மாடுகளை தாக்கும் 3 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி
|மாடு, எருமை, ஆடுகளின் நுரையீரல், வயிறு மற்றும் குடல் பகுதிகளை தாக்கி, விரைவாக பரவி திடீர் இறப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்றுதான், தொண்டை அடைப்பான் நோயாகும். இந்த நோய் வரும் முன் மாடுகளை பாதுகாப்பது பால் மாடு வளர்ப்பு பண்ணையில் இழப்பை தவிர்க்கும்.
நோய் காரணம்
தொண்டை அடைப்பான் நோய், பாச்சரல்லோ மல்டோசீடா என்ற பாக்டீரியா கிருமியால் ஏற்படும் தொற்று. இந்நோய் கிருமிகள் மாடு, எருமை மற்றும் ஆடுகளின் தொண்டை பகுதியில் இயற்கையாக வாழக்கூடியவை.
பருவ மழைக்காலங்களில் ஏற்படும் அதிக மழை, ஈரத்தன்மை, தீவன பற்றாக்குறை மற்றும் மாட்டு கொட்டகையில் இடப்பற்றாக்குறையால் மாடுகளிடம் ஏற்படும் அழற்சி ஆகிய காரணங்களால் இந்நோய் கிருமிகள் பெருகி மாடு, எருமை மற்றும் ஆடுகளில் நோய் பரவ காரணமாகிறது.
இந்நோய் அதிவேகமாக பரவி மாடு, எருமைகளில் 80 சதவீத இறப்பை ஏற்படுத்தி அதிக பொருளாதார சேதத்தை ஏற்படுத்துவதால், நாட்டின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நோயாக கருதப்படுகிறது. அதிதீவிர வகை நோயாக மாடு, எருமை மற்றும் ஆடுகளில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய நோய்களில் இந்த நோயும் ஒன்று.
தீவனம் மூலம் பரவுகிறது
நோய் பாதித்த மாடுகளுக்கு வழங்கிய தீவனம் மற்றும் குடிநீரை பிற மாடுகள் உட்கொள்ளும் போதும், நோய் பாதித்த மாடுகளில் இருந்து பிற மாடுகளுக்கு தொடர்பு ஏற்படுவதன் மூலமாகவும், நோய் பாதித்த மாடுகளில் இருந்து சளி காற்றில் பரவி அருகில் உள்ள மாடுகள் அதனை சுவாசிப்பதன் மூலமாகவும் பரவுகிறது.
அதிக காய்ச்சல், தீவனம் உண்ணாமல் இருப்பது, பால் உற்பத்தி முழுமையாக குறைதல், வாயில் இருந்து தொடர்ச்சியாக எச்சில் வடிதல், மூக்கில் இருந்து அதிக சளி வடிதல், தொண்டை பகுதியில் திடீர் வீக்கம் ஏற்பட்டு மூச்சு திணறல், நெஞ்சு பகுதி, வயிறு அடிப்பகுதியில் வீக்கம் ஏற்படுதல், கழிச்சல், நோய் முற்றிய நிலையில் நிற்க இயலாமல் படுத்து கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட 2 நாட்களுக்குள் மாடு மற்றும் எருமைகள் இறந்துவிடும். மாட்டு பண்ணைகள் மற்றும் எருமை பண்ணைகளில் பருவ மழைக்காலம், அதிக குளிர் காலங்களில் இத்தகைய அதிதீவிர வகை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதால் பண்ணையாளர்கள் பருவ மழைக்காலங்களில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
பருவ மழைக்காலங்களில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து நோய் ஏற்படாத பகுதிகளுக்கு மாடு, எருமைகளை வாங்கி கொண்டு செல்லும் போதும் இந்நோய் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.
இணை நோய் வகை
காணை நோய் போன்ற நோய்கள் மாடு மற்றும் எருமை மாடுகளில் பரவும்போது, தொண்டை அடைப்பான் நோய்க்கு இணை நோயாக ஏற்படுகிறது. இதனால் காணை நோய் ஏற்பட்ட மாடுகளில் அதிக இறப்புகள் ஏற்படும். ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணமாக்கலாம்.
ஆடுகளில் இந்நோய் மற்ற நோய்களுடன் இணை நோயாக ஏற்பட்டு சளி, கழிச்சல் மற்றும் ரத்தம் கலந்த கழிச்சல் அறிகுறியை ஏற்படுத்துகிறது. சில ஆடுகளின் தொண்டை பகுதியில் திடீர் வீக்கம் ஏற்படும். கால்நடை மருத்துவர் மூலம் நோயை கண்டறிந்து முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் இறப்பு ஏற்படும்.
நோய் பாதிப்புக்கு உள்ளாகும் மாடுகளில் இருந்து ரத்தம், தொண்டை வீக்கத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வகத்தில் பரிசோதித்து நோயை கண்டறியலாம்.
நோய் பிரித்தறிதல்
மாடு, எருமைகள் நச்சுயிரிகள் கடித்து இறப்பது, இடி-மின்னல் தாக்கி திடீர் என இறப்பது, வயிறு உப்புசம் ஏற்பட்டு மூச்சு திணறி இறப்பு, அதிதீவிர சப்பை நோய், அடைப்பான் நோய் போன்ற நோய்களில் திடீர் இறப்புகள், தொண்டை அடைப்பான் நோயில் ஏற்படுவது போல் ஏற்படும். உடனடியாக நோயை கால்நடை மருத்துவர் மூலம் அறிந்து சிகிச்சை அளிப்பது சிறந்த வழிமுறையாகும்.
நோய் அடிக்கடி ஏற்படும் பகுதிகளில் தொண்டை அடைப்பான் தடுப்பூசி வருடம் ஒரு முறை பருவ மழைக்காலத்திற்கு முன் போட வேண்டும். கன்றுகளுக்கு முதல் தடுப்பூசி 6 மாத வயத்தில் போட வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி 6 மாதம் கழித்து போட வேண்டும்.
தடுப்பூசி
தொண்டை அடைப்பான் நோய், சப்பைநோய் மற்றும் காணை நோய் ஆகிய 3 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி தற்போது கிடைக்கிறது. இன்டியன் இமுனாலாஜிக்கல் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பருவ மழைக்காலங்களுக்கு முன் இந்த தடுப்பூசியை மாடுகளுக்கு போடுவதன் மூலம் 3 நோய்களையும் தடுக்கலாம். பருவமழை காலங்களில் அதிக ஈரப்பதமான இடங்களில் மாடுகளை பராமரிக்க கூடாது. மழைக்காலங்களில் புதிய இடங்களில் இருந்து மாடுகளை வாங்கி பண்ணையில் சேர்க்கக்கூடாது. மழைக்காலங்களில் கன்றுகளில் நோய் ஏற்பட்டால் உடனடியாக தனியே பிரித்து பராமரித்து கால்நடை மருத்துவர் மூலம் தொடர் சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்த வேண்டும்.