்திகளையும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது.
வேம்பும், மஞ்சளும் அம்மனின் அம்சங்கள் என கருதப்படுகின்றன. ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் என்ற பழமொழியும் உண்டு. ஆடி, காற்று காலமாகும். எனவே ஆடி காற்று வழியாக தொற்று நோய்கள் பரவலாம். அதைத் தடுப்பதற்காகவே ஆடி மாதத்தில் வீட்டின் முன் வேப்பிலை கட்டி வைப்பதும், வாசலில் மஞ்சள் நீர் தெளிப்பதும் வழக்கமாக இருந்தன. இவை இரண்டும் பெரிய கிருமி நாசினிகள் என்பதால் கிருமிகள் வீட்டில் வருவது தடுக்கப்படும். மேலும், ஆடி மாதத்தில் மட்டுமாவது சுமங்கலி பெண்கள் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.
ஆடி முதல் நாள் ஆடிப்பண்டிகையைத் தொடர்ந்து, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், நாக பஞ்சமி, ஆடிப்பெருக்கு, வரலக்ஷ்மி விரதம், ஆடித்தபசு, ஹயக்ரீவர் ஜெயந்தி, மகா சங்கடஹர சதுர்த்தி, கோகுலாஷ்டமி மற்றும் ஆடிக்கிருத்திகை என்று பல சுப நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பெண்கள், ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி ஆடி ஞாயிறு ஆகிய நாட்களில் விரதம் இருந்தும், வேப்பிலை ஆடை அணிந்தும், அலகு குத்தியும், பூ மிதி (தீ மிதி) விழா எடுத்தும் தங்களின் கோரிக்கையை அம்மனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.