< Back
சிறப்பு செய்திகள்
வாழ்விடம் - உணவு இன்றி சுற்றித்திரியும் தெருநாய்கள்
சிறப்பு செய்திகள்

வாழ்விடம் - உணவு இன்றி சுற்றித்திரியும் தெருநாய்கள்

தினத்தந்தி
|
25 Jun 2023 10:32 AM IST

நன்றி, நட்பு, அறிவு ஆகிய இயல்புகள் நாய்களுக்கு இருப்பதால் பலர் நாய்களை வீட்டில் ஒர் உறவாக வளர்க்கிறார்கள்.

மோப்பத்திறன் இருப்பதால், போதைப் பொருட்கள், வெடிகுண்டு தடுப்புக்காகவும், குற்றவாளிகளை கண்டறியவும் காவல்துறை மற்றும் ராணுவத்தில் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், கவுரவமாக கொஞ்சி விளையாடும் வகையில் வளர்க்கப்படும் நாய்கள் ஒருபுறம் என்றால், தெருநாய்களின் நிலையை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இனப்பெருக்கத்தால் தெருவுக்கு தெரு நாய்கள் பெருகி வருகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள், மாணவ-மாணவிகள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் ஒருவித அச்சத்துடன் தெருக்களில் செல்ல வேண்டி இருக்கிறது.

பதைபதைப்பு

குழந்தைகள், சிறுவர்களை தெருநாய்கள் கடித்துக்குதறி கொன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து, அதுபற்றிய செய்தியை படித்தால் உள்ளம் பதை பதைக்கிறது.

ஒரு சில இடங்கள் மட்டுமல்ல, ஏன் தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் தெருநாய்கள் கூட்டத்தால் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்பல.

தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் இருந்து குரல்கள் ஒலிக்கின்றன. அதே நேரத்தில் தெருநாய்கள் சமூகத்தின் ஒரு அங்கம். அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்..

மனிதனின் நண்பன்


நாய்கள் ஏறத்தாழ 25 ஆயிரம் ஆண்டுகளாக மனிதனோடு நட்புடன் இருப்பதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வீட்டு நாய்கள், கைவிடப்பட்ட நாய்கள், தெருநாய்கள் என்று 3 வகையாக பிரிக்கலாம்.

இதில் கைவிடப்பட்ட நாய்களும், தெரு நாய்களும்தான் கவனத்தில் ெகாள்ள வேண்டியவை. மற்ற விலங்குகளைவிட நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பால், நாய்கள் மீது மனிதர்களுக்கு இருந்த சகிப்புத்தன்மை, பாசம், பரிவு குறைந்து, பலருக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது.

நாய்க்கடியால் ரேபிஸ் என்ற வெறிநோய் ஏற்படுத்தும் பாதிப்பு மற்றும் கொடூர மரணம் மனிதர்களிடம் பயத்தை உருவாக்கி இருக்கிறது.

ஆண்டுக்கு 16 குட்டிகள்

ஒரு பெண் நாய் ஆண்டுக்கு 16 குட்டிகளை ஈன்று எடுக்கிறது. ஒரு தெருவில் 5 பெண் நாய் இருந்தால் அவை ஈனும் குட்டிகளின் எண்ணிக்கை ஒரு ஆண்டில் 80 என்ற அளவில் இருக்கும்.

இவை குட்டிகளை ஈன்று பெருக்குவதில் பிரச்சினை இல்லை. ஏற்கனவே, நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் நகரங்களின் தெருக்களில் தெரு நாய்களுக்கு வாழ்விடமோ, உணவோ கிடைப்பதில்லை. நெருக்கடி காரணமாக, இந்த நாய்கள் எரிச்சல் அடைவதும் அதன் காரணமாக ஏற்படும் கோபத்தில் மனிதர்களை விரட்டுவதும் கடிப்பதும் அதிகரித்துள்ளது.

ஆங்கிலேய ஆட்சி அடக்குமுறையில், இந்தியர்களும் நாய்களும் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழையக்கூடாது என்று ஆங்கிலேயர்கள் சட்டம் வைத்ததாக வரலாறு கூறுகிறது.

இந்தியாவில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அந்த காலத்திலும் ஏராளமான நாய்கள் கொல்லப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.

அப்போதில் இருந்து, இப்போது வரை எத்தனையோ மாற்றங்கள், அறிவியல் வளர்ச்சி என நாடு நகர்ந்தாலும், தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால், இயற்கை நாய்களுக்கு அதுபோன்ற ஒரு இனப்பெருக்க இயல்பை அளித்துள்ளது.

நாய்களின் எண்ணிக்கை குறைந்தால் எலிகள், கரப்பான்பூச்சி உள்ளிட்ட பல்வேறு நோய் பரப்பும் உயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உயிரியலாளர்கள் கூறுகிறார்கள்.

1665-ம் ஆண்டு வாக்கில் லண்டனில் பிளேக் நோய் தாக்கியபோது அந்த நகரில் 2,50,000 நாய்களும் பூனைகளும் கொல்லப்பட்டன. நாய்களும் பூனைகளும் இல்லாததால் அங்கு பெருச்சாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகின. நாய்கள் அழிப்பு மனிதர்களுக்குதான் பல நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இதுவொரு சான்றாக கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நெருக்கடியான மக்கள் வாழ்விடங்களில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையிலான முரண் அதிகரித்துள்ளது.

வினோத பழக்கம்

நாடு முழுவதும் எடுத்துக்கொண்டால், நாய்களிடம் கடிபட்டு அன்றாடம் அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை பல ஆயிரங்கள் இருக்கும் என்று புள்ளி விவரம் கூறுகிறது.

நாய் கடித்தால் சுடுகாட்டுக்கு போய் பிணவாடை பிடிப்பது, கடித்த நாயை வளர்த்தவர் வீட்டில் நீராகாரம் வாங்கி பருகுவது என்ற பழக்கத்தை இன்றும் சிலர் கடைப்பிடிப்பதை பார்க்கலாம். இதுவெல்லாம் மூடப்பழக்கவழக்கம் எனவும், நாய்க்கடிக்கு ஆளானால் தாமதமின்றி உரிய டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெறுவதுதான் சரியானது என மருத்துவ துறையினர் கூறுகிறார்கள்.

மாநகராட்சி, நகராட்சிகளில் தெருநாய்கள் பிடிக்கும் பிரிவு இயங்குகிறது. இந்த பிரிவுக்கு கால்நடை டாக்டர் மற்றும் நாய் பிடிக்கும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் நாய் தொல்லை பற்றி அளிக்கும் புகார் அடிப்படையில் இந்த குழு குறிப்பிட்ட பகுதிக்கு சென்று நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும்.

இப்பணி முறையாக நடந்து இருந்தால் தெருநாய்கள் இனப்பெருக்கம் பெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

கைவிடப்பட்ட நாய்களை பராமரிப்பவர்


இது குறித்து மதுரையில் கைவிடப்பட்ட நாய்களை பராமரிக்கும் சாருஹாசன் கூறும்போது, "கருத்தடை திட்டத்தை சரியாக செய்யாத காரணத்தால் நாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு சரியான தகுதி உள்ள அறக்கட்டளைகள் மற்றும் அமைப்புகளை தேர்வு செய்து அவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்", என்கிறார்.

நாய்கள் கருத்தடைக்காக வந்த பிரத்தியேக இங்கிலாந்து வாகனம்


பெருகி வரும் நாய்களை தடுக்க ஒரே வழியாக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்வது நாய்களுக்கு தீவிரமாக கருத்தடை செய்வதை தான்.

"மிஷன் ரேபிஸ்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி வெறிநோயை தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தின்படி இங்கிலாந்தில் இருந்து கால்நடை டாக்டர்கள், அறுவை சிகிச்சை அரங்குடன் கூடிய ஒரு தனித்துவமான கால்நடை மருத்துவ வாகனத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து வருகிறார்கள். இந்த மருத்துவ குழு கடந்த 2015-ம் ஆண்டு, தமிழகம் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து இங்குள்ள மாநகராட்சி பகுதிகளில் திரிந்த தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை செய்தனர். அதை மாதிரியாக கொண்டு அந்தந்த மாநில அரசுகளும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தன. ஆனால், அதன்பின்னர் தீவிரமான நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மாநகராட்சிகளில் செய்யப்படாததால் இன்றைக்கு தமிழகத்தில் நாய்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டியுள்ளது.

இந்தியாவில் 18 ஆயிரம் பேர் பாதிப்பு


நாய்க்கடி பாதிப்பால் ஏற்படும் ரேபிஸ் என்ற வெறிநோய் காரணமாக உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாய்க்கடி மரணங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய நாடுகளில் நாய்க்கடி மரணங்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 18 ஆயிரம் பேர், நாய்க்கடியால் வெறிநோய் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது உலக அளவில் 36 சதவீதம் என கூறுகிறார்கள்.

இந்தியாவில், கடந்த 2022-ல் 18 மாநிலங்களில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி 250 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி உள்ளன. இதில், கர்நாடக மாநிலம் 32 ரேபிஸ் மரணங்கள் என்ற எண்ணிக்கையில் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 24 இறப்புகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் 22 இறப்புகளும், கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா 21 இறப்புகளும், ஆந்திரா, உத்தரபிரதேசத்தில் தலா 19 இறப்புகளும் பதிவாகி உள்ளன. அதைத் தொடர்ந்து டெல்லி, பீகார் மாநிலங்கள் உள்ளன.

தீர்வு என்ன?


தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை சிகிச்சை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் நாய்களை பிடிக்க போதுமான ஊழியர்கள், வாகனங்கள், கருத்தடை செய்ய கால்நடை மருத்துவர்கள் சரியான எண்ணிக்கையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் தமிழகம் முழுவதும் நாய்களின் இனப்பெருக்கம் பெருமளவில் அதிகரித்து வருவதாகவும், இதனால் மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான போராட்டம் தொடர்வதாகவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உலக அளவில் வெறிநோய் கடியால் மரணங்கள் நிகழும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படி நிகழும் மரணத்தில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகம் என்பதும், அதிலும் கிராமப்புறங்களை சேர்ந்த குழந்தைகள் அதிகம் என்பதும் வேதனையான தகவல்கள் ஆகும்.

நாய்க்கடியும் அதன் விளைவாக வரும் வெறிநோயும் தடுக்கப்படக்கூடியதே. அதற்கு தேவை நாய் கருத்தடை திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது மற்றும் தெருநாய்களுக்கு சரியான காலகட்டத்தில் வெறிநோய் தடுப்பூசிகளை போடுவதும்தான் தீர்வு என்கிறது, மிஷன் ரேபிஸ் இந்தியா அமைப்பு.

மேலும் செய்திகள்