ஆங்கிலேயரை அலற வைத்த 'வளரி' ஆயுதம்
|இந்திய திருநாட்டில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னதாக எங்கெங்கு நோக்கினும் அன்னிய ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்திற்கு எதிராக பல்வேறு விடுதலை முழக்கங்களும், மக்கள் திரள் கலகங்களும் நடந்துகொண்டுதான் இருந்தது. சவுரி சவுரா இயக்கம், அன்னியத் துணி புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போன்ற நிகழ்வுகள் வரலாற்றுப்போக்கில் அனைவரும் அறியும்படியாக இன்றளவும் அது தொடர்பான பதிவுகள் காணக் கிடைக்கின்றது.
அதே நேரத்தில் எங்கோ ஒரு பகுதியில் ஒரு சிறு குழுவாகவோ அல்லது பெருங்கூட்டமாகவோ இருந்து கொண்டு சரியான அடையாளப்படுத்தப்படாத தலைமையின்கீழ் ஒன்றிணைந்து ஆங்கிலேய அரசிற்கு எதிராக நடத்திய கலகங்கள், விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிக அரிதாகவே இடம் பெற்றுள்ளது. அத்தகு கலகங்களுள் வரலாற்றில் பெரும் இடம் பெறத்தக்க ஒன்று பெருங்காமநல்லூர் கலகமாகும்.
மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே, பிரிட்டிஷ் இந்தியாவின் தெற்கு மூலையில் அமைந்த மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலம்பட்டி வட்டார சிற்றூர்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான நாட்டுக் கூட்டங்கள் நடத்தி தீர்மானம் நிறைவேற்றிக்கொண்டிருந்தார்கள். அன்றைய ஆங்கிலேய அரசு கொண்டு வந்த கைரேகை சட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதற்கான தீர்மானம் அது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலையில் ஆங்கிலேய அரசுப்படை பெருங்காமநல்லூரை முற்றுகை இட்டது. ஆங்கிலப் படையினர் மக்களை அச்சுறுத்தி ரேகை பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்தனர். கைரேகை பதிவு செய்ய மக்கள் மறுக்கவே அரசுப்படைகள் ஆயுதப் பிரயோகம் செய்தது.
அரசுப் படையின் ஆயுதத்திற்கு எதிராக பெருங்காமநல்லூர் மக்களோடு காளப்பன்பட்டி, குமரன்பட்டி, நரியம்பட்டி மக்களும் இணைந்துகொண்டு நெஞ்சுரத்தோடு போராடியதில் 16 பேர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இதில் வீரமங்கை மாயக்காளும் ஒருவர்.
இந்தப் போராட்டம் என்பது ஒட்டுமொத்த ரேகை எதிர்ப்பு சட்டத்தின் அடையாளமாகும். அதனையும் கடந்து வலிமைமிக்க அரசு ஒடுக்குமுறையை நிராயுதபாணியாக எதிர்கொண்ட விளிம்புநிலை மக்களின் அடையாளமாகும்.
ஒரு தனிமனிதனை பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பிரிப்பது எப்படி ஒரு சமூக கொடுமையோ, அதுபோன்றதான் சட்டத்தின் அடிப்படையில் இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று வகைப்படுத்துவது. அதாவது ஒருவன் குற்றம் செய்தானோ இல்லையோ, அவன் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்து விட்டால் அவனைக் குற்றவாளி என்று ஆங்கில அரசு அறிவித்தது. இந்தச் சட்டத்தின் கொடூர தன்மையினை தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் என்ற நூலில் மகாத்மா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வீடு இல்லாதவர்கள், நாடோடிகள் போன்றோர் நடத்திய கலகங்களை கட்டுப்படுத்தி கண்காணிக்க கி.பி. 1924-ல் 'லாக்ரன்சி' என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தக் கொடூரமான சட்டத்தின்படி இம்மக்கள் குற்ற மரபினர் அல்லது அபாயகரமானவர் என்று பிரித்து வைத்து ஒடுக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து நடந்த பெருங்காமநல்லூர் கலகம் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. இம்மக்கள் பயன்படுத்திய வலிமையான ஆயுதமே 'வளரி'. இன்று நாம் 'பூமராங்' என்று அழைப்பதைப் போன்ற ஒரு ஆயுதம்தான் இந்த வளரி. ஆனால் இந்த வளரி, சங்க காலம் தொட்டு வழக்கில் இருந்து வந்துள்ளது.
இந்த ஆயுதம் ஆங்கில படையினரை அலற வைத்தது. கி.பி. 1915-ல் மதுரை மாவட்டத்தில் 213 சாதிகளை உள்ளடக்கி கொண்டு வரப்பட்ட குற்றச் சட்டத்திற்கு எதிராக 1921-ம் ஆண்டு மக்கள் கிளர்ந்தெழ துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தென்னகத்தின் ஜாலியன் வாலாபாக் எனப்படும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் மாண்டாலும் நம் மக்கள் பயன்படுத்திய வளரி என்னும் ஆயுதத்தால் ஆங்கிலப் படையினரின் பல தலைகள் கொய்யப்பட்டன.
இந்த ஆயுதத்தின் வலிமையை நன்கு உணர்ந்த ஆங்கில அரசு இதை பயன்படுத்துவதற்கு தடை விதித்தது. வீடுகளில் வளரி வைத்திருந்தால் அவர்கள் குற்றவியல் தண்டனைக்கு ஆட்பட்டனர். எனவே மக்கள் வளரியை கோவில்களில் வைத்து பாதுகாத்தனர். துப்பாக்கி, பீரங்கி என்று நவீன ஆயுதங்களை வைத்திருந்த ஆங்கிலேயர் நம் மக்கள் வைத்திருந்த வளரியைக் கண்டு அஞ்சி நடுங்கினா். இந்த போராட்டத்தை நினைவுகூரும் வகையிலான நினைவுச் சின்னம் பெருங்காமநல்லூரில் எழுப்பப்பட்டுள்ளது.
- முனைவர் மணி.மாறன், தமிழ்ப்பண்டிதர், சரசுவதிமகால் நூலகம், தஞ்சாவூர்.