< Back
சிறப்பு செய்திகள்
இன்று உலக பெருங்கடல் தினம்..!
சிறப்பு செய்திகள்

இன்று உலக பெருங்கடல் தினம்..!

தினத்தந்தி
|
8 Jun 2023 9:13 AM IST

உலக பெருங்கடல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

சென்னை,

உலகப் பெருங்கடல் தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 8-ந் தேதி கடைப்பிடிக்க வேண்டும் என்று, 1992-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் கனடாவால் முதன்முறையாக வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு பல நாடுகளில் இந்த தினம், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அனுசரிக்கப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு ஐநா சபையால், இந்த தினம் முறையாக அங்கீகரிக்கப்பட்டது.

அந்த வகையில் 'உலகப் பெருங்கடல் தினம்' இன்று (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுப்பதில் கடலுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. கடலில் இருந்து ஆவியாகும் நீரே, மேகமாக உருவாகி மழையாகப் பொழிவதாக நாம் படித்திருக்கிறோம். மேலும் துண்டாடப்பட்டுக் கிடக்கும் கண்டங்களை ஒன்றிணைப்பதிலும் இந்த கடல்களின் பங்கு மகத்தானது. இந்த வழியில்தான் பல நாடுகளில் வாணிபம் நடைபெற்று வருகிறது.

அதோடு ஒவ்வொரு ஆண்டும், பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் இடமாகவும் கடல் இருக்கிறது. இங்கிருந்து கிடைக்கும் கடல் உயிர்கள்தான், பலரின் அன்றாட உணவாகவும் கூட இருக்கிறது. மேலும் அந்த உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுபவர்களின் வாழ்வாதாரமாகவும் மாறி நிற்கிறது, கடல்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த கடல், சில மனித நடவடிக்கையின் காரணமாக குப்பை கிடங்காகவும் மாறிக்கொண்டிருக்கிறது. மருத்துவக் கழிவுகள், எண்ணெய் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை கடலில் கொட்டப்படுவதாக பல தகவல்கள் சொல்கின்றன. பலரின் வாழ்வாதாரமாகவும், பல உயிர்களின் வாழ்விடமாகவும் இருக்கும் கடலை பாதுகாப்பதற்காகவும், அதை கவுரவிக்கும் விதமாகவும்தான் 'உலகப் பெருங்கடல் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கடல் நமக்கு, ஆக்சிஜன், உணவுத் தேவை, மருத்துவப் பொருட்கள், காலநிலை கட்டுப்பாடு மற்றும் பல வளங்களை சேவையாக நமக்கு வழங்கி வருகிறது. அவை அழியாமல் காத்துக் கொள்வது நம் ஒவ்வொருவருடைய கடமை.

Related Tags :
மேலும் செய்திகள்