பேனா மன்னன் பதில் சொல்கிறார்
|கேள்வி: நாடாளுமன்றம் பிரதமரின் சொந்த வீடு அல்ல. பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த பணத்தில் கட்டியுள்ள அவரது வீட்டின் புதுமனை புகுவிழாவும் அல்ல, என்று திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி. மஹாவா மொய்த்ரா சாடியிருக்கிறாரே? அவரது இந்த துணிச்சலான பேச்சை பாராட்ட தோன்றுகிறது. (க.பெ.ரத்தினசாமி, கூடுவாஞ்சேரி, செங்கல் பட்டு)
பதில்: உங்களுக்கு துணிச்சலாக தெரிகிறது. ஆனால் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் திறப்புவிழா, நாட்டு மக்களின் புதுமனை புகுவிழா தானே...
***
கேள்வி: எப்போதும் மாணவர்களை விட மாணவிகள் அதிக மதிப்பெண் எடுப்பது ஏன்? (சி.வின்சென்ட், நாகப்பட்டினம்)
பதில்: மாணவிகளின் கவனம் படிப்பில் மட்டும் இருப்பதாலும், நானும் சாதிப்பேன் என்ற உறுதியும், முயற்சியும் இருப்பதாலும் தான்.
***
கேள்வி: எதிர்க்கட்சிகள் முறையாக ஒருங்கிணைந்தால் பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியும் என்கிறாரே, ராகுல்காந்தி. (மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்)
பதில்: பாட்னாவில் நடக்கும் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகிறதா? என்று முதலில் பார்ப்போம்.
***
கேள்வி: தமிழக அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள சிறிய மாற்றம் நாடாளுமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை கொண்டுவருமா? (சம்சுதீன் புஹாரி, திரேஸ்புரம்)
பதில்: இதை வைத்து சொல்லமுடியாது.
***
கேள்வி: பெரியார், அண்ணா கொள்கைகளை இப்போதைய கட்சிகள் முழுமையாக பின்பற்றவில்லை என ம.தி.மு.க.வில் இருந்து விலகிய துரைசாமி கூறுகிறாரே? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
பதில்: அவரும் பின்பற்றவில்லை என்கிறாரா? இதை ஏன் அவர் ம.தி.மு.க.வில் இருக்கும்போது சொல்லவில்லை?
***
கேள்வி: பழங்கதைகளை பேசிக் கொண்டிருப்பது வளர்ச்சிக்கு உதவுமா? (கே.ஆர்.உதயகுமார், சென்னை)
பதில்: பழங்கதை, காரில் பக்கவாட்டில் உள்ள கண்ணாடி போலத்தான். அதை அவ்வப்போது பார்க்க வேண்டுமே தவிர, அதையே பார்த் துக்கொண்டு வண்டி ஓட்ட முடியாது.
***
கேள்வி: எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்குவேன் என்கிறாரே மல்யுத்த சம்மேளன தலைவர்? (சரவணன், மருதமலை)
பதில்: அவர் மீது நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர்ந்தால் தானே நிரூபிக்க முடியும். அதைத்தானே மல்யுத்த வீரர்கள் கேட்கிறார்கள்.
***
கேள்வி: ஆறு அறிவு கொண்ட மனிதன் தவறு செய்வது சரியா? (நா.ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை)
பதில்: தவறு அனைவருக்கும் இயல்பு. தெரியாமல் செய்வது தவறு. தெரிந்தே செய்வது தப்பு.
***
கேள்வி: முன்பு அதிக விவசாய நிலங்கள் இருந்ததால் உணவு பஞ்சம் வரவில்லை. இப்போது விவசாய நிலங்கள் குறைந்தாலும், உணவுக்கு பஞ்சம் ஏற்படவில்லையே... ஏன்? (ம.பாலு, கொளத்தூர்)
பதில்: ரசாயன உரங்களை போட்டு விளைச்சலை கூட்டுகிறோம். ஆனால் நிலம் மலடாகி கொண்டு இருப்பதை மறந்து விடுகிறோம்.
***
கேள்வி: பணம், நகையல்ல சொத்து. படிப்பே உண்மையான சொத்து என சொல்லிச் சொல்லி வளர்த்தார் என் தந்தை என பிளஸ்-2 தேர்வில் சாதனை புரிந்த மாணவி நந்தினி கூறியுள்ளது? (ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம், சென்னை)
பதில்: எல்லா தந்தையரும் பின்பற்ற வேண்டிய வளர்ப்பு முறை இது தான்.
***
கேள்வி: எதற்கெடுத்தாலும் கோபப்படும் எனது மனைவியை எப்படி சமாளிப்பது? (அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)
பதில்: அதே அளவு அன்பை காட்டி கொஞ்சுங்கள். சரண்டர் ஆகிவிடுவார்.
***
கேள்வி: கவர்னர் ராஜா அல்ல... ராஜ்பவன் என்ற பெயரை மாற்ற யோசித்து வருகிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளாரே... (நாராயண மூர்த்தி, அகரம்)
பதில்: கவர்னர் யோசித்து நடக்கக்கூடிய காரியமல்ல இது.
***
கேள்வி: மேடையில் சில அரசியல் தலைவர்கள் ஒருமையில் பேசினால் கூட தொண்டர்கள் கைதட்டி ரசிக்கிறார்களே? (சேகர், நாமக்கல்)
பதில்: கைதட்டுவது, அவர்கள் பேச்சை நிறுத்த சொல்வதற்கு காட்டும் அடையாளமாகவும் இருக்கலாம்.
***
கேள்வி: சமீபத்தில் வெளிவந்த கர்நாடக தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சொல்லும் செய்தி என்ன? (நசீமா, பரங்கிமலை)
பதில்: மக்கள் முடிவு எடுத்துவிட்டால் எந்த செல்வாக்கு அலையும் கரை சேர்க்காது.
***
கேள்வி: அனுபவம், பக்குவம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? (சி.கனகராஜ், திருவண்ணாமலை)
பதில்: அனுபவத்தால் அடைவது தான் பக்குவம்.
***
கேள்வி: தனிப்பட்ட வாழ்க்கை. பொது வாழ்க்கை. வேறுபடுத்துங்களேன். (பா.ஜெயபிரகாஷ், தேனி)
பதில்: பொதுவாழ்க்கையில் இருப்போருக்கு தனி வாழ்க்கையும் பொதுவாழ்க்கை தான்.
***
கேள்வி: சமீபத்தில் ரசித்த கவிதை எது? (வே.அழகர், ஒக்கூர்புதூர்)
பதில்: கவிஞர் தியாரூ எழுதிய, 'பேசவேண்டிய தருணங்களில் வாய் மூடிக்கொண்டு இருந்தால், நாம் மனிதர்கள் அல்ல. களிமண் உருண்டைகள்'.
***
கேள்வி: கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி தருவது சரியா? (எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி, திருச்சி)
பதில்: மனிதாபிமான அடிப்படையில் வேண்டுமானால் சரியாக இருக்குமே தவிர, சட்டவிரோதமான இந்த செயலுக்கு தேவையில்லை என்பது தான் பொதுவான கருத்து.