நோய் வரும்முன் காக்க, முறையான உணவு பழக்கம் அவசியம்.. இன்று உலக அயோடின் குறைபாடு தினம்
|அயோடினின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
அயோடின் சத்து நம் உடல்நலத்திற்கு இன்றியமையாதது. ஹார்மோன்களுக்கான முக்கிய அங்கமாகவும், வளர்ச்சிக்கு முக்கியமானதாகவும் தைராய்டு உள்ளது. மூளை வளர்ச்சிக்காகவும், குறிப்பாக கருப்பையில் குழந்தைக்கு மிகவும் அவசியமானதாகவும் இது உள்ளது. எனினும் அயோடினின் முக்கியத்துவம் பற்றி பலரும் அறியாமல் உள்ளனர். அயோடின் இல்லையென்றால் கடுமையான வளர்ச்சி பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளலாம்.
எனவே, அயோடினின் முக்கியத்துவம், உடல் ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், அத்தியாவசிய ஊட்டச்சத்து சுகாதாரத்தை பாதுகாப்பதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 21ம் தேதி உலக அயோடின் குறைபாடு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு இன்று உலக அயோடின் குறைபாடு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் அயோடின் குறித்த பல்வேறு விஷயங்களை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
அயோடின் குறைபாடு பொதுவான பிரச்சனைகளாக மாறிவிட்டது. அயோடின் நிறைந்த உணவுகள் கிடைக்காததால் மட்டும் இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை. மக்கள் சாப்பிடும் நவீன கால உணவுகளாலும் இப்பிரச்சனை ஏற்பட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அயோடின் குறைபாடு அறிகுறிகள்
தைராய்டு வீக்கம் (கோய்ட்டர்), சோர்வு, உடல் எடை அதிகரிப்பு, மலச்சிக்கல், முகத்தில் வீக்கம், தசை பலவீனம், வறண்ட சருமம், அதிகமாக குளிர்வது போன்ற உணர்வு. அசாதாரண மாதவிடாய் சுழற்சிகள், முடி உதிர்தல், மனச்சோர்வு, கொலஸ்ட்ரால் அதிகரித்தல் போன்றவை அயோடின் குறைபாட்டுக்கான அறிகுறிகள்.
நோய் கண்டறிதல்
தைராய்டு அல்ட்ராசவுண்ட், தைராய்டு ஸ்கேன் மற்றும் தைராய்டு ரத்த பரிசோதனைகள் போன்ற சோதனைகள் மூலம் அயோடின் குறைபாட்டை மருத்துவர்கள் கண்டறிகின்றனர். புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி பரிசோதனை செய்வதன்மூலம், முன்கூட்டியே தைராய்டு பிரச்சனையை கண்டறிந்து தடுக்க முடிகிறது.
அயோடின் குறைபாடு சிகிச்சை
அயோடின் குறைபாடு தொடர்பான அறிகுறி இருந்தால் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும். அயோடின் குறைபாடு கண்டறியப்பட்டால், மருத்துவர் அதற்கான சிகிச்சையை அளிப்பார். பொதுவாக அயோடின் நிறைந்த உணவுகளை சேர்ப்பது போன்ற உணவுமுறை மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளையும் உட்கொள்ளவேண்டும். ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு, நோயின் தீவிரத்தின் அடிப்படையில் தைராய்டு ஹார்மோன் மருந்து, மாத்திரைகளை பரிந்து செய்வார்கள்.
அயோடின் குறைபாட்டை தடுக்கும் உணவுகள்
உணவுப் பொருட்களில் கலந்திருக்கும் அயோடின் சத்து அதிகரித்தால் எந்தவித பாதிப்பும் வராது. எனவே, தைராய்டு நோயாளிகள் நோய்க்கான சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வதோடு முறையான உணவுப் பழக்கத்தையும் பின்பற்ற வேண்டியதும் அவசியமாகிறது. கடற்பாசி, அயோடின் கலந்த உப்பு, காட் மீன், பாலாடைக்கட்டி, கிரேக்க தயிர், முட்டை, இறால், சூரை மீன் மற்றும் உலர்ந்த கொடி முந்திரி பழங்கள் போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.