< Back
சிறப்பு செய்திகள்
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்
சிறப்பு செய்திகள்

ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்

தினத்தந்தி
|
15 Jun 2024 2:27 AM GMT

ரெயிலில் முன்பதிவு செய்த நபர், அந்த தேதியில் பயணிக்க முடியவில்லை என்றால், அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அந்த தேதியில் பயணிக்கலாம்.

குடும்பத்தினருடன் நீண்ட தூர ஊர்களுக்கு செல்ல ரெயில் பயணம் மிகவும் வசதியானதாக இருக்கிறது. இதனால் ரெயில் பயணத்தை பலரும் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே ரெயிலில் பயணிகளின் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது.ரெயிலில் முன்பதிவு செய்தால் படுத்துக்கொண்டே பயணிக்க முடியும். அதற்கு முன்பதிவு செய்வதும் எளிது.

பயணத்திட்டத்தில் மாற்றம்

ஆனால் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்படும்போது பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் டிக்கெட்டை ரத்து செய்து விடுகின்றனர். ஆனால் அந்த முன்பதிவு டிக்கெட்டில் வேறு நபர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது பலருக்கு தெரிவது இல்லை. ஆம், முன்பதிவு டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கு எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன? என்பது குறித்து பெரும்பாலானோருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதனால், பலர் டிக்கெட்டை ரத்து செய்து விடுகின்றனர். முன்பதிவு செய்த டிக்கெட்டை வேறு நபரின் பெயருக்கு மாற்றும் நடைமுறை தெரியாததால் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யும் நிலை தொடர்கிறது. அதை தவிர்த்து முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் தனது ரத்த சொந்த உறவினர் பெயருக்கு மாற்றி பயணிக்கும் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

ரத்த சொந்தங்கள்

ரெயிலில் முன்பதிவு செய்த நபர், அந்த தேதியில் பயணிக்க முடியவில்லை என்றால், அவரின் ரத்த சொந்த உறவினரின் பெயரை மாற்றி அந்த தேதியில் பயணிக்கலாம். அதாவது முன்பதிவு செய்த நபரின் டிக்கெட்டில் பெயரை மாற்றி தாய், தந்தை, தங்கை, தம்பி, அண்ணன், அக்காள், மனைவி, குழந்தை போன்ற ரத்த சொந்த உறவினரில் யாராவது ஒருவர் செல்லலாம்.அதற்கு பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, டிக்கெட் முன்பதிவு செய்த நபர், அந்த டிக்கெட்டுடன் ஏன் பயணம் செய்யவில்லை என்ற காரணத்தை குறிப்பிட்டு ஆதார் கார்டு நகலுடன் கடிதம் கொடுக்க வேண்டும்.

அனுமதி கடிதம்

அந்த டிக்கெட்டில் பயணிப்பவர் தனக்கு எந்த முறையில் சொந்தம் என குறிப்பிட்டு அவர் பயணிக்க அனுமதி அளிப்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டு டிக்கெட் முன்பதிவு கண்காணிப்பாளரிடம் கொடுக்க வேண்டும். அவர், பெயரை மாற்றிக்கொடுப்பார். இதன் மூலம் பயணிக்கலாம்.இதேபோல், பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதில் யாரேனும் தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் 48 மணி நேரத்துக்கு முன் தொடர்புகொண்டு, தங்களது பயண டிக்கெட்டை சக மாணவருக்கு மாற்றித்தரலாம். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி நிறுவன முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் அளிக்க வேண்டும். திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குழுவாக செல்ல நினைத்தவர்களில் யாரேனும் சிலர், தங்களது பயணத்தை ரத்து செய்ய நேரிட்டால், அந்த பயணக் குழுவின் தலைவர் 48 மணி நேரத்துக்கு முன்னதாக கடிதம் அளித்து, டிக்கெட்டை வேறு நபரின் பெயரில் மாற்றிக்கொள்ள முடியும்.

கட்டணம் இல்லை

இவ்வாறு டிக்கெட்டில் பெயரை மாற்றம் செய்ய எந்த கட்டணமும் இல்லை. ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.முக்கிய ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் மட்டுமே பெயர் மாற்ற கோரிக்கை ஏற்கப்படும். பெயர் மாற்ற கடிதத்துடன் உறவினர் என்பதற்கான அடையாள அட்டையின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்