< Back
சிறப்பு செய்திகள்
உங்கள் உடம்புக்கு என்ன...?
சிறப்பு செய்திகள்

உங்கள் உடம்புக்கு என்ன...?

தினத்தந்தி
|
19 July 2023 4:57 PM IST

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு சென்னையைச் சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி. வெங்கடேஷ், எம்.டி., டி.என்.பி, (கார்டியோ) பதில் அளிக்கிறார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: உங்கள் உடம்புக்கு என்ன?, தினத்தந்தி, 86, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600007. மின்னஞ்சல்: doctor@dt.co.in, வாட்ஸ் அப்: 7824044499

கேள்வி: இதய நோய் உள்ளவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா? (லதா கண்ணன், சென்னை)


பதில்: முதுகு வலிக்கு இதய நோய் முக்கிய காரணம் அல்ல. உடலின் பெரிய ரத்தக்குழாயில் விரிசல் ஏற்பட்டால் அதீத முதுகு வலி ஏற்படலாம். ஆனால், இது மிக முதிர்ந்த வயதில் ஏற்படும் ஒரு அரிய வியாதியாகும். இதய மாரடைப்பினால் வரும் வலி முதலில் நெஞ்சு பகுதியில் ஆரம்பித்து பின்புதான் முதுகு பகுதிக்கு பரவும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வெறும் முதுகில் மட்டும் வலி ஏற்படுவது இதய வியாதிக்கான அறிகுறியில்லை. அது முதுகெலும்பு மற்றும் தசை நார்களில் ஏற்படும் பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்பு உண்டு. எனவே, தக்க எலும்பியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது.

கேள்வி: டாக்டர், தினமும் 45 நிமிடம் வாக்கிங் போய்விட்டு, யோகா பயிற்சியில் ஈடுபடலாமா? (சுந்தர் ராமசாமி, தர்மபுரி)



பதில்: வாக்கிங் போய்விட்டு, சிறிது (15 நிமிடம்) இடைவெளி விட்டு யோகா பயிற்சியில் ஈடுபடலாம். வாக்கிங் மற்றும் யோகா இரண்டுமே இதயத்திற்கு நலம் பயக்கும் பயிற்சியாகும்.

கேள்வி: இதயத்தில் 'பேஸ்மேக்கர்' கருவி எதற்காக பொருத்தப்படுகிறது? விளக்கமாக கூறுங்கள்?, 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தியபின் நோயாளிகள் எப்படி இருக்க வேண்டும்? (கே. ராஜகோபால், கோவை, வெங்கடேஷ், மும்பை)



பதில்: பொதுவாக மனித இதயம் தன்னிச்சையாக உற்பத்தியாகும் மின்சாரத்தில் இயங்குகிறது. இதயத்தின் இந்த மின்சார உற்பத்தியிலோ, அல்லது அதை எடுத்துச் செல்லும் தசை நார்களிலோ கோளாறு ஏற்பட்டால் இதயத்துடிப்பு மிகவும் குறைந்து உயிர் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதை தடுப்பதற்காக பொருத்தப்படும் எலக்ட்ரானிக் கருவிதான் 'பேஸ்மேக்கர்'. ஒரு தீப்பெட்டி அளவில் உள்ள இக்கருவி இடது தோள்பட்டைக்கு கீழ் உள்ள மார்பகப்பகுதியில் பொருத்தப்படுகிறது. எப்பொழுதெல்லாம் இதயத்துடிப்பு குறைகிறதோ அப்பொழுதெல்லாம் இக்கருவி மின்மோட்டாரைப்போல் இயங்கி இதயத்துடிப்பை செம்மைப்படுத்துகிறது. இதுபோன்ற இதய மின்சார குறைபாடு, குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் வரலாம். இக்குறைபாடு ஏற்படுத்தக்கூடிய காரணங்களில் சில - மரபணு திரிதல், இயற்கையாக ஏற்படும் தேய்மானம், உப்புச்சத்து குறைபாடு, இதய கிருமி தாக்கல் போன்றவை ஆகும்.

'பேஸ்மேக்கர்' கருவி பொருத்திய பின்பு, நோயாளிகள் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரை மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். 'பேஸ்மேக்கர்' பொருத்திக்கொண்ட நோயாளிகள் மூன்று நாட்களுக்கு பின்பே குளிக்க அனுமதிக்கப்படுவர். இந்தக்கருவி பொருத்தப்பட்ட பகுதியை, மிகவும் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இடது கையை தலைக்கு மேல் உயர்த்துவதை 10 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு பின்பு சராசரியாக எல்லா வேலைகளையும் செய்ய அனுமதிக்கப்படுவர். ஒரு மாதம் வரை கருவி பொருத்தப்பட்ட பகுதியில் லேசான வலி இருக்கும். 'பேஸ்மேக்கர்' கருவியை பொருத்திக்கொண்டு நோயாளிகள் அதிக வோல்ட்டேஜ் உள்ள மின் இயக்கி (டிரான்ஸ்பார்மர்) அருகில் செல்லக்கூடாது. அதிக காந்த அழுத்தம் உள்ள இடங்களுக்கு அருகில் செல்லக்கூடாது. உதாரணமாக, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மேற்கொள்ளும் போது, உங்களுக்கு 'பேஸ்மேக்கர்' பொருத்தப்பட்டுள்ள விவரத்தை கண்டிப்பாக மருத்துவரிடம் தெரியப்படுத்தவும். விமான நிலையம் மற்றும் ஷாப்பிங் மால்களில் உள்ள செக்யூரிட்டி ஸ்கேனிங் பொழுது, உங்களுக்கு 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளதை தெரிவிக்கவும். மேலும், இடது பக்க சட்டை பாக்கெட்டில் செல்போன் வைப்பதை தவிர்க்கவும். 'பேஸ்மேக்கர்' குறித்த அட்டையை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை மருத்துவரிடம் சென்று 'பேஸ்மேக்கர்' கருவியின் பயன்பாடு குறித்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இந்த 'பேஸ்மேக்கர்' கருவியின் பேட்டரி சராசரியாக 10 வருடங்களுக்கு இயங்கும். அதன் பின்னர், அந்த பேட்டரி ஜெனரேட்டரை மட்டும் மாற்றினால் போதுமானதாக இருக்கும்.

கேள்வி: என்னுடைய இதயம் 25 சதவீதம் மட்டுமே வேலை செய்கிறது என்று எக்கோ ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏதேனும் ஆபத்து உண்டா? (அருள்மணி, தஞ்சாவூர்)

பதில்: இதய செயல்பாடு 25 சதவீதம் இருக்கும்பொழுது உயிர் ஆபத்து சற்று அதிகம் உண்டு. ஆனால் இதைக்கண்டு பயம் கொள்ளத்தேவையில்லை. இதற்கு இப்பொழுது நவீன மாத்திரைகளும், சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. ஆகவே, உங்கள் இதய நிபுணரை அணுகி தக்க வைத்தியம் செய்து கொண்டால் பயன் பெறுவீர்கள். நீங்கள் எந்தவொரு உடல் சார்ந்த கடினமான வேலைகளையும் தவிர்ப்பது நல்லது. நீராகாரம் அதிகமாக உட்கொள்ளவேண்டாம். நல்ல தூக்கமும், அமைதியான வாழ்க்கை முறையையும் பின்பற்றினால் நலம் அடைவீர்கள்.

கேள்வி: இரண்டு முறை ஆஞ்சியோ செய்தும், அடிக்கடி படபடப்பு வரக் காரணம் என்ன? (மு. கந்தசாமி, விழுப்புரம்)


பதில்: படபடப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் பல உயிர் ஆபத்து அற்றவை. சில படபடப்புகளுக்கு, இதய வியாதி ஒரு காரணமாக அமைகிறது. அதை கண்டறிய ஈ.சி.ஜி, எக்கோ, ஹோல்டர் பரிசோதனை செய்துபார்ப்பது நல்லது. பொதுவாக, படபடப்புக்கு மன அழுத்தம், ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் முக்கியமான காரணங்களாக இருக்கலாம். இதனை சரிசெய்தால், உங்கள் படபடப்பு நீங்க வழி உண்டு.

மேலும் செய்திகள்