< Back
சிறப்பு செய்திகள்
ஜல்லிக்கட்டு உருவானது எப்படி?
சிறப்பு செய்திகள்

ஜல்லிக்கட்டு உருவானது எப்படி?

தினத்தந்தி
|
13 Jan 2024 1:42 PM IST

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஒரு விழா போன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இந்த விளையாட்டு முன்பு ஏறு தழுவுதல் என்று குறிப்பிடப்பட்டது. பின்னர் ஜல்லிக்கட்டு என்று பெயர் மாற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டு என்பது உண்மையில் இரண்டு தமிழ் வார்த்தைகளான சல்லிக்காசு (காசுகள்) மற்றும் கட்டு (ஒரு தொகுப்பு) ஆகியவற்றின் கலவையாகும். முன்பு புழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து காளைகளின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. காளையை அடக்கி கொம்பில் கட்டப்பட்டிருக்கும் பொட்டலத்தை எடுக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் சல்லிக்கட்டு என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ஜல்லிக்கட்டு ஆகியிருக்கலாம்.

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக வருகிறது. பலம் வாய்ந்த காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் 'கொல்லேறு தழுவுதல்' என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.

தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஒரு விழா போன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. இதில், மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம்.

இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவைக் காண்பதற்காக நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் வருவார்கள்.

மேலும் செய்திகள்