உண்மையான கல்வி இதுதான்..!
|மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி என டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆசிரியர் பணி என்பது மாணவர்களுக்கு கல்வியை போதிப்பது மட்டுமல்லாமல் ஒழுக்கம், பண்பு, ஆன்மிகம், பொது அறிவு என அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொடுக்கும் உன்னத பணியாகும். கற்பிக்கும் பணியை நேசிப்பதுடன், மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாகவும் விளங்குகிறார்கள் ஆசிரியர்கள்.
அதனால்தான் தாய், தந்தைக்கு பிறகு குருவான ஆசிரியருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அத்தகைய ஆசிரியர்களை போற்றும் விதமாக, டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதியை ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோம்.
கல்வியாளர், தத்துவஞானி, அறிஞர், அரசியல்வாதி, நாட்டின் முதல் துணை குடியரசு தலைவர், இரண்டாவது குடியரசு தலைவர் என்பதையெல்லாம் தாண்டி, மாணவர்களுக்கு பிடித்த சிறந்த ஆசிரியராக இருந்தவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்.
இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார்.
"காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு விஞ்ஞானம் சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை.
மனநோய்கள், மனப்பதற்றம் முதலான கேடுகள் எல்லாம் தவறான கல்வியின் விளைவு ஆகும். மனிதனின் உடல், மனம், ஆளுமை ஆகியவற்றின் தேவையை நிறைவேற்றுவதுதான் உண்மையான கல்வி. அது சமூக நீதியையும் சுமூகமான மனித உறவுகளை வளர்க்கும் கலையாகும். ஒரு கருத்தைக் கூறி அதற்கு ஆதாரமான காரணங்களை ஒருவர் கூறினால், மற்றொருவர் இதை விட சிறப்பான காரணங்களைக் கூறி மறுக்க முடியும். காரண காரிய வாதத்தில் காணும் முடிவுரைகளுக்கு இறுதித்தன்மை கிடையாது" என்றார் டாக்டர் ராதாகிருஷ்ணன்.
டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளில் ஆசிரியர் தினம் கொண்டாடும் நாம், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களை கவுரவித்து மகிழ்கிறோம். கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லாசிரியர் என்ற விருதுகள் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன.