< Back
சிறப்பு செய்திகள்
தொடரும் அரிசி விலை உயர்வால் பாதிப்பா? பொதுமக்கள் கருத்து
ஈரோடு
சிறப்பு செய்திகள்

தொடரும் அரிசி விலை உயர்வால் பாதிப்பா? பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
14 Aug 2023 6:02 AM IST

தொடரும் அரிசி விலை உயர்வால் பாதிப்பா? என பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

உப்பு முதல் கற்பூரம் வரை விலைவாசி உயர்வு அனைத்து மக்களையும் கடுமையாக பாதித்து வருகிறது. மற்ற பொருட்களை விட உணவுப்பொருட்கள் விலை உயரும் போது அது ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினரை கதி கலங்க வைத்து விடுகிறது.

அரிசி

சமைக்க கொஞ்சம் அரிசியும், தக்காளி, உப்பு, வெங்காயம், மிளகாய் என சிறிய அளவில் காய், மளிகை இருந்தால் அன்றைய உணவு பிரச்சினையை சமாளித்து விடும் குடும்பங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு மாதம் குடும்ப செலவுக்கு பல லட்சங்களை செலவு செய்பவர்கள் மத்தியில் ரூ.5 ஆயிரம் கூட செலவிட முடியாமல் கட்டாய சிக்கனத்தில் வாழும் குடும்பங்கள் உள்ளன.

அடிப்படை தேவைகள் பட்டியலில் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை முதலிடம் பிடிக்கின்றன. இதில் உணவே முதல் இடத்தில் இருக்கிறது. எனவேதான் உணவுப்பொருட்கள் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிப்பதாக அமைகிறது.

விலை உயர்வு

சமீபகாலமாக கடைகளில் விற்கப்படும் அரிசி விலை உயர்ந்து வருகிறது. இது ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை பாதிக்கிறது. பல ஆண்டுகளாக அனைத்து மளிகை பொருட்களும் விலை உயர்ந்தாலும், அரிசி விலை உயர்வு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே இருந்தது. ஆனால், தற்போது அரிசியும் விலைவாசி உயர்வு பட்டியலில் இறக்கை கட்ட தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துகள் வருமாறு:-

பாதிப்பு

ஆனைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி எஸ்.வனிதா:-

நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் 2 பேரின் கூலியையும் சேர்த்தால் மாதம் ரூ.10 ஆயிரம் வருகிறது. இதில் பாதிக்கு மேல் மளிகை பொருட்களுக்காக செலவாகிறது. எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 பேரும் படித்து வருகிறார்கள். எங்களை போன்ற ஏழைகளுக்கு அரிசி சாப்பாடுதான் நல்ல உணவு. ரேஷனில் வாங்கும் அரிசி மாதம் தோறும் ஒவ்வொரு சுவை, ஒவ்வொரு நிறத்தில் உள்ளது. இதனால் சமைத்தால் வரும் ஒரு வகை வாசனை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. எனவே நல்ல அரிசி வாங்கிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டது. இப்போது அரிசியும் விலை உயர்ந்து வருவது எங்களைப்போன்றவர்களை கடுமையாக பாதிக்கிறது. தினமும் கடுமையாக உழைத்தாலும் சேமிப்பு என்பதே இல்லாத நிலை உள்ளது. எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

