< Back
சிறப்பு செய்திகள்
புதிய நாடாளுமன்ற சுவரில் பிரிக்கப்படாத இந்தியா  ஓவியம்...!  வரிந்துகட்டும் அண்டை நாடுகள்...!
சிறப்பு செய்திகள்

புதிய நாடாளுமன்ற சுவரில் 'பிரிக்கப்படாத இந்தியா' ஓவியம்...! வரிந்துகட்டும் அண்டை நாடுகள்...!

தினத்தந்தி
|
7 Jun 2023 6:10 PM IST

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் அண்டை நாடுகளிடமிருந்து எதிர்வினையை தூண்டி உள்ளது.

புதுடெல்லி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் "பிரிக்கப்படாத இந்தியாவை" காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளது தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த "பிரிக்கப்படாத இந்தியா" சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளதேசம், பூட்டான், மாலத்தீவுகள், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ள நாடுகளைக் காட்டுகிறது.

இந்த சுவரோவியம் பண்டைய மவுரியப் பேரரசைக் காட்டுகிறது என்றும், அது "மக்கள் சார்ந்த" ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிக்கிறது என்றும், "அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லை" என்றும் இந்திய சார்பில் கூறப்பட்டு உள்ளது.

ஓவியம் என்பது தெளிவாக உள்ளது அகண்ட பாரதம் என்று புதிய நாடாளுமன்றத்தின் பதவியேற்பு நாளில் இந்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி டுவீட் செய்து இருந்தார்.


வங்காள தேச அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சுவரோவியம் பற்றிய விளக்கத்தை பெறுமாறு டெல்லியில் உள்ள தனது தூதர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது.

இது வங்காள தேசம் மற்றும் பாகிஸ்தானால் "விரிவாக்க மனப்பான்மை" யின் ஒரு பகுதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

வங்காள தேச வெளியுறவுத்துறை இணை மந்திரி ஷஹ்ரியார் ஆலம், இந்த விஷயத்தில் மேலும் விளக்கம் பெறுவதற்காக தனது அமைச்சகம் டெல்லியில் உள்ள அதன் தூதர்களுக்கு உத்தரவிட்டதாக கூறினார்.

அந்த ஓவியத்தின் மீது பரவலான கோபம் உள்ளது," என்று ஆலம் கூறினார். மேலும் இதுகுறித்து சந்தேகம் தெரிவிக்க எந்த காரணமும் இல்லை. எவ்வாறாயினும், இது குறித்து தெளிவுபடுத்துவதற்காக, அவர்களின் அதிகாரப்பூர்வ விளக்கம் என்ன என்பதை அறிய இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் பேசுமாறு டெல்லியில் உள்ள தூதரகத்தை நாங்கள் கேட்டுள்ளோம், "என்று அவர் கூறினார்.

பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மும்தாஜ் பலூச்சும் சுவரோவியம் குறித்த கவலைகளை எழுப்பினார் மேலும் ஜோஷியின் கருத்துக்களால் பாகிஸ்தான் திகைத்து உள்ளது" என கூறினார்.

"அகண்ட பாரதம்" என்ற தேவையற்ற கூற்று, இந்தியாவின் அண்டை நாடுகளின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் அடிபணியச் செய்யும் மற்றும் விரிவாக்க மனநிலையின் வெளிப்பாடாகும்," என்று அவர் கூறினார்.

இந்த சுவரோவியத்திற்கு நேபாளமும் எதிர்ப்புகளை காட்டி உள்ளது.

தன்னை ஒரு பழமையான ஜனநாயகத்தின் முன்மாதிரியாக கருதும் இந்தியா போன்ற ஒரு நாடு நேபாள பகுதிகளை தனது வரைபடத்தில் வைத்து நாடாளுமன்றத்தில் ஓவியத்தை தொங்கவிடுவது பொருத்தமானதாக கருத முடியாது என்று நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி கூறினார்.

மேலும் செய்திகள்