< Back
சிறப்பு செய்திகள்
கல்வெட்டுகள் உதிர்க்கும் சுதந்திர தின நினைவலைகள்
சிறப்பு செய்திகள்

கல்வெட்டுகள் உதிர்க்கும் சுதந்திர தின நினைவலைகள்

தினத்தந்தி
|
15 Aug 2023 4:46 PM IST

இந்திய சுதந்திர போராட்டம் உச்சத்தில் இருந்தது. அப்போது மகாத்மா காந்தி நாடு முழுவதும் பயணித்து தன் அகிம்சா கொள்கைகளை பிரசாரம் செய்து போராட்டத்தை முன்னெடுத்தார். இதற்காக தமிழகத்தில் கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து மக்களை திரட்டினார். பொள்ளாச்சியில் திருவள்ளுவர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் மகாத்மா காந்தி பிரசாரம் செய்தார். பின்னர் அவர் ராஜாமில் ரோட்டில் உள்ள பொன்னுச்சாமி காளிங்கராயர் என்பவரது வீட்டில் தங்கி உணவு அருந்தியிருக்கிறார். தற்போது அந்த வீடு இருந்த இடத்தில், ஒரு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. மகாத்மா காந்தி அந்த வீட்டில் தங்கி சென்றதன் நினைவாக, வங்கியின் நுழைவு வாயிலில் ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளது. அதில் '1927-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந் தேதி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பிரசாரம் செய்த மகாத்மா காந்தி, பொன்னுச்சாமி காளிங்கராயர் வீட்டில் தங்கிச் சென்றார்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து வீட்டு உரிமையாளரான ராஜ்குமார் காளிங்கராயர் கூறுகையில், "விவசாயியான எங்கள் தாத்தா பொன்னுச்சாமி காளிங்கராயர் தீவிர ஆன்மிகவாதி ஆவார். சுதந்திரப் போராட்டத்திற்கு பொள்ளாச்சிக்கு சுற்றுப்பயணம் வந்த மகாத்மா காந்தியை எங்களுக்கு சொந்தமான வீட்டில் தங்க வைத்தார்" என்றார்.

பொள்ளாச்சியில் இருந்து மகாத்மா காந்தி ரெயிலில் செல்லும் போது கோமங்கலத்தில் ஒரு மரக்கன்று நட்டு வைத்தார். அந்த மரம் தற்போது வரை பராமரிக்கப்பட்டு, அதற்கான கல்வெட்டும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் சார்பில் கொல்லப்பட்டி கிராமத்திலும் சுதந்திர போராட்டம் தொடர்பான கல்வெட்டு வைக்கப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி ஒருமுறை போத்தனூரில் இருந்து பொள்ளாச்சிக்கு ரெயிலில் வந்தார். வழியில் கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ரெயில் நிலையங்களில் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, பண முடிப்புகளையும் வழங்கினர். இதனால் பொள்ளாச்சி சந்தையில் நடந்த கூட்டத்திற்கு அவர் தாமதமாக வந்தார். அங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மகாத்மா காந்தியின் பேச்சை கேட்பதற்கு திரண்டு இருந்தனர். கூட்டத்தில் பொள்ளாச்சி விஸ்வகர்மா மக்களின் சார்பில் விஸ்கர்மா சங்கத்தினர் வெள்ளியால் செய்யப்பட்ட ராட்டையை கொடுத்தனர்.

1972-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெள்ளி விழாவை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடியது. அதன் ஒரு பகுதியாக ஊராட்சி ஒன்றியம்தோறும் ஒரு பள்ளியை தேர்வு செய்து நினைவு தூண் நிறுவியது. அந்த தூணில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற தியாகிகளின் பெயர், தண்டனை விவரம் பொறிக்கப்பட்டது.

அதன்படி ரெட்டியாரூரில் என்.ஜி.என்.ஜி. அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ள நினைவு தூணில் தெற்கு ஒன்றிய பகுதிகளை சேர்ந்த தியாகிகளின் பெயர், தண்டனை குறித்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன. ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த யு.கே. சண்முகம், 2 ஆண்டுகள் தண்டனையும், கரட்டுபாளையம் ராமசாமி கவுண்டர் ஓராண்டு தண்டனையும், லட்சுமாபுரம் கோவிந்தராஜூலு 1½ ஆண்டுகள் தண்டனையும், அகிலாண்டாபுரம் வி.கே.முத்துசாமி ஓராண்டு தண்டனையும், லட்சுமாபுரம் கோபால்சாமி ஓராண்டு தண்டனையும் பெற்றதாக உள்ளது. இந்த நினைவு தூண் தற்போது வரை பள்ளி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுதந்திர தின விழாக்களின்போது மாணவ-மாணவிகள் அந்த நினைவு தூணுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்