< Back
சிறப்பு செய்திகள்
World Blood Donor Day 2024
சிறப்பு செய்திகள்

உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்..! இன்று உலக ரத்த தான தினம்

தினத்தந்தி
|
14 Jun 2024 4:25 PM IST

ஒவ்வொரு ரத்த தானமும் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பு, ரத்த தானத்தால் உயிர்களை காப்பாற்றிய ரத்த கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

உயிர் காக்கும் மருத்துவத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, பல்வேறு நன்கொடையாளர்கள் மூலம் ரத்தம் தானமாக பெறப்பட்டு பாதுகாக்கப்பட்டு தேவைப்படும்போது நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

இவ்வாறு, ரத்த தானம் செய்பவர்களின் முக்கிய பங்களிப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உயிர்களைக் காக்க பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தக் கூறுகளின் அவசியம் குறித்து உலகிற்கு தெரியப்படுத்தவும், உலகமெங்கும் ஜூன் 14ம் தேதி உலக ரத்த தான தினமாக அல்லது ரத்த கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. ரத்த தானம் செய்வதன் அவசியம், அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்கள் குறித்து இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

ஜூன் 14ஆம் தேதி என்பது ஆஸ்திரியாவின் உயிரியல் விஞ்ஞானியும் மருத்துவருமான கார்ல் லேண்ட்ஸ்டீனரின் பிறந்தநாள் ஆகும். இவர்தான் ரத்தத்தில் ஏ, பி, ஓ ஆகிய பிரிவுகள் உள்ளதை 1901-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதற்கு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரை கவுரவிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

உயிரியல் விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டீனர்

உயிரியல் விஞ்ஞானி கார்ல் லேண்ட்ஸ்டீனர்

அவ்வகையில், 20-வது ரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ரத்த தானமும் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசு என்று கூறி உள்ள உலக சுகாதார அமைப்பு, ரத்த தானத்தால் உயிர்களை காப்பாற்றிய ரத்த கொடையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே வழக்கமான ரத்த தானம் செய்யும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவேண்டும், ரத்த தானம் செய்பவர்களின் பன்முகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

19 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் ரத்த தானம் செய்யலாம். ரத்தம் கொடுப்பவர்கள் உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் 4 மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராமுக்கு மேல் இருக்க வேண்டும்.

ரத்த தானம் செய்வதால் உடல் பலவீனமாகும் என பரவலான கருத்து உள்ளது. இது தவறான புரிதல். ரத்தம் கொடுப்பதால் எந்தத் தொந்தரவும் வருவதில்லை. 300 மில்லி லிட்டரில் இருந்து 450 மில்லி லிட்டர் வரை ரத்தக் கொடை அளிக்கலாம். ரத்த தானம் செய்த பின் பழரசம் அருந்தலாம். சில மணி நேரங்களில் எடுத்த ரத்தத்தின் அளவுக்கு ஏற்றபடி புதிய ரத்தம் சுரந்துவிடும். 20, 25 நாட்களுக்குள் மற்ற சிவப்பணுக்கள் போன்றவை உண்டாகிவிடும். பழைய ரத்தம் உடலில் சுழல்வதைவிட ஒவ்வொரு மூன்று மாதமும் புதிய ரத்தம் சுரப்பது நல்லதல்லவா? ரத்த தானம் செய்த பின் தொடர்ந்து வேலை செய்யலாம், விளையாடலாம், குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம்.

ரத்த தானம் செய்த பின் சிலருக்கு பயத்தால் தலைசுற்றல் ஏற்பட்டால் படுக்க வைத்து கால்களை சற்றுத் தூக்கியபடி வைத்தால் சரியாகிவிடும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தம் உறையாத நோய் உள்ளவர்கள், அதிக ஆஸ்துமா கோளாறு உள்ளவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள், எய்ட்ஸ் நோய் உள்ளவர்கள் இவர்களிடமிருந்து எப்பொழுதுமே ரத்தம் பெறக்கூடாது. மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய் வந்தவர்கள் நன்கு குணமடைந்து விட்டார்கள் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, 1 வருடம் கழித்து ரத்த தானம் தரலாம் என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. ஏனென்றால் இவை குணப்படுத்தக் கூடிய நோய்கள். ஆனால் பொதுவாக அந்த நோய் வந்தவர்கள் ரத்த தானம் செய்ய வருவதில்லை. மது, போதை மருந்து உட்கொண்டவர்களிடம் 72 மணி நேரத்திற்கு ரத்தம் எடுக்கக்கூடாது

ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற உயிரை காப்பதுடன், ரத்தம் கொடுப்பவருக்கும் நன்மை அளிக்கிறது. குறிப்பாக ரத்த தானம் செய்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்!

மேலும் செய்திகள்