< Back
சிறப்பு செய்திகள்
பொறியியல் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு நடைமுறைகள்
சிறப்பு செய்திகள்

பொறியியல் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு நடைமுறைகள்

தினத்தந்தி
|
4 Aug 2023 5:12 PM IST

இந்த வருடம் பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான மாணவர் கலந்தாய்வு, ஜூலை ௨௮ ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 9 ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட 13 நாள் முதல் கட்ட கலந்தாய்வு நடக்க இருக்கிறது.

இந்த கலந்தாய்வில் இருக்கக்கூடிய நடைமுறைகளை தெரிந்து கொள்வது பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் இந்த கலந்தாய்வில் இருக்கக்கூடிய நடைமுறைகளை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாமல் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் கூட விரும்பிய கல்லூரியில் விருப்பமான பாடத்தை எடுக்க வாய்ப்பு இருந்தும் தவற விடக்கூடாது என்பதன் நோக்கம் தான் இந்த கட்டுரை. பொறியியல் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண், 200 க்கு 200 முதல் 177 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இந்த முதற்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

28-ந்தேதி காலை10 மணியிலிருந்து முப்பதாம் தேதி மாலை 5 மணி வரை சாய்ஸ் ஃபில்லிங் அதாவது மாணவர்கள் தாங்கள் எந்த கல்லூரியில் என்ன மாதிரியான படிப்பை படிக்க விரும்புகிறார்கள் என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக எனக்கு ஏரோநாட்டிக்கல் வேணும் எனக்கு இசிஇ வேணும் கம்ப்யூட்டர் சயின்ஸ் வேணும் இந்த கோர்ஸ்கள் எனக்கு இந்த இந்த கல்லூரியில் வேணும் அப்படிங்கற விருப்பத்தை பதிவு செய்யறது தான் இந்த சாய்ஸ் பில்லிங் . சரி, ஒரு மாணவர் எத்தனை சாய்ஸ் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

இந்த சாய்ஸ் ஃபில்லிங்கில் ரொம்ப கவனமா இருக்கணும். கடந்த ஆண்டு இந்த கல்லூரியில் இந்த படிப்பு இந்த கட் ஆஃப்லயே கிடைச்சிடுச்சு, அதனால அதைவிட கூடுதலாவே என்கிட்ட மதிப்பெண் இருக்கு, எனவே கண்டிப்பா கிடைக்கும் அப்படிங்கற நம்பிக்கையில வேற எந்த சாய்சும் போடாம இருக்கக்கூடாது. காரணம் உங்க மதிப்பெண்ணுக்கு நீங்க தேர்ந்தெடுத்த சீட் கிடைக்காமல் போகலாம். எனவே அடுத்தடுத்து உங்க தேர்வு என்னவாக இருக்கலாம்னு தெளிவா யோசிச்சி சாய்ஸ் ஃபில்லிங் முறையை பயன்படுத்துங்க. எதற்கு மூன்று நாட்கள் உங்களுக்கு இதை பூர்த்தி செய்ய கொடுக்கிறார்கள் என்றால் நீங்கள் உங்களின் தேர்வுகளை சரியாக தெரிந்து கொண்டு வரிசைப்படி பூர்த்தி செய்யவே. மேலும் இணையம் மூலம் நீங்கள் உங்கள் தேர்வை பூர்த்தி செய்து 'சேவ்' கொடுத்து விட்டால் பின்பு உங்களால் மாற்ற முடியாது. எனவே மாணவர்கள், தங்கள் ஆசிரியர், பெற்றோர், யாரேனும் வழிகாட்டுபவர் இருந்தால் அவர்களோடும் கலந்து ஆலோசனை செய்து வரிசை கிரமமாக அந்த பட்டியலை பூர்த்தி செய்வது நல்லது.

ஒருவேளை நீங்கள் தவறுதலாக சாய்ஸ் ஃபில்லிங்கில் உங்கள் படிப்பையோ கல்லூரியையோ தவறாக போட்டு சேவ் கொடுத்திருந்தால்,தவிர்க்க முடியாத சூழலில், நீங்கள் பூர்த்தி செய்த அப்ளிகேஷனில் உங்களுக்கான ஒரு TFC (TNEA Facilitation Centre)சென்டர் கொடுக்கப்பட்டிருக்கும், அதுவும் நீங்கள் தேர்ந்தெடுத்த மையமாக இருக்கும், அந்த சென்டருக்கு போக வேண்டும். இதற்கு மாணவர் தன் ஆதார் கார்டையும் எடுத்து செல்லவேண்டும். கூடவே அப்ளிகேஷனையும் எடுத்து செல்ல வேண்டும். அப்ளிகேஷன் நம்பரையும் ஆதாரையும் பார்த்து, உங்கள் பாடம் அல்லது கல்லூரிதேர்வுகளில் நீங்கள் செய்ய நினைக்கும் மாற்றத்தை செய்துக்கொள்ளலாம்.

சாய்ஸ் பில்லிங் முடிந்தவுடன் 31-ந்தேதி காலை 10 மணிக்கு தற்காலிக முடிவு அறிவிக்கப்படும். இந்த முடிவு வந்தவுடன் இதில் தேர்வாகி இருக்கும் மாணவர்கள் தாங்கள் விரும்பிய முதல் சாய்சே கிடைத்திருக்கிறது என்றால் அதை அவர்கள்

1. 'அக்செப்ட் அண்ட் ஜாயின்' என கொடுப்பதன் மூலம் கல்லூரியில் சேர்வதற்கு ப்ரொவிஷனல் லிஸ்டில் அவர்கள் பெயர் வந்துவிடும். அல்லது

2. அடுத்த கட்ட கவுன்சிலிங் செல்கிறேன் என தெரிவிக்கலாம் அல்லது

3. கவுன்சிலிங்கை விட்டு வெளியேறுகிறேன் என டிக்லைன் செய்துவிடலாம்.

மாணவர்களுக்கு தான் முதன்மையாக தேர்வு செய்தது கிடைக்காமல் அடுத்தடுத்து தேர்வு செய்ததில் ஏதேனும் கிடைத்திருப்பின் அவர்கள்,

1. அந்த பாடப்பிரிவு அந்த கல்லூரியில் சேர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிப்பது அல்லது

2. அந்தப் பாடப்பிரிவு அந்த கல்லூரியில் சேர்ந்து கொள்கிறேன் ஆனால் மேற்படி லிஸ்டில் உள்ளவற்றில் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் தரவும் என தெரிவிக்கலாம் அல்லது

3. எனக்கு கிடைத்திருக்கும் கல்லூரியும் பாடப்பிரிவும் எனக்கு வேண்டாம் இவற்றுக்கு மேலே உள்ளதில் எனக்கு வாய்ப்பு இருந்தால் கொடுக்கவும் என தெரிவிக்கலாம் அல்லது

4. அடுத்த கட்ட கலந்தாய்வில் கலந்து கொள்வதாக டிக்லைன் செய்து வெளியேறலாம் அல்லது

5. முழுவதுமாக கவுன்சிலிங் விட்டு வெளியேறலாம்

ஆக ஐந்து வகையான வாய்ப்புகள் இவர்களுக்கு உண்டு. இந்த இடத்தில் மாணவர்கள் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் நமக்கு கல்லூரி கிடைத்து விட்டது எனவே ப்ரொவிஷனல் லிஸ்டில் பெயர் வந்துவிடும் என அமைதியாக இருப்பது தான். அவ்வாறு இருக்கக் கூடாது. கட்டாயம் தற்காலிக முடிவை பார்த்து உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களின் பெயர் ப்ரொவிஷனல் லிஸ்டில் வராது. இவ்வாறு தங்களின் பதிலை தெரிவிக்க இரண்டு நாட்கள் தரப்படுகிறது. பிறகு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் ப்ரொவிஷனல் லிஸ்ட் பிரசுரிக்கப்படும்.

6-ம் வகுப்பு முதல் பிளஸ் -2 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வருவார்கள். இவர்களுக்கென்று தனியே கவுன்சிலிங் நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கட்டணம் இல்லா கல்வி அளிக்கப்படும். இதில் மாணவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் அவர் கவுன்சிலிங் இல் இருந்து வெளியே வந்து விடுவார். எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கும் போதே ஜெனரல் அகாடமி கவுன்சிலிங் முறையிலும் விண்ணப்பித்தால் இங்கே படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை என்றாலும் பொது கவுன்சிலிங் முறையில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் பொது கவுன்சிலிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படும்போது மாணவர் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்