< Back
சிறப்பு செய்திகள்
tamil news World Environment Day in tamil
சிறப்பு செய்திகள்

இன்னும் அக்கறை வேண்டும்.. இன்று உலக சுற்றுச்சூழல் தினம்..!

தினத்தந்தி
|
5 Jun 2024 6:17 AM GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வளங்களின் சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை மனிதர்கள் பாதுகாப்பது மிக முக்கியமாகும்.

சுற்றுச்சூழலை பேணி பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட தவறியதன் விளைவுகளை மனிதர்கள் தற்போது அனுபவிக்க தொடங்கி விட்டனர். மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதை பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது. எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் மழை வெள்ளம், சூறாவளி என இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1972ம்-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச்சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வுகளுக்கு பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தின் வாயிலாக மீதமுள்ள காடுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அக்கறை என்பது சில நிபுணர்கள் மட்டும் ஆலோசனை கூட்டங்களை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் அல்ல. அனைவரது மனதிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும்.

சுற்றுச் சூழலியலாளர்களின் பணிகள் காரணமாக சுற்றுச்சூழலைப்பற்றி மக்கள் மத்தியில் ஓரளவுக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், பெருமளவு முன்னேற்றம் ஏற்படவில்லை. இன்னும் அக்கறை செலுத்த வேண்டும். சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளத்திலும் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டியது அவசியம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச்சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "நில மறுசீரமைப்பு, பாலைவனமாக்கலை தடுத்து நிறுத்துதல் மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை உருவாக்குதல்" ஆகும். ஆரோக்கியமான நிலத்தை மீண்டும் கொண்டு வருதல், பாலைவன பகுதிகள் அதிகரிக்காமல் தடுப்பது மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை கையாள்வது ஆகியவை குறித்த இந்த கருப்பொருளில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மரங்கள், ஆரோக்கியமான மண் மற்றும் சுத்தமான நீர் ஆகியவை ஆரோக்கியமான கிரகத்திற்கு இன்றியமையாதவை. இயற்கையும், சுற்றுச்சூழலும் தன்னைத் தானே கட்டமைத்துக் கொண்டு, தனது பருவகால நிலைகளை சரியாக கணித்துக்கொண்டு, மனித குலத்திற்கு மகத்தான நன்மைகளை செய்து வருகிறது. அந்த இயற்கைக்கும் அதன் வளங்களுக்கும் தீமை ஏற்படாத வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சுற்றுச்சூழலை காக்க உறுதி ஏற்போம்.

மேலும் செய்திகள்