தேவை அதிகம்

அரிசி மொத்த விற்பனையாளர் கோ.பாலகிருஷ்ணன்:-

தமிழகத்தை பொறுத்தவரை அரிசி விலை கர்நாடகாவில் இருந்து வரும் நெல்லின் விலையை வைத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. சமீபகாலமாக கர்நாடக அரிசி வரத்து குறைந்து இருக்கிறது. நமது பாரம்பரிய அரிசி வகைகளை இங்கே அதிகம் யாரும் சாப்பிடுவது இல்லை. எனவே அந்த அரிசி விலையில் பெரிய மாற்றம் இல்லை. சன்ன ரக அரிசியை பெரும்பாலானவர்கள் சாப்பிட்டு பழகி விட்டதால் அதன் தேவை அதிகமாக உள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தற்போது அரிசி விலை சற்று உயர்ந்து இருக்கிறது. உற்பத்தியாளர்கள் உயர்த்திஇருக்கும் விலையையொட்டி, மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள் உயர்த்தும் விலை என பொதுமக்களுக்கு சற்று அதிக விலையில்தான் அரிசி கிடைக்கிறது. அதே நேரம் மற்ற பொருட்களின் விலை வாசி உயர்வை ஒப்பிடும் போது இது பெரிய விலை உயர்வு இல்லை. அதுவும் 26 கிலோ சிப்பம் ரூ.100 வரை உயர்த்து உள்ளது. அதுவே சில்லரை விலையில் 5 கிலோ, 10 கிலோ பைகள் வாங்குபவர்களுக்கு ரூ.6 முதல் ரூ.10 வரை ஒரு கிலோ அரிசிக்கு உயர்ந்து இருக்கிறது. இது சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பால் ஏற்பட்ட விலை உயர்வாகும்.

கிலோவுக்கு ரூ.2

ஈரோடு மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் பி.முருகேசன்:-

தற்போதைய அரிசி விலை உயர்வுக்கு நெல் வரத்து குறைந்தது ஒரு முக்கிய காரணமாகும். உற்பத்தி குறைந்து இருப்பதும் தேவை அதிகமாகி இருப்பதும் விலையை சற்று உயர்த்தி இருக்கிறது. உலக அளவில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாகவும் அரிசி விலை உயர்ந்து இருக்கிறது.

அரிசி விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக மின்சார கட்டண உயர்வு செய்யப்படவில்லை. அதை எல்லாம் சேர்ந்து ஒரே நேரத்தில் உயர்த்தியதால் ஆலைகளுக்கு மின் கட்டணம் உயர்ந்து விட்டது. பொதுவாக பார்த்தால் ஒரு கிலோ அரிசிக்கு ரூ.2 வரை மட்டுமே உயர்ந்து உள்ளது.

மின்சார கட்டண உயர்வு

டி.எஸ்.பி.செல்வம் என்கிற பி.கந்தசாமி:

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரிசி விலை உயர்வு செய்யப்படவில்லை. கடந்த முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது, அரிசி ஆலைகள் உணவு உற்பத்தி ஆலைகள் என்ற வகையில் 'பீக் அவர்ஸ்' எனப்படும் உச்ச நேரத்தில் கூடுதல் மின்கட்டணம் இல்லை என்று அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்து அதன்படி செயல்படுத்தினார். அந்த நடைமுறை அமலில் இருந்த நிலையில் தற்போதைய தி.மு.க. அரசு அரிசி ஆலைகளுக்கும் 'பீக் அவர்ஸ்' கூடுதல் கட்டணம் அமல்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி, மின்சார கட்டணத்தை குறைக்கும் வகையில் ஆலை உரிமையாளர்கள் அமைத்து இருக்கும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி திட்டத்துக்கு 'நெட்வொர்க்' கட்டணம் என்று கூடுதல் தொகை வசூலித்து வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் விலை உயர்வுக்கு அடிப்படையாக உள்ளது.

குறிப்பாக சமீப காலமாக உரம். இடுபொருட்கள் விலை மிகவும் உயர்ந்து விட்டது. விவசாயத்துக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை. கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நெல் நடவு பரப்பளவு குறைந்து விட்டது. ஈரோடு மாவட்டத்தில் கூட கீழ் பவானி பாசன பகுதியில் 50 சதவீதம் அளவுக்கு வயல்கள் மாற்று விவசாயம் அல்லது தரிசாக மாறிவிட்டது. எனவே வெளி மாநில நெல்லை நம்பிதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட சிரமமான சூழலிலும் குறைந்த அளவுதான் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அரிசி ஆலைகளுக்கு பீக் அவர்ஸ் மின்சார கூடுதல் கட்டணம், சூரிய சக்தி மின்சார நெட்வொர்க் கட்டணம் ஆகிவற்றை குறை ரத்து செய்யவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்