< Back
சிறப்பு செய்திகள்
இந்தியாவில் முதன்மை மாநிலம்: தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அசத்தும் தமிழகம் - மேம்பட்ட புதிய திட்டங்களை புகுத்தவும் இலக்கு
சிறப்பு செய்திகள்

இந்தியாவில் முதன்மை மாநிலம்: தோட்டக்கலை பயிர்கள் உற்பத்தியில் அசத்தும் தமிழகம் - மேம்பட்ட புதிய திட்டங்களை புகுத்தவும் இலக்கு

தினத்தந்தி
|
4 May 2023 1:55 PM IST

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

இந்த திருக்குறளின் அர்த்தம், பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத்தொழிலே சிறந்தது என்பதாகும். இவ்வளவு அழகாக விவசாயத்தின் பெருமையை சொல்ல இந்த திருக்குறளே சான்று.

இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியை பெருக்குவதும், நஞ்சற்ற உணவுகளை வழங்குவதும் விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. வேளாண்மை தொழில், தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் வாழும் 70 சதவீத மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

வேளாண்மையை பொறுத்த வரையில், தோட்டக்கலைத்துறையில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது. மேலும், தோட்டக்கலை சாகுபடியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தேசிய அளவில் தோட்டக்கலை சாகுபடி உற்பத்தியில் 6.09 சதவீதத்தையும், பரப்பளவில் 5.47 சதவீதத்தையும் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதற்கு ஏற்ற வகையில் வேளாண் காலநிலையையும், புவியியல் நிலையையும் கொண்ட மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருகிறது.

''தோட்டக்கலை பயிர்களை மாற்று பயிராக சாகுபடி செய்வதின் மூலம் சிறு, குறு விவசாயிகளும் அதிக வருமானம் பெறுகிறார்கள். தோட்டக்கலை விளைபொருட்களை வேளாண் சார்ந்த தொழில்களுக்கு மூலப்பொருட்களாக பயன்படுத்துவதாலும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்றுவதாலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுவதுடன், ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பெருகுகிறது. எனவே தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை, விவசாயிகளின் சீரான உயர்வுக்கான உற்பத்தியை அதிகரிப்பதுடன், மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், விளைபொருட்கள் குறுகிய கால சேமிப்பு திறனை கொண்டுள்ளதால், அவற்றை சேமிக்க முறையாக திட்டமிடுவதற்கும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது'', என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தோட்டக்கலை பயிர்களான காய்கறி, பழங்கள், தோட்டப்பயிர்கள், மருத்துவ பயிர்கள், நறுமண பயிர்கள், மலர்கள் 15.88 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தி 231 லட்சம் டன் ஆகும். தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டில் தோட்டக்கலை பயிர்களின் பரப்பு 3.8 சதவீதமும், உற்பத்தி 11.85 சதவீதமும் முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தோட்டக்கலை பயிர்களை பொறுத்தவரையில் தோட்ட பயிர்கள் 50 சதவீதமும், பழங்கள் 20 சதவீதமும், காய்கறி 18 சதவீதமும், சுவை தாளித பயிர்கள் 8 சதவீதமும், மலர்கள் 3 சதவீதமும், நறுமண பயிர்கள் 1 சதவீதமும் என சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் இந்தியாவிலேயே கிராம்பு, புளி, மல்லிகை (குண்டு மல்லி) சம்பங்கி ஆகியவை உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் அசத்தி வருகிறது. தென்னை, கொக்கோ, செவ்வந்தி உற்பத்தியில் 2-ம் இடத்திலும், வாழை, நெல்லி, மிளகு, தர்பூசணி, பாகற்காய் உற்பத்தியில் 3-ம் இடத்திலும் தமிழகம் இருக்கிறது.

பழங்களை பொறுத்த வரையில் மா உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. அதாவது 1,47,983 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து முறையே வாழை, தர்பூசணி, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சப்போட்டா, பலா, பப்பாளி, முலாம்பழம் இருக்கின்றன. இதர பழங்கள் அடுத்தடுத்த நிலைகளில் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்தவகையில் பழ பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பு 3,26,059 ஹெக்டேர் ஆகும். அதேவேளை சந்தை வாய்ப்புகள் அதிகரித்து வரும் சிறப்பு பழ பயிர்களான டிராகன் பழம், வெண்ணெய் பழம், பேரீச்சை, மங்குஸ்தான், அத்தி, ஆலிவ் போன்ற பயிர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

காய்கறியை பொறுத்தவரையில் சின்ன வெங்காயம் அதிகபட்சமாக 55,123 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தக்காளி 41,545 ஹெக்டேரிலும், கத்தரி 24,015 ஹெக்டேரிலும், முருங்கை 21,501 ஹெக்டேரிலும், வெண்டை 18,967 ஹெக்டேரிலும், இதர காய்கறி 1,18,397 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. அந்தவகையில் காய்கறி மொத்த சாகுபடி பரப்பு 2,79,548 ஹெக்டேர் ஆகும்.

தோட்ட பயிர்களை பொறுத்தவரையில் தென்னை 4,46,153 ஹெக்டேரிலும், முந்திரி 86,117 ஹெக்டேரிலும், தேயிலை 69,588 ஹெக்டேரிலும், காபி 33,108 ஹெக்டேரிலும், ரப்பர் 28,433 ஹெக்டேரிலும், இதர பயிர்கள் 1,35,899 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த சாகுபடி பரப்பு 7,99,298 ஹெக்டேர் ஆகும்.

சுவை தாளித பயிர்களை பொறுத்தவரை மிளகாய் 53,933 ஹெக்டேரிலும், மஞ்சள் 25,559 ஹெக்டேரிலும், புளி 14,409 ஹெக்டேரிலும், கொத்தமல்லி 7,523 ஹெக்டேரிலும், மிளகு 6,980 ஹெக்டேரிலும், இதர பயிர்கள் 12,815 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த சாகுபடி பரப்பு 1,21,219 ஹெக்டேர் ஆகும்.

நறுமண பயிர்களை பொறுத்தவரையில் கண்வலி கிழங்கு 6,377 ஹெக்டேரிலும், மருந்து கூர்க்கன் 3,305 ஹெக்டேரிலும், வேம்பு 2,949 ஹெக்டேரிலும், பால்மரோசா புல் 1,652 ஹெக்டேரிலும், எலுமிச்சை புல் 826 ஹெக்டேரிலும், சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த சாகுபடி பரப்பு 16,433 ஹெக்டேர் ஆகும்.

மலர்களை பொறுத்த வரையில் மல்லிகை (குண்டுமல்லி) 12,896 ஹெக்டேரிலும், சாமந்தி 9,218 ஹெக்டேரிலும், சம்பங்கி 7,102 ஹெக்டேரிலும், செண்டுமல்லி 3,534 ஹெக்டேரிலும், ரோஜா 3,379 ஹெக்டேரிலும், இதர மல்லிகை பூக்கள் 4,219 ஹெக்டேரிலும், இதர மலர்கள் 5,259 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்த சாகுபடி பரப்பு 45,607 ஹெக்டேர் ஆகும்.

தோட்டக்கலை மலைப்பயிர்கள் சாகுபடி திட்டத்தில் மத்திய-மாநில அரசு நிதி பங்களிப்பில் நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவரி பகுதி மேம்பாடு திட்டம், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2023-24-ம் ஆண்டில் தொகுப்பு முறையில் பயிர் சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடியை பரவலாகுதல், நிலத்தடி நீர் அதிகம் உறிஞ்சப்பட்ட, அதிவேகமாக குறைந்து வரும் குறு வட்டங்களில் நுண்ணீர் பாசனத்தை தீவிரப்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என தமிழக அரசு உறுதிபட அறிவித்ததில் இருந்தே தோட்டக்கலை பயிர்கள் மீதான அரசின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. நிலத்தடி நீர்மட்டம், பயிர் சாகுபடி பரப்பு ஆகியவற்றை அதிகரிப்பதில் உள்ள இடர்பாடுகளை நீக்க புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி இருக்கிறது. அதே வேளை புதிய தொழில்நுட்பங்களை பெருவாரியான பரப்பளவில் கடைபிடித்து, நுண்ணீர் பாசனத்துடன் பயிர் சாகுபடிக்கு சாதகமான சூழலை உருவாக்கி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்திட வேண்டிய கட்டாய நிலையும் ஏற்பட்டிருக்கிறது என்பதே நிசர்சனமான உண்மையாக இருக்கிறது.

இதற்கேற்றாற்போல நவீன கால திட்டங்களையும், நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மேம்பட்ட புதிய திட்டங்களையும் கொண்டு வருவதில் தமிழக அரசு முழுமூச்சாக களமிறங்கி இருக்கிறது. இது தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் இன்னும் பெரியளவு முன்னேற்றத்தை தமிழகத்துக்கும், தமிழக விவசாயிகளுக்கும் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்