விதவிதமான பொங்கல் வகைகள்- செய்முறை
|பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை அன்று, பொங்கல் வைத்து அதனை படையலிட்டு வழிபடுவது மரபு. படையலுக்கான பொங்கல் இரண்டு வகைகளாக வைக்கப்படும். பச்சரிசி சாதத்தை குழைய வைத்து செய்யும் பொங்கல் ஒரு பானையிலும், சர்க்கரைப் பொங்கல் மற்றொரு பானையிலும் வைக்கப்படும்.
இதுதவிர வீட்டில் உள்ளவர்களின் டேஸ்ட்டுக்கு ஏற்ப பொங்கல் வகைகளை செய்வது வழக்கம். அவற்றில் சிலவற்றின் செய்முறைகளை பார்ப்போம்.
சர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
வெல்லம் – 2 கப்
ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
நெய் – 3 மேஜைக்கரண்டி/ தேவையான அளவு
முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
காய்ந்த திராட்சை – தேவையான அளவு
பச்சை கற்பூரம் – 1 சிட்டிகை
செய்முறை
பச்சரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு தேவையான அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைக்கவும். 4 விசில் வரும்வரை வேகவைத்துக்கொள்ளவும். பின்னர் தனியாக ஒரு பாத்திரத்தில் வெல்லம், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். வெல்லம் கரைந்து கொதித்த பிறகு தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர் வெல்லப்பாகுவை ஓரளவு கெட்டியாகும் வரை கொதிக்க வைக்கவும்.
இப்போது குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசிக்கவும். மசித்த சாதத்தில் வெல்லப்பாகு சேர்க்கவும். அடுத்து அரை தேக்கரண்டி அளவிற்கு ஏலக்காய் பொடியை அதில் சேர்க்கவும்.
தனியாக ஒரு சிறிய கடாயில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்து சர்க்கரை பொங்கலில் சேர்த்து கலக்கவும். பின்னர் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கலக்கவும். இறுதியாக ஒரு சிட்டிகை அளவிற்கு பச்சை கற்பூரம் சேர்த்து கலந்துகொள்ளவும். கோவிலில் வழங்கப்படும் டேஸ்ட்டான சர்க்கரை பொங்கல் ரெடி.
பால் பொங்கல்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
நெய் - 2 டீஸ்பூன்
வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்
பால் - 4 கப்
முந்திரி - 20
உலர் திராட்சை - 20
ஏலக்காய் பொடி - ஒரு டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் கழுவிய பச்சரிசியைப் போட்டு, அதில் ஒரு டீஸ்பூன் நெய் மற்றும் பாலை ஊற்றி குக்கரை மூடி, குறைவான தீயில் 3-4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
விசில் போனதும், குக்கரைத் திறந்து கரண்டியால் நன்கு கிளறி, பின் அதில் வெல்லம்/சர்க்கரையைப் போட்டு கிளறி, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து பொங்கலில் ஊற்ற வேண்டும். இறுதியில் 3-4 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான பால் பொங்கல் தயார்.
பால் பொங்கல் நன்கு குளிர்ந்த பின் மிகவும் கெட்டியாக இருப்பது போன்று இருந்தால், அதில் சிறிது சுடுநீர் அல்லது சூடான பாலை ஊற்றி கிளறிக் கொள்ளலாம்.
தினை சர்க்கரை பொங்கல்
பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. தினை சர்க்கரை பொங்கல் ஒரு ஆரோக்கியமான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
தினை- 100 கிராம்
கடலைப்பருப்பு, பாசிபருப்பு தலா- 25 கிராம்
நெய்- 50 கிராம்
ஜாதிக்காய் பொடி- ஒரு சிட்டிகை
நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் தலா- ஒரு டீஸ்பூன்(தேவையான அளவு)
துருவிய கொப்பரை- 2 டீஸ்பூன்
வெல்லம்- 150 கிராம்
செய்முறை:
தினை மற்றும் பருப்பு வகைகளை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து தேவையான அளவு நீர்விட்டு குழைய வேகவைக்கவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தினை கலவையில் சேர்த்து பொங்கல் பதம் வரும் வரையில் கிளறி இறக்கவும். சூடான நெய்யில் ஜாதிக்காய் பொடி, துருவிய கொப்பரை சேர்த்து வறுத்து பொங்கலில் சேர்க்க வேண்டும். இறுதியாக வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்க்கவும்.
மசாலா பொங்கல்
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பட்டை, லவங்கம், கிராம்பு - சிறிதளவு
கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி - கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 கரண்டி
உப்பு - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு- சிறிதளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை லேசாக வதக்கி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.அரிசி, பாசிப்பருப்பை நன்றாக கழுவி 1 மணி நேரம் ஊற வைத்த பின்னர் தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு நெய் விட்டு இரண்டையும் சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம், கிராம்பு போட்டு தாளித்த பின்னர் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி, வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும். இஞ்சி - பூண்டு பச்சை வாசனை போனவுடன் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
அடுத்து ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் விட்டு, அதில் வறுத்த அரிசி, பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும் கடுகு, சீரகம், முந்திரிப் பருப்பு தாளித்துக் கொட்டவும். சுவையான மசாலாப் பொங்கல் தயார். இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளித்தொக்கு, ஊறுகாய் சூப்பராக இருக்கும்.
வரகு அரிசி கொள்ளு பொங்கல்
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 200 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 15 நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி, ஆறு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவேண்டும்.