< Back
சிறப்பு செய்திகள்
மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்
சிறப்பு செய்திகள்

மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தினத்தந்தி
|
8 Aug 2023 1:50 PM IST

என்.எல்.சி.க்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யிடம் இது தொடர்பாக சில கேள்விகள் முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

* என்.எல்.சி.யை வெளியேற்ற வேண்டும் என்று தொடர்ந்து நீங்கள் சொல்வதன் காரணம் என்ன?

என்.எல்.சியைப் பொறுத்தவரை, 60 ஆண்டுகளுக்கு முன் மின்சாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அந்த நிறுவனம் தமிழ்நாட்டுக்கு தேவைப்பட்டது. ஆனால், இப்போது தமிழ்நாடு மின்மிகை மாநிலமாகி விட்ட நிலையில், என்.எல்.சி. தேவையில்லை.

நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.

என்.எல்.சி.க்கு குத்தகை உரிமம் வழங்கப்பட்ட நிலங்கள், முப்போகம் விளையும் பூமி. ஆண்டுக்கு 26 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய முடியும். இது தமிழ்நாட்டின் சராசரி ஆண்டு நெல் உற்பத்தியான 1.4 கோடி மெட்ரிக் டன்னில் 4 சதவீதம் ஆகும். இந்த அளவு விளைச்சல் தரும் நிலங்களை என்.எல்.சியிடம் நாம் இழந்தால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு, அரிசிக்காக பிற மாநிலங்களிடமும், பிற நாடுகளிடமும் நாம் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படும்.

* வெளியேற்றினால் மின்தேவையை பூர்த்தி செய்ய மாற்று வழி என்ன? இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் நிலை?

என்.எல்.சி வெளியேற்றப்பட்டால் தமிழ்நாடு இருண்டு விடாது. தமிழ்நாட்டின் இன்றைய ஒட்டுமொத்த மின்தேவை 18,000 மெகாவாட் மட்டுமே. ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன் 35,000 மெகாவாட் ஆகும். என்.எல்.சியின் அனல் மின் நிலையங்கள் மூலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு சுமார் 1,500 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படும்; ஆனால், அதில் சராசரியாக 900 மெகாவாட் அளவுக்கு தான் கிடைக்கும். ஆனால், கடந்த சில வாரங்களாக என்.எல்.சி.யிடமிருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தின் அளவு 685.80 மெகாவாட்டாக குறைக்கப்பட்டு விட்டது. என்.எல்.சி. வழங்கும் மின்சாரம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டாலும் கூட, அதனால் தமிழ்நாட்டிற்கு சிறு துளி அளவுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. என்.எல்.சி.யில் பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பிற மாநிலத்தவர். தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

என்.எல்.சி. மூடப்பட்டால் அதன் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வழங்க ஆயிரமாயிரம் வழிகள் உள்ளன.

* மின்தேவை பூர்த்தி ஆகவில்லை எனில் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி எப்படி சாத்தியம்?

இந்தியாவில் மின் உற்பத்தி இப்போது மிகவும் எளிதானதாகவும், செலவு குறைந்ததாகவும் மாறியிருக்கிறது.

என்.எல்.சி. இல்லாவிட்டால் தமிழகம் இருண்டு விடும் ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகள்.

* நில எடுப்பு விவகாரத்தில் பா.ம.க.வின் அடுத்தக்கட்ட நகர்வு?

மின்சாரம் பல வழிகளில் தயாரிக்க முடியும். ஆனால், உணவு தயாரிக்க ஒரே வழி தான் உள்ளது. நிலங்களில் விவசாயம் செய்து உணவு தானியங்களை உற்பத்தி செய்தால் தான் மக்கள் பசியின்றி வாழ முடியும். எனவே, நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிக்கும் கொள்கை மனிதகுலத்திற்கு எதிரானது. அது கைவிடப்பட வேண்டும்.

என்.எல்.சிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. அதைத் தடுக்க எத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டுமோ, அத்தகைய போராட்டங்களை நடத்துவோம். மண்ணையும், மக்களையும் காக்க எந்த எல்லைக்கும் செல்வோம். எதற்கும் தயங்க மாட்டோம்.

மேலும் செய்திகள்