பேனா மன்னன் பதில் சொல்கிறார்
|அரசியல், வாழ்வியல், கல்வி, சட்டம், நிதி போன்றவை குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும், கலகலப்பாகவும் பதில் அளிக்கிறார் பேனா மன்னன்.
கேள்வி: தமிழகத்தில் பா.ஜ.க. தாமரையை மலர வைப்பது, காங்கிரஸ் மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டு வருவது. இதில் எது முதலில் நடக்கும்? (அன்பழகன், அந்தணப்பேட்டை)
பதில்: இரண்டுமே அடுத்த தேர்தலில் நடக்குமா? என்பது சந்தேகமே...
கேள்வி: லெட்டர் பேடு கட்சிகள் தேர்தல் வரும்போது மட்டும் கண்ணில் படுகின்றன. மற்ற நேரங்களில் என்ன செய்கிறார்கள்? (டி.சம்பத்குமார், ஒரகடம்)
பதில்: தேர்தல் எப்போது வரும், நாலு காசு பார்க்கலாம் என்று இலவு காத்த கிளியாக காத்து இருக்கும்.
கேள்வி: முதுகெலும்புக்கும், தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்? (ஆர்.ஹரிகோபி, டெல்லி)
பதில்: குனியாமல் இருப்பதை குறிக்கவே முதுகெலும்பு குறியீடு.
கேள்வி: காதலி, மனைவி. இதில் யாரை உப்பு மூட்டை தூக்கி விளையாடலாம்? (எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்)
பதில்: இருவரையும் தூக்கி விளையாடலாம். அப்படி விளையாடும்படி தொடர்ந்து அன்பும், நேசமும் இருந்தால் அதுவே உயர்ந்த தாம்பத்தியம்.
கேள்வி: இரண்டாயிரம் ரூபாய் திரும்ப பெற்றதால் யாருக்கு பாதிப்பு? (சா.சொக்கலிங்கம், ரோஸ்மியாபுரம்)
பதில்: எல்லோருக்கும் பாதிப்பு என்றாலும், கருப்பு பணம் வைத்து இருந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு.
கேள்வி: ஒடிசா ரெயில் விபத்துக்கு வழக்கம் போல சிக்னல் குறைபாடே காரணம் என்கின்றனரே, அதை முன்கூட்டியே கண்டுபிடித்திருக்க முடியாதா? (ப.சோமசுந்தரம், கோவிலம்பாக்கம்)
பதில்: சிக்னல் குறைபாட்டை கண்டுபிடித்து இருந்தால் விபத்தே நடந்து இருக்காதே...
கேள்வி: சென்னை மெரினாவில் தலைவர்களுக்கு சமாதி அமைக்கப்படுகிறது. அதேபோல தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் நினைவாக ராக்கெட் சின்னத்துடன் நினைவிடம் அமைக்காதது ஏனோ? (டி.கே.மோகன், விருகம்பாக்கம்)
பதில்: நல்ல யோசனை. ராமேசுவரத்தில் அவர் நினைவிடத்தில் வைக்கலாம்.
கேள்வி: துரோகி - விரோதி. இருவரில் யாரை மன்னிப்பது? யாரை தண்டிப்பது? (சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி)
பதில்: விரோதியை மன்னிக்கலாம். துரோகியை ஒதுக்கலாம். புறக்கணிப்பை காட்டிலும் பெரிய தண்டனை இருக்க முடியாது.
கேள்வி: ரகசியம், பரம ரகசியம். என்ன வித்தியாசம்? (எம். அசோக்ராஜா, திருச்சி)
பதில்: தனக்கு மட்டுமே தெரிந்தது பரம ரகசியம்.
கேள்வி: எல்லை மீறிய சுதந்திரம் ஆபத்தை விளைவிக்கும் என்பதை பெண்கள் எப்போது உணருவார்கள்? (எம்.செந்தில்குமார், நெசப்பாக்கம், சென்னை)
பதில்: அது ஆண்களும் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம்.
கேள்வி: வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து ரெய்டுக்கு செல்வது முறையா? (எஸ்.குமார், மணலூர்)
பதில்: கதவை திறக்கும் வரை காத்திருக்கலாம்.
கேள்வி: மக்கள் தொகையில் சீனாவை, இந்தியா விஞ்சி விட்டது உண்மையா? (குமரன், திருப்பூர்)
பதில்: ஆமாம். தொழில் வளர்ச்சியில் முந்தாவிட்டாலும், மக்கள் தொகையில் முந்திவிட்டோம்.
கேள்வி: அதிக வெயில் அடித்தாலும், அதிக மழை பெய்தாலும் உடனே பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்படுவதில்லையே, ஏன்? (வி.லோகநாதன், கிருஷ்ணகிரி)
பதில்: இளம் மலர்களால் இரண்டையும் தாங்க முடியாதல்லவா? அதற்குத்தான்.
கேள்வி: நகை வாங்கும்போது சேதாரத்துக்கான பணம் வாங்குகிறார்கள். ஆனால் சேதாரமான தங்கத்தை நமக்கு திருப்பி தருவதில்லையே... இது என்ன நியாயம்? இதை யாரும் கேட்பதில்லையே... (எஸ்.மலர்விழி, தேனி)
பதில்: செய்கூலி என்று தனியாக போடாமல், சேதாரம் என்று எடுத்து கொள்கிறார்கள். ஆனால் சேதாரமும் சற்று ஆகும்.
கேள்வி: பின்புற கண்ணாடியை மட்டும் பார்த்து இந்தியா என்ற காரை பிரதமர் நரேந்திர மோடி ஓட்டுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன என்று அமெரிக்காவில் ராகுல்காந்தி பேசி உள்ளாரே? (பாரதிமுருகன், மணலூர்பேட்டை)
பதில்: பின்புற கண்ணாடியை பார்த்து ஓட்டாவிட்டாலும் விபத்து ஏற்படுமே!
கேள்வி: தர்மம் தலையை மட்டும்தான் காக்குமா? (எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி)
பதில்: தக்க சமயத்தில் உயிரையும் காக்கும்.
கேள்வி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பானில் புல்லட் ரெயிலில் பயணம் செய்ததற்கு அண்ணாமலை டிக்கெட் கேட்கிறாரே? (எல்.கண்ணன், நங்கவள்ளி)
பதில்: டிக்கெட் எடுக்காமல் புல்லட் ரெயிலில் மட்டுமல்ல, ரெயில் நிலையத்துக்குள்ளேயே போயிருக்க முடியாதே...
கேள்வி: எதிரியை நண்பனாக்கி கொள்ள வழி என்ன? (சம்சுதீன் புஹாரி, திரேஸ்புரம்)
பதில்: முதலில் நாம் கை கொடுக்க கைகளை நீட்டினால் குத்த வருகிற கையும் கை குலுக்க வரும்.
கேள்வி: மங்கையர் கூந்தலில் மலர் சூடுவது ஏன்? (பி.கனகராஜ், அரசரடி, மதுரை)
பதில்: அவர் கூந்தலுக்கும் மணம் சேர்க்கும். அதில் முகம் புதைப்போருக்கும் மணம் வீசும்.