இன்று தேசிய சினிமா தினம்...!
|இந்த ஆண்டு தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ம் தேதி கொண்டாடப்படும் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.
உலகளவில் சினிமா என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே உள்ளது. அதிலும் இந்தியாவில் ரசிகர்கள் சினிமாவை தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைத்து ரசிப்பார்கள். அதனால்தான் உலகிலேயே அதிக சினிமா படங்கள் தயாராகும் நாடாக இந்தியா விளங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 1,800-க்கும் மேற்பட்ட படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. 2013-ஆம் ஆண்டு நிலவரப்படி சினிமா வெளியீட்டில் நைஜீரியா நாட்டை விட இந்தியா அதிக படங்களை தயாரிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே தியேட்டர் டிக்கெட்டுகள் இந்தியாவில் தான் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் சிலர் சினிமா மீதான மோகத்தின் காரணமாக தங்கள் வாழ்க்கையை சினிமாவுக்காகவே அர்ப்பணிக்கின்றனர். மேலும் அவர்கள் சினிமாவில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அதில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற கனவோடு முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் சிலர் வெற்றி பெற்றாலும், பலர் காணாமல் போகின்றனர். ஆனாலும் சினிமா மீதான மோகம் மட்டும் குறைந்தபாடில்லை.
இந்தியா அளவில் இப்படி என்றால், தமிழ்நாட்டில் சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு என்பதை தாண்டி அது ரசிகர்களின் உணர்ச்சிகளோடு ஒன்றிணைந்துவிட்டது. அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தங்களின் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே தமிழ் ரசிகர்கள் பார்க்கின்றனர். அதனால்தான் தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கொடிகட்டி பறக்க முடிந்தது.
மேலும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படம் வெளியானால் திரை அரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது தற்போதுவரை நடக்கிறது. தனது விருப்பமான நடிகரின் படம் வெளியாகும் தியேட்டர்களின் முன்னால் அவரின் பிளக்ஸ்க்கு மாலை அணிவிப்பது, பால் அபிஷேகம் செய்வது, பட்டாசு வெடித்து நடனமாடி மகிழ்வது என்று ரசிகர்கள் அன்றைய தினம் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சினிமா கொண்டாடப்படுகிறதோ அந்த அளவு சில தரப்பினரால் விமர்சங்களுக்கும் உள்ளாகிறது. என்னதான் பலர் சினிமாவை விமர்சித்தாலும் இன்றுவரை சினிமா ரசிகர்கள் தங்களின் பொழுதுபோக்கும் ஒரு விஷயமாகவே பார்த்து வருகின்றனர்.
இப்படி சென்று கொண்டிருக்க கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொரோனா பெருந்தொற்றால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் சினிமா துறை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அப்போது ரசிகர்களின் பொழுதுபோக்கிற்கு பெரிதும் துணை நின்றது ஓடிடி தளங்கள்தான். பெருந்தொற்று காலத்தில் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின. பின்னர் தொற்று பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைவடைந்த போது சில கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போதும் சினிமா ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து துவண்டு கிடந்த சினிமா துறையை மீட்டு எடுத்தனர்.
தேசிய சினிமா தினம்:
ரசிகர்கள் சினிமா மீது கொண்டிருக்கும் காதலை மதிக்கும் விதமாகவும், பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா தேசிய சினிமா தினத்தை அறிவிக்கிறது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி (இன்று) 'தேசிய சினிமா தினம்' கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது.
தேசிய சினிமா தினமான இன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.99-க்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை அன்றைய தினம் அதிகரிக்கும். சினிமா பார்க்க முடியாதவர்களும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படங்களை பார்த்து ரசிக்கலாம்.