சிறப்பு செய்திகள்
இன்று உலக இதய தினம்.. கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம்
சிறப்பு செய்திகள்

இன்று உலக இதய தினம்.. கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம்

தினத்தந்தி
|
29 Sept 2024 6:09 PM IST

தனிநபர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்த ஆண்டின் கருப்பொருள் வலியுறுத்துகிறது.

இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும்.

உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமான இதயம் தொடர்பான பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதற்கு தனிநபர்கள், அரசாங்கங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த நாளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான உலக இதய தினம் இன்று (29.9.2024) அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், 'செயலுக்கு இதயத்தைப் பயன்படுத்து' என்பதாகும்.

அதாவது, 2024 முதல் 2026 வரை, "செயலுக்கு இதயத்தைப் பயன்படுத்து" என்ற கருப்பொருளில் விழிப்புணர்வு பிரசாரம் நடத்துவதில் கவனம் செலுத்தப்படும். இதய ஆரோக்கியத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படி அரசுகளை ஊக்குவிப்பதுடன், தனிநபர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. அர்த்தமுள்ள செயலுக்கான உலகளாவிய தளத்தை உருவாக்குவதை இந்த கருப்பொருள் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக இதய கூட்டமைப்பு (WHF) என்ற நிறுவனம் 1999-ம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்புடன் இணைந்து உலக இதய தினத்தை நிறுவியது. முதலில் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 2012-ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் இதய ரத்தக் குழாய் நோய்களால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் தொற்று அல்லாத நோய்களின் சதவிகிதத்தை 25% ஆக 2025 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், 2012 முதல் செப்டம்பர் 29-ம் தேதியை உலக இதய தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்று உலகெங்கிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன.

மேலும் செய்திகள்