காளான் வளர்ப்பில் அதிக லாபம்
|கொரோனா காலத்திற்கு பிறகு, காளான் மக்களின் உணவுகளில் அதிகம் இடம் பிடித்துள்ளது. பல்வேறு சத்துக்கள் இதிலுள்ள சூழலில், இதன் தேவையும் சந்தையில் அதிகம் உள்ளன. காளான் வளர்ப்பை முழுநேர அல்லது பகுதி நேர தொழிலாக யார் வேண்டுமானலும் செய்ய முடியும். வீட்டில் காலியிடம் இருந்தால் அதன் வாயிலாகவே ஒரு வருமானத்தை தாராளமாக ஈட்டலாம்.
இத்தொழிலில், 200 சதுர அடி இடத்தில் தினமும் மூன்று முதல் ஐந்து கிலோவும், 1,000 சதுர அடியில் 15 முதல் 20 கிலோவும் காளான் உற்பத்தி செய்யலாம். ஒரு கிலோ காளான் சராசரியாக, 170 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ராசாயனங்கள் எதும் இன்றி உற்பத்தி செய்யப்படுவதால், இதனை பலர் விரும்பி உண்கின்றனர். இதன் தேவை அதிகம் உள்ளதால், எளிதாக சந்தைப்படுத்தலாம். சிறிய அளவில் வீடுகளில் தொழில் செய்பவர்களாயின் அண்டை வீடுகளுக்கு கொடுக்கவே சரியாக இருக்கும். சற்று பெரிய அளவில் செய்தால், சூப்பர் மார்கெட், அப்பாட்மெண்ட், ரெஸ்டாரண்ட் போன்றவற்றுக்கு விற்பனை செய்யலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் ஒவ்வொரு மாதமும், 5ம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தவிர, மூன்று நாள், ஐந்து நாள் பயிற்சி, ஆன்லைன் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதனை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உரிய வழிகாட்டுதலுடன் இத்தொழிலை துவங்கினால், கட்டாயம் நல்ல லாபத்தை ஈட்ட முடியும். குறிப்பாக, வீடுகளில் உள்ள மகளிர், வீட்டின் ஒரு பகுதியில் காளான் வளர்ப்பு தொழிலை மேற்கொள்ளலாம்.
மாடியில் இடம் இருப்பவர்களும் இத்தொழிலை உரிய வழிகாட்டுதல் பெற்று முயற்சிக்கலாம். காளான் வளர்ப்பின் போது, ஈரப்பதத்தை பாதுகாக்கும் வகையில் நிலத்தில் அடிக்கடி தண்ணீர் ஊற்றப்படுவது வழக்கம். மாடியில், தண்ணீர் ஊற்றும் பட்சத்தில் கட்டடம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கு முன்னேற்பாடுகள் செய்த பின், முயற்சிக்கலாம்.
வீட்டில் வளர்ப்பு முறை
வீட்டில் குறைந்தபட்சம், 200 சதுர அடி கொண்ட அறை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். சூரிய ஒளி நேரடியாக படும் படி இருக்க கூடாது. பெரிய செலவுகள் இன்றி, சாதாரண கூரை பயன்படுத்தி குடில் ஆகவும் அமைக்கலாம். நன்கு ஊற வைத்த வைக்கோலை பாலீத்தின் கவரில் அழுத்தி, அதன் மேல் ஐந்து அடுக்கு முறையில் விதைகளை துாவவேண்டும்; அதன் பின் கவரை இறுக்க கட்டி, ஆங்காங்கே துளையிட்டு தொங்கவிட்டுவிடவேண்டும். அதன் பின், தேவையான தண்ணீர் மட்டும் தெளித்து இடத்தை துாய்மையாக பராமரித்து வந்தால் போதுமானது. 2025 நாட்களில் காளான் அறுவடைக்கு தயாராகிவிடும். குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பின் அறுவடை செய்து டப்பாக்களில் அடைத்து விற்பனைக்கு கொண்டு வந்துவிடலாம். இந்தியாவில், சிப்பி மற்றும் பால் காளான்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகின்றன. பால் காளானை காட்டிலும், சிப்பி காளான் சாகுபடி செய்வதும், சந்தைப்படுத்துவதும் எளிது.
மதிப்பு கூட்டல்
காளான் வளர்த்து அதனை, நேரடியாக உணவுக்கு கொடுக்காமல் ஊறுகாய், சூப் மிக்ஸ், சாறு பிழிதல், ஊறுகாய், பக்கோடா என மதிப்பு கூட்டி விற்றால் கூடுதல் லாபம் பெற முடியும்.
மருத்துவ காளான்
காளான் மூலம் மருந்துகளுக்கு தேவையான மூலக்கூறுகள் பிரித்தெடுக்கும் ஆராய்ச்சிகள் பரவலாக நடந்துவருகின்றன. சர்க்கரை நோய் மருந்துகளில் பயன்படுத்த காளான் பொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ப்பு முறை சரியாக தெரிந்துகொண்டால் எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளன.