இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்..! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..!
|பெண் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஒருகாலத்தில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, பெண்ணடிமை தலைதூக்கி இருந்தது. பெண் குழந்தைகள் என்றாலே குடும்பத்திற்கு சுமையாக பார்க்கப்பட்டது. இதனால் பெண்ணியம் சார்ந்து பலரும் கருத்துக்களை முன்வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனால் காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டது. பெண்ணை அடிமையாக பார்த்த சமூகம் மாறி வருகிறது. எனினும் பெண் குழந்தைகள் மீதான எண்ணம் முழுமையாக மாறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்னும் குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை போன்ற கொடுமைகள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன.
எனவே, பெண் குழந்தைகளுக்கான உரிமைகளையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை தொடர்ந்து ஆணித்தரமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது. பெண் குழந்தைகள் மீது இன்னும் அக்கறை காட்டவேண்டும். இதற்காக அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. "பெண் குழந்தைகளின் உரிமைகளில் அக்கறை காட்டுங்கள். எங்கள் தலைமை, எங்கள் நல்வாழ்வு" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள்.
இந்நாளில் உலகெங்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட மற்றும் மருத்துவ உரிமைகள், பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும் இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும் சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும் இந்நாளில் அரசாங்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன.
காலம் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்று சொல்வார்கள். அதை உறுதி செய்யும் வகையில், இன்றும் பல்வேறு பகுதிகளில் பெண் குழந்தைகள் மீதான வன்மங்களை காண முடிகிறது. எனவே, பெண்கள் தங்கள் உரிமைகளை உணர்ந்து முழுத் திறனையும் அடைவதற்கான பணிகளில் அதிக கவனம் செலுத்துவதும், அதற்கான ஆதாரங்களை வழங்குவதும் அவசரத் தேவையாக உள்ளது.