< Back
சிறப்பு செய்திகள்
இதுதான் உண்மையான முன்னேற்றம்..!
சிறப்பு செய்திகள்

இதுதான் உண்மையான முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
12 Jan 2024 1:39 PM IST

பாரம்பரிய விவசாய குடும்பங்களில் கூட விவசாயத்தைவிட, படித்துவிட்டு வேறு வேலை பார்த்து கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது.

இயற்கை நமக்கு அளித்த அதிசயம் விவசாயம். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம்தான். முந்தைய காலத்தில் நம் நாட்டில் திரும்பிய திசையெல்லாம் பச்சை பசேல் என புற்களும், வயல்வெளிகளும் அழகாக இருந்தன. ஆனால் கால ஓட்டத்தில் விவசாயத் தொழில் குறைந்துகொண்டே வருகிறது. பிற தொழில்களின் அசுர வளர்ச்சியால் விவசாயத் தொழில் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

அத்துடன், புதிது புதிதாக திரும்பும் திசையெல்லாம் கட்டிடம் கட்டி இயற்கையை அழித்துவருகிறோம். நமக்கு கை கொடுத்த இயற்கையை அழித்து வருகிறோம். இயற்கையை பாதுகாக்கும் வகையில் நம்முடன் கைகோர்க்க இயற்கை விவசாயம் தயாராக உள்ளது. அதை சரியான முறையில் பயன்படுத்த முன்வரவேண்டும்.

அள்ள அள்ள குறையாத ஓர் பொக்கிஷத்தை இயற்கை அன்னை நம் கையில் கொடுத்துள்ளாள். ஆனால் நாம் அதை சரியாக பயன்படுத்துவதில்லை.

பாரம்பரிய விவசாய குடும்பங்களில்கூட விவசாயத்தை விட படித்துவிட்டு கைநிறைய சம்பாதித்தால் போதும் என்ற எண்ணம் மேலோங்கிவிட்டது. நிலைமை இப்படியே போனால் நாம் உண்ணும் உணவை விளைவிக்க யார் தான் இருப்பார்கள்? ஒவ்வொரு குடும்பத்திலும் மெல்ல மெல்ல விவசாயத் தொழிலை கைவிடும்போது, எதிர்காலத்தில் உணவு தேவைகளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்கும் நிலை உருவாகும்.

ஒரு நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுதான் உண்மையான முன்னேற்றம். எனவே, இன்றைய இளம் தலைமுறையினர், தங்களின் முன்னோர் விட்டுச் சென்ற விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும். அதேசமயம், விளைபொருட்களுக்கான நியாயமான விலை உத்தரவாதத்தை அரசு வழங்கி, விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.

நமது நாட்டின் கொடியில் உள்ள மூவர்ணத்தில் பச்சை நிறம் பசுமையை அதாவது வேளாண்மையை குறிக்கிறது. இவ்வாறு விவசாயத்தை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் நாம், ஆனால் விவசாயத்தையும், விவசாயியையும் முன்னேற்றுவதில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

இது நமது பூமி, நமது நாடு. நாம் தான் இதை பாதுகாக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாத்து நாட்டை வளப்படுத்தும் அதேவேளையில், விவசாயத்தை அழிக்காமல் வரக்கூடிய தொழில் வளர்ச்சியையும் வரவேற்கவேண்டும்.

அதனால்தான் 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'என்று இரண்டையும் முன்னிறுத்தி பாடியிருக்கிறான் பாரதி.

மேலும் செய்திகள்