உலக இதய தினம் 2023
|ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதய நோய்களைப் பற்றியும் அதை தடுக்கும் முறைகளைப் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதய ரத்தக்குழாய் நோய்களின் அறிகுறிகளையும், வகைகளையும் அறிந்து இதயத்தை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையாக உலக இதய தினம் இருப்பதால் மக்களின் உயிர் காக்கும் இத்தினம், முக்கியத்துவம் பெறுகிறது.
உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்று இதயம். இதய நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒன்று. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 1.7 கோடி மக்கள், அதாவது மொத்த உலக மக்கள் தொகையில் 31%, இருதய ரத்தக் குழாய் நோய்களால் இறக்கிறார்கள் என்று கூறுகிறது புள்ளி விவரம். மாரடைப்பு, ஸ்ட்ரோக் மற்றும் இதய ரத்தக்குழாய் நோய்களே இந்த இறப்புகளுக்கு காரணமாக இருப்பதால் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் மக்களுக்கு அளிக்கும் வகையில் இந்நாளை கொண்டாடி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலக இதய தினத்திற்காக ஒரு தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு அதைப்பற்றிய கட்டுரைகளும் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த வருட தலைப்பு "இதயத்தை உபயோகித்து, இதயத்தை அறிந்து கொள்" என்பதே ஆகும். அதாவது ஒவ்வொருவரும் தங்களின் இதயத்தை பற்றி தெரிந்து கொண்டு அதை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதே இத்தலைப்பின் நோக்கம். உலகில் மக்களுக்கு கல்வி அறிவு கூடி இருந்தாலும் கூட இதய நோய்கள் பற்றிய அறிவும் தகவல்களும் குறைவாகவே இருக்கிறது. மேலும் இந் நோய்களை தடுப்பதற்கான திட்டங்களும் குறைவாகவோ அல்லது முழுமையற்றதாகவோ இருப்பதாகவே கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தின் செயல்பாடு பற்றியும் இதய ரத்த ஓட்டம், இதய ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் அறிந்து தங்கள் வாழ்க்கை முறையை சரியான படி மாற்றிக் கொண்டு இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே இந்த வருட உலக இதய தினத்திற்கான தலைப்பு வலியுறுத்துகிறது.
வேர்ல்ட் ஹெல்த் ஃபெடரேஷன் என்ற நிறுவனம் 1999 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார மையத்தின்(WHO) கூட்டமைப்புடன் உலக இதய தினத்தை கொண்டாடி வருகிறது. முதலில் செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக இதய தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் இதய ரத்தக் குழாய் நோய்களால் உயிர் இழப்பு அதிகமாக ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும் தொற்று அல்லாத நோய்களின் சதவிகிதத்தை 25% ஆக 2025 ஆம் ஆண்டிற்குள் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், 2012 முதல் செப்டம்பர் 29ஆம் தேதியை உலக இதய தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 90 நாடுகளுக்கும் மேல் இதில் பங்கேற்று உலகெங்கிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான இதயம்
இந்த வருட தலைப்பிற்கு ஏற்ப நாம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்காக செய்ய வேண்டிய விஷயங்கள் கீழ் வருமாறு:
உடல் எடையை சரியாக பராமரிப்பது. அதாவது பிஎம்ஐ (பாடி மாஸ் இன்டெக்ஸ்)என்பதை 18.5 முதல் 25க்குள் வைத்துக் கொள்வது
உடலில் அதிக ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பின் அளவு இல்லாமல் பார்த்துக் கொள்வது
உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கக்கூடிய உப்பை, உணவில் குறைத்துக் கொள்வது
இருதய நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொண்டு, அறிகுறிகள் இருப்பின் உடனடியாக சிகிச்சை எடுப்பது
உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறையை கைவிடுவது, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது
அவ்வப்போதைய உடல் நல பரிசோதனைகளை செய்து கொள்வது
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது, அதிக கொழுப்பு உள்ள குப்பை உணவுகளை தவிர்ப்பது
மன உளைச்சலை கட்டுக்குள் வைத்துக்கொண்டு தரமான தூக்கத்தை பெற விழைவது.
மேற்கூறியவைகளே நாம் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஆகும்.