< Back
சிறப்பு செய்திகள்
பேரழிவை ஏற்படுத்தலாம்.. பனிப்பாறைகளுக்குள் புதைந்து இருக்கும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
சிறப்பு செய்திகள்

பேரழிவை ஏற்படுத்தலாம்.. பனிப்பாறைகளுக்குள் புதைந்து இருக்கும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தினத்தந்தி
|
23 Jan 2024 4:14 PM IST

வைரஸ்கள் 48,500 ஆண்டுகளுக்கும் பழைமை வாய்ந்தவை என்றால் இவ்வளவு காலம் அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வரலாம்.

புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது புதிது புதிதாக வைரஸ்களும் பரவி மனித குலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. சீனாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதல் பரவிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது.

அதன்பிறகு பெருந்தொற்று என்ற வார்த்தை கேட்டாலே மக்கள் மத்தியில் ஒரு வித பீதி ஏற்பட்டு விடுகிறது. இந்தநிலையில், 48,500 ஆண்டுகளுக்கும் மேலாக பனிப்பாறைகளுக்குள் இருக்கும் ஜாம்பி வைரஸ் ஒன்று அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

புவி வெப்பம் காரணமாக ஆர்க்டிக் பெர்மாஃப்ரோஸ்ட் பகுதி உருகி வரும் நிலையில், அங்குள்ள பனிபாறைகளுக்குள் பல காலமாக உறைந்து கிடக்கும் 'ஜாம்பி வைரஸ்களை' வெளியாகலாம் என்றும் இந்த ஜாம்பி வைரஸ்கள் சர்வதேச அளவில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் ஆற்றல் கொண்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு சைபீரியன் பெர்மாஃப்ரோஸ்டில் இருந்து சில மாதிரிகளை ஆய்வாளர்கள் மீட்டெடுத்தனர். அதில் உள்ள வைரஸ்களுக்கு புத்துயிர் கொடுத்துப் பார்க்கும் போது அவை பல ஆயிரம் ஆண்டுகள் உறைந்தே இருந்தது தெரிய வந்தது.

புவி வெப்பமடைதல் அதிகரிப்பதால் இந்த பனிக்கட்டிகள் உருகுவதே இந்த வைரஸ்கள் இப்போது வெளிவரும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "புவி வெப்ப மயமாதலால் ஆர்டிக் பகுதி உருகுகிறது. இது சைபீரியாவில் கப்பல் போக்குவரத்து, தொழில்துறை வளர்ச்சியை அதிகரிக்கிறது. அங்கே மிகப்பெரிய சுரங்க நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ஆனால், இதனால் மற்றொரு பேராபத்தும் ஏற்படும். அதுதான் இந்த ஜாம்பி வைரஸ்கள்" என்று எச்சரிக்கிறார்கள். இந்த வைரஸ்கள் 48,500 ஆண்டுகளுக்கும் பழைமை வாய்ந்தவை என்றால் இவ்வளவு காலம் அது எப்படி இருக்கும் என்ற சந்தேகம் வரலாம். பனிப்பாறைகளுக்கு கீழ் கேப்சூல் போல இந்த வைரஸ்கள் ஆற்றலுடன் அப்படியே இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

வெப்பம் அதிகரித்து வருவதால் பனி உருகுவதால், அந்த வைரஸ்கள் வெளிப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுவருகிறது. இந்த வைரஸ்களின் தொற்று ஏற்பட்டால், பூமியின் தென் பகுதிகளில் தொடங்கி, வடக்கு நோக்கி அதன் பாதிப்பு தொடரும் என்றும் எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மேலும் செய்திகள்