< Back
சிறப்பு செய்திகள்
ஆசிரியர் தினம் 2024: நன்றி சொல்லி ஆசிரியர்களை கொண்டாடுங்கள்..!
சிறப்பு செய்திகள்

ஆசிரியர் தினம் 2024: நன்றி சொல்லி ஆசிரியர்களை கொண்டாடுங்கள்..!

தினத்தந்தி
|
3 Sept 2024 12:57 PM IST

ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவும் இந்திய கலாச்சாரமும் எப்போதும் குரு- சிஷ்ய (ஆசிரியர் மற்றும் மாணவர்கள்) உறவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. அந்த பாரம்பரியத்தை ஒரு படி முன்னோக்கி எடுத்துச் சென்று, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் மகத்தான பங்களிப்பை வழங்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை கவுரவிக்கும் வகையில் இந்த தினத்தை நாடு கொண்டாடுகிறது.

இந்த தினம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு அளிக்கும் அங்கீகாரம் மட்டுமல்லாமல், ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூருகிறது. அதாவது, ஆசிரியர் தினத்தின் வேர்கள், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனிடம் இருந்து வந்துள்ளன.

தனிநபர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் ஆசிரியர்கள் வகிக்கும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இதை நினைவூட்டும் வகையில், ஆசிரியர் தினத்தன்று, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆண்டு நாளை மறுநாள் (5.9.2024) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், வழிகாட்டிய குரு அல்லது ஆசிரியருக்கு பல்வேறு வகையில் நன்றியை வெளிப்படுத்தலாம். மாணவர்கள் நன்றிக் குறிப்புடன், கையால் செய்யப்பட்ட வண்ணமயமான வாழ்த்து அட்டைகளை வழங்கலாம். வண்ண பேப்பர்கள், வரைபடங்கள், ஓரிகமி அல்லது அழகான சிறிய கட்-அவுட்கள் மற்றும் பல வரைகலை பொருட்களை பயன்படுத்தி இந்த அட்டைகளை அலங்கரிக்கலாம்.

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப, மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்றுசேர்த்து, ஆசிரியரை பாராட்டும் வகையிலான உரையாடல்களை கொண்ட வீடியோவாக தொகுத்து அனுப்பலாம். தனிப்பட்ட வகையில் ஆசிரியர்களுக்கு பரிசுகள் மற்றும் பூங்கொத்து கொடுத்தும் ஆசி பெறலாம். முன்னாள் மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து ஆசி பெறலாம்.

மேலும் செய்திகள்