< Back
சிறப்பு செய்திகள்
உலக நுரையீரல் புற்றுநோய் தினம்
சிறப்பு செய்திகள்

இன்று உலக நுரையீரல் புற்றுநோய் தினம்.. நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க ஆலோசனைகள்

தினத்தந்தி
|
1 Aug 2024 5:01 PM IST

நுரையீரலைப் பாதுகாக்கவேண்டும் என்றால் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், புகைப்படிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும்.

நுரையீரல் புற்றுநோய் மற்றும் உலகம் முழுவதும் தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ம் தேதி உலக நுரையீரல் புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள்நடத்தப்படுகின்றன. நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்தில் இருப்பவர்கள் யார்? அவர்கள் ஆபத்தை எப்படி தவிர்ப்பது? சரியான சிகிச்சை முறை என்ன? என்பது குறித்து இந்த நாளில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.

சுவாசக் குழாய் வழியாக நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை செய்கிறது நுரையீரல். எனவே, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.

புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உண்டு என்பதை அனைவரும் அறிவோம். புகைப்பிடிப்பவர்களை மட்டும் அல்லாமல் அவர் வெளியிடும் நச்சுக் காற்றை சுவாசிக்கும் நபர்களுக்கும் புற்றுநோய் பாதிப்பதால், புகைப்பிடிப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள்..

* நுரையீரல் புற்றுநோய் மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே, புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், புகைப்பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகியிருக்கவேண்டும்.

* காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்வது நல்லது. காற்று மாசுபாடு உள்ள இடங்களில் வசிப்பவர்கள் முடிந்தால் காற்று சுத்திகரிப்பானை பயன்படுத்தலாம். வீட்டில் காற்றோட்டம் நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.

* நுரையீரலை வலுப்படுத்தவும், சுவாச செயல்பாட்டை மேம்படுத்தவும், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி அல்லது நீச்சல் போன்ற வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடலாம்.

* நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் நிறைந்த ஒரு சீரான உணவை உட்கொள்ளவேண்டும். குறிப்பாக பெர்ரி மற்றும் இலை கீரைகள் போன்ற ஆன்டிஆக்சிடன்ட் அதிகம் உள்ள உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உகந்தது.

* நுரையீரல் திறனை அதிகரிக்கவும் ஆக்சிஜன் பரிமாற்றத்தை மேம்படுத்தவும் ஆழ்ந்த சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

* தேவையான அளவு தண்ணீர் குடித்தால் நுரையீரல் சிறப்பாக செயல்படும்.

* சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க, தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது நல்லது.

* இருமல், சளி போன்ற பாதிப்புகள் நீண்டநாள் நீடித்தாலோ, நுரையீரல் ஆரோக்கியத்தில் ஏதாவது பின்னடைவு ஏற்பட்டதாக உணர்ந்தாலோ, மருத்துவரிடம் பரிசோதனை செய்து தெளிவு பெறவேண்டும்.

மேலும் செய்திகள்