< Back
சிறப்பு செய்திகள்
லியோ, ஜெயிலர் முதல் போர் தொழில் வரை 2023-ல் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்கள்..!
சிறப்பு செய்திகள்

லியோ, ஜெயிலர் முதல் போர் தொழில் வரை 2023-ல் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்கள்..!

தினத்தந்தி
|
28 Dec 2023 8:20 AM IST

2023-ம் ஆண்டு 300-க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியாகின.

2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. ஏனெனில், தமிழில் வெளியான பெரும்பான்மையான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தன. மேலும், விமர்சன ரீதியாகவும் பெரும்பாலான திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெற்றன. 2023-ம் ஆண்டு 300-க்கும் அதிகமான திரைப்படங்கள் தமிழில் வெளியாகின. இந்த நிலையில் இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்களை பார்ப்போம்.

லியோ:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியானது 'லியோ' திரைப்படம். இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. உலக அளவில் சுமார் ரூ.620 கோடிக்கும் மேல் வசூலித்த 'லியோ' திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உள்ளது. 'லியோ' திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

'லியோ' டிரைலர்:

ஜெயிலர்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் என பான் இந்தியா நட்சத்திரங்களுடன் வெளியான இந்த திரைப்படம் அதிரடி மாஸ் காட்சிகளால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.615 கோடிக்கு மேல் வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெயிலர்' திரைப்படம் காணக் கிடைக்கிறது.

'ஜெயிலர்' டிரைலர்:


பொன்னியின் செல்வன் பாகம் 2:

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக 'பொன்னியின் செல்வன்' பாகம் இரண்டு இந்த ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர்.


முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது குறைவான வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த திரைப்படம் 2023-ம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. 'பொன்னியின் செல்வன் - 2' திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

'பொன்னியின் செல்வன் - 2' டிரைலர்:


வாரிசு:

நடிகர் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான திரைப்படம் 'வாரிசு'. வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்த இந்த படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


பிரம்மாண்டமான சீரியல் பார்ப்பது போல இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்தபோதும் 'வாரிசு' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.310 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 'வாரிசு' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

'வாரிசு' டிரைலர்:


துணிவு:

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்துடன் வெளியானது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய், அஜித் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதின. வங்கிகளின் அத்துமீறல்களை பற்றி பேசியிருந்த இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.



உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிசில் சுமார் ரூ.220 கோடிக்கு மேல் வசூலித்த 'துணிவு' திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த 5-வது தமிழ்ப் படமாகும். இந்த படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

'துணிவு' டிரைலர்:


வாத்தி:

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி' திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியிருந்தார். அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசியிருந்த இந்த திரைப்படத்தில் சம்யுக்தா, சாய் குமார், சமுத்திரக்கனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


'வாத்தி' திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

'வாத்தி' டிரைலர்:


மார்க் ஆண்டனி:

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. டைம் டிராவல் படங்களில் இருந்து சற்று மாறுபட்டிருந்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் அதன் ஜாலியான திரைக்கதையால் நல்ல வரவேற்பை பெற்றது.


உலக அளவில் சுமார் ரூ.110 கோடி வரை வசூலித்த இந்த திரைப்படம் 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காண முடியும்.

'மார்க் ஆண்டனி' டிரைலர்:


மாவீரன்:

'மண்டேலா' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ந்தேதி வெளியான திரைப்படம் 'மாவீரன்'. குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசிய இந்த படத்தில் அதிதி ஷங்கர், மிஷ்கின், சுனில், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.90 கோடி வரை வசூல் செய்தது. 'மாவீரன்' திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

'மாவீரன்' டிரைலர்:


மாமன்னன்:

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'.


அரசியலில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து பேசியிருந்த இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் சுமார் ரூ.75 கோடிக்கும் மேலாக வசூலித்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'மாமன்னன்' திரைப்படம் உள்ளது.

'மாமன்னன்' டிரைலர்:


போர் தொழில்:

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி வெளியான திரைப்படம் 'போர் தொழில்'.


திரில்லர் திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தளித்த இந்த திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வரை வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. 'போர் தொழில்' திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் காணலாம்.

'போர் தொழில்' டிரைலர்:


வரவேற்பை பெற்ற அறிமுக இயக்குனர்களின் திரைப்படங்கள்:

மேலும், இந்த ஆண்டில் வெளியான அறிமுக இயக்குனர்களின் சில திரைப்படங்கள் எதிர்பாராத வெற்றியை பெற்றன. அந்த வகையில் கவின், அபர்ணா தாஸ் நடித்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் வெளியான 'டாடா' திரைப்படம், சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி நடித்து ஆர்.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான 'அயோத்தி' திரைப்படம், 'ஜெய்பீம்' மணிகண்டன், மீதா ரகுநாத் நடித்து விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான 'குட்நைட்' திரைப்படம் உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன.

மேலும் செய்திகள